செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஜெயலலிதாவின் துரோகங்களை பட்டியலிட முற்பட்டால்! இன்னும் 170000 TV குடோனில் வீணாகிறது !

சென்னை: 'ஜெயலலிதா துரோகங்களை பட்டியலிட முற்பட்டால்
என்னவாகும்?' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: 'உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு, தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம், ஜெயலலிதா குற்றச்சாட்டு' என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை ஏடுகளிலே இன்று வெளிவந்துள்ளது. நான் எப்போது, எந்த தேதியில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்? ஜெயலலிதா தேதியை குறிப்பிட்டோ அல்லது ஏடுகளை குறிப்பிட்டோ சொல்ல முடியுமா?
ஜெயலலிதாவே தனது அறிக்கையில், 'தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது ஆதரிக்க போவதாகத் தெரிவித்துள்ளது' என்று கூறியிருக்கிறார். எனவே அந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய போது திமுக அதை எதிர்த்தது என்பதை அவரே ஒப்புக் கொண்டுவிட்டு, தற்போது அறிக்கையில் திமுக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறுகிறார்.


கடந்த மாதம் 7ம் தேதி அன்று செய்தியாளர்கள் என்னை சந்தித்து இதுகுறித்த கேள்வி எழுப்பிய போது, 'அந்த அவசர சட்டத்தில் சாதக பாதகங்கள் என்ன என்று பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படுகிற போது, திமுக சார்பில் எங்கள் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து பேசுவார்கள்’ என்று தெளிவாக சொல்லி இருக்கிறேன். இதற்கு பிறகு நான் எங்கேயாவது  உணவு பாதுகாப்பு மசோதா பற்றி பேசியிருக்கிறேனா? எழுதியிருக்கிறேனா?

மேலும், அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பல வாரங்களுக்கு பிறகு, 2 நாட்களுக்கு முன்புதான் அதாவது 2.8.2013 அன்றுதான் அந்த மசோதாவால் தமிழகத்துக்கு ஏற்பட கூடிய பாதகங்களை விளக்கி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருக்கிறார். முதல் அமைச்சரே இத்தனை நாட்களுக்கு பிறகு, அதன் பாதகங்களை எழுதும் போது, நான் எப்படி அந்த மசோதாவின் பாதகங்களை அறிந்து கொண்டு, மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்க முடியும்?

கடந்த 20.12.2011 அன்று இந்த மசோதா குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறி கொள்ளும் ஜெயலலிதா, உணவு பாதுகாப்பு சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது 6.5.2013, அதற்கு பிறகு 2.8.2013 அன்று பிரதமருக்கு எதிர்ப்பு கடிதம் எழுதுகிற வரை 3 மாதங்களாக தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் இந்த மசோதாவை எதிர்த்து பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதவில்லை. மூன்று மாதங்களாக வாய்மூடி இருந்ததே தமிழகத்துக்கு முதல்வர் செய்த மிகப் பெரிய துரோகம் அல்லவா?

Ôதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த மசோதாவை ஆதரித்து கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளனÕ என்று தன் அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். அதை பற்றி நான் விசாரித்த வரையில், டி.கே.எஸ். இளங்கோவனின் பாதி பேட்டியை மட்டும் குறிப்பிட்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை திமுக ஆதரிக்கும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் மூலமாக கருணாநிதி சொல்ல வைத்திருக்கிறார் என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறியிருப்பது எவ்வளவு அநாகரிகமான செயல்?

இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தது, என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது என்று நான் கூறியது, தெலங்கானா பிரச்னையில் அவசரப்பட கூடாது என்று நான் கருத்து தெரிவித்திருப்பது என இவை எல்லாம் மத்திய அரசை ஆதரிப்பதன் அடையாளமா? தமிழக டிஜிபி.யை பிரதமரின் பாதுகாவலர்கள் வரவேற்க விடாமல் தடுத்தது பற்றி கண்டனம் தெரிவித்திருக்கிறேனே, அது மத்திய அரசை ஆதரிப்பதன் அடையாளமா?
இதற்கு பிறகும் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து துரோகம், துரோகம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொள்வாரானால், யார் யார் எதற்காக என்னென்ன துரோகங்களை செய்தார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட முற்பட்டால் என்ன ஆகும்? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக