திங்கள், 1 ஜூலை, 2013

Saudi 75 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர்.

 இந்த நடவடிக்கையால் பாதிக்கப்போவது சவூதி கம்பனிக்களும்தான்.காரணம் அங்கு உடல்வருந்தி உழைப்பை கொடுப்பது நம்மவர்களே.இதை சவுதி உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.
துபாய்:சவுதி அரேபிய அரசின், புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றி வந்த, 75 ஆயிரம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து, இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ளனர். இவர்களை, பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான, அவசர ஏற்பாடுகளை
மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபியாவிலும், வேலைவாய்ப்பின்மை பிரச்னை, தலை தூக்கியுள்ளது. இதனால், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க, சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "நிதாகத்' என்ற புதிய சட்டத்தை, அமல்படுத்தியுள்ளது, இதன்படி, சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 10 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்தால், அங்கு, கண்டிப்பாக, உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் வேலையில் சேர்க்க வேண்டும்.புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும். இதனால், சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் படி, வேலையை தக்க வைத்துக்கொள்ள முடியாதவர்கள், விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள, மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம், நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.இதையடுத்து, முறையான, "ஒர்க் பெர்மிட்' மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக, சவுதி அரேபியாவில் தங்கியுள்ள, வெளிநாட்டினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கு, சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன், கடுமையான அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவர்கள், தண்டனையில் இருந்து தப்பி, தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்காக, கடைசியாக ஒரு வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சவுதி அரேபிய அரசு கூறியதாவது: சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள், சவுதியில் உள்ள, தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலமாக, அவசர சான்றிதழ்(இ.சி.,) பெற வேண்டும். அவற்றை சவுதி அதிகாரிகளிடம் கொடுத்து, அங்கிருந்து, தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான, விசாவை பெறலாம்.இவ்வாறு, சவுதி அரேபிய அரசு தெரிவித்தது.
சவுதி அரேபியாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, 20 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். சவுதி அரசின் புதிய சட்டத்தால், இவர்களில், ஐந்து லட்சம் பேர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், முறையான ஆவணங்கள் இல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், அங்கு பணியாற்றுகின்றனர். இவர்கள், தண்டனையிலிருந்து தப்பும் வகையில், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம், அவசர சான்றிதழ் அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. . இதற்காக, 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்இவர்களுக்கு, அவசர சான்றிதழ் கொடுக்கும் நடவடிக்கை, தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.இதுகுறித்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:முறையான ஆவணங்கள் இன்றி, சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இந்தியர்கள், இங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. எனவே, அவசர சான்றிதழுக்காக விண்ணப்பித்த இந்தியர்கள், தமாமில் உள்ள,"இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி'யில், தங்களுக்கான அவசர சான்றிதழ்களை, ஜூன், 30ம் தேதிக்குள் பெறும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.குறிப்பிட்ட நாளுக்குள், சான்றிதழை பெற முடியாதவர்கள், இன்று, ரியாத்தில் உள்ள, இந்திய தூதரகத்துக்கு நேரடியாகச் சென்று, சான்றிதழ்களை பெறலாம். இந்த சான்றிதழ்களை, சவுதி அரேபிய தொழிலாளர் துறை அலுவலகத்தில் அளித்து, இந்தியா திரும்புவதற்கான விசாவை பெறலாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், ஏராளமான இந்திய தொழிலாளர்கள் குவியத் துவங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில், சவுதி அரேபியாவில் உள்ள, இந்திய தூதரகம், இன்றிலிருந்து, வரும், 4ம் தேதி வரை, விடுமுறையின்றி தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக