வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக்' என்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது !18 வீரர்கள் பலி

மும்பை:மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, "ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக்' என்ற, பிரமாண்ட நீர்மூழ்கி கப்பல் திடீரென, தீப்பிடித்து, வெடித்துச் சிதறி, கடலுக்குள் மூழ்கியது. இதில் இருந்த, 18 வீரர்கள், பலியாயினர். இந்த விபத்து, இந்திய கடற்படைக்கு, மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.நம் கடற்படைக்கு சொந்தமான, போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள், பெரும்பாலும் ரஷ்யாவிடமிருந்து தான் வாங்கப்படுகின்றன. இதே போல், ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட, ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக் என்ற, பிரமாண்ட நீர்மூழ்கி கப்பல், மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில், கடற்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள், 18 பேர் இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், சிந்துரக்ஷக் கப்பல், திடீரென பலத்த சத்தத்துடன், வெடித்து, தீப்பிடித்தது. 18 வீரர்கள் பலி:இதனால், அந்த பகுதி முழுவதும், புகை மண்டலம் சூழ்ந்து, கப்பல் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், பல அடி உயரத்துக்கு, தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்பு படையினர், அங்கு விரைந்தனர். கப்பல் நிறுத்தப்பட்டிருந்த பகுதியை, அவர்களால் நெருங்க முடியவில்லை.சிறிது நேரத்தில், கப்பலின் ஒவ்வொரு பாகமும், வெடித்துச் சிதறின. கப்பலின் சிறிய பகுதி மட்டுமே, வெளியில் தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில், கப்பல் முழுவதும், கடலில் மூழ்கியது.
நள்ளிரவில், விபத்து ஏற்பட்டதும் பரவிய தீ, அதிகாலையில் தான், முழுவதுமாக அணைந்தது.தீ விபத்து ஏற்பட்டதும், அதில் இருந்த வீரர்கள், கடலில் குதித்து தப்பிவிட்டதாக, முதலில், உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அவர்களை தேடும் பணி, முடுக்கி விடப்பட்டது. ஆழ் கடல் நீச்சல் வீரர்களும், தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். யாரும் மீட்கப்படவில்லை. இதையடுத்து, 18 வீரர்களும், விபத்தில் பலியாகி விட்டதை, ராணுவ அமைச்சர் அந்தோணி உறுதி செய்தார்.விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மத்திய அரசு வட்டாரங்கள் பரபரப்படைந்தன. ராணுவ அமைச்சர் அந்தோணி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, விபத்து பற்றிய தகவலை கூறினார். இதன் பின், அந்தோணியும், கடற்படை தளபதி, டி.கே.ஜோஷியும், மும்பை சென்றனர்.

உள்நாட்டு தயாரிப்பு:

இந்த விபத்து குறித்து, விரிவான விசாரணைக்கு, இந்திய கடற்படையும், கப்பல் வாரியமும் தனித் தனியே உத்தரவிட்டுள்ளன. முதல் கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பலின் மேல் தளத்தில், நீர் மூழ்கி குண்டுகள், ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த பகுதியில் தீப்பற்றியதால் தான், பெரிய அளவில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கை:
விபத்துக்குள்ளான கப்பலில், பேட்டரி உள்ளிட்ட சில பாகங்களில் குறைபாடுகள் இருந்தன. இதை சரி செய்வதற்காக, இந்த கப்பல், சமீபத்தில் ரஷ்யா கொண்டு செல்லப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்து, நான்கு மாதங்களுக்கு முன் தான், மும்பை திரும்பியது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சர் அந்தோணி கூறுகையில், ""நீர்மூழ்கி கப்பல் விபத்து, மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்து, இந்திய கடற்படைக்கு ஏற்பட்ட, மிகப் பெரிய துயர சம்பவம்,'' என்றார்.

"ஐ.என்.எஸ்., விக்ரந்த்' என்ற, முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல், இரண்டு நாட்களுக்கு முன் துவக்கப்பட்டது. இந்த பெருமைக்குரிய சம்பவம் நடந்த, அடுத்த இரண்டு நாட்களிலேயே, இந்த துயர சம்பவம் நடந்துள்ளது, கடற்படைக்கு ஏற்பட்ட, மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

ரஷ்யா பதில்:

விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்த ரஷ்ய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சிந்துரக்ஷக் கப்பலில், சமீபத்தில் தான், சில பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கப்பலின் பாதுகாப்புக்காக, சில அதிநவீன தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.கப்பல் செல்லும் திசையில், திமிங்கிலங்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் ரேடார் பொருத்தப்பட்டது. கப்பல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, சில நிபுணர்கள், மும்பை சென்றிருந்தனர். விபத்து நடந்தபோது, இவர்கள் ஓட்டலில் இருந்ததால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடலுக்குள் 45 நாள் இருக்கும்:

*இந்திய கடற்படையில், "சிந்து' வகை நீர்மூழ்கி கப்பல்கள், 10 உள்ளன. அவற்றில் ஒன்று தான், "சிந்துரக்ஷக்' கப்பல். இவை அனைத்துமே, ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டவை.
*விபத்துக்குள்ளான, சிந்துரக்ஷக் கப்பல், ரஷ்யாவின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள, மிகப் பெரிய கப்பல் கட்டும் தளமான, "அட்மிராலிடி' தளத்தில்,
வடிவமைக்கப்பட்டது.
*கடந்த, 1997ல், ரஷ்யாவிலிருந்து, இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த கப்பல், 238 அடி நீளமும், 2,325 டன் எடையும் கொண்டிருந்தது.
*கடலுக்கு அடியில், 300 மீட்டர் வரை, மூழ்கும் திறன் இந்த கப்பலுக்கு இருந்தாலும், வழக்கமாக, 240 மீட்டர் ஆழத்தில் தான் செல்லும்.
*கடலுக்குள் மூழ்கியபடி, மணிக்கு, 31 கி.மீ., வேகத்திலும், கடலின் மேற்புறத்தில், மணிக்கு, 17 கி.மீ., வேகத்திலும் செல்லும் திறனுடையது.
*இந்த கப்பலில், "கிளப் - எஸ்' வகை உட்பட, கடலுக்கு அடியில் சென்று, எதிரிகளின் கப்பல்களை தாக்கும், ஏராளமான ஏவுகணைகள் இருந்தன.
*நீருக்குள் மூழ்கியபடி, தொடர்ந்து, 640 கி.மீ., வரை, இந்த கப்பலில் பயணிக்கலாம். இதன்பின், ஆக்சிஜன் நிரப்புவது மற்றும் சோதனைக்காக, கடலின் மேற்பரப்புக்கு
வர வேண்டும்.
*இதில், 52 வீரர்கள் பயணிக்க முடியும். தொடர்ந்து, 45 நாட்கள், கடலுக்குள்ளேயே இருந்து, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை ஆற்றும் திறன், இந்த கப்பலுக்கு உள்ளது.
*எரிபொருள் நிரப்புவதற்காகவும், உணவுப் பொருட்கள் தேவைக்காகவும், 45 நாட்களுக்கு ஒருமுறை, கரையில் உள்ள தளத்துக்கு வர வேண்டும்.
*பிரமாண்டமான பேட்டரிகள் மற்றும் டீசலால், இந்த கப்பல் இயங்கும்.
*பேட்டரி உள்ளிட்ட சில கருவிகளில் பழுது ஏற்பட்டதால், சமீபத்தில், ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, 488 கோடி ரூபாய் செலவில், பழுது பார்க்கும் பணிகள் நடத்தப்பட்டன.
*கடந்த, 2010ல், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, இந்த கப்பலில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்துக்கான காரணம்:

கடற்படை தளபதி விளக்கம்கடற்படை தளபதி டி.கே. ஜோஷி கூறியதாவது:இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான விளக்கம், தற்போது இல்லை. கப்பலின் ஒரு பகுதியில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ, மற்ற பகுதிகளுக்கு பரவியதால், வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாக, கப்பலுக்குள் கடல் நீர் புகுந்து, கடலுக்குள் முழுவதுமாக மூழ்கிவிட்டது. விபத்துக்கு, சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்ற செய்தியை முழுவதுமாக மறுக்க முடியாது. ஆனாலும், முதல் கட்ட விசாரணையில், சதிச் செயல் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.இவ்வாறு ஜோஷி கூறினார்.

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி, ஏ.கே.சிங் கூறுகையில், ""சிந்துரக்ஷக் கப்பலில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாகவோ, கப்பலை முறையாக கையாளததன் காரணமாகவோ, விபத்து ஏற்பட்டிருக்கலாம். கப்பலில் இருந்த, பிரமாண்ட பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக, ஹைட்ரஜன் உற்பத்தி செய்தபோது, விபத்து ஏற்பட்டு இருக்கலாம். ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு தீ பரவியதால், பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு விட்டது,'' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக