செவ்வாய், 16 ஜூலை, 2013

டிசல் மண்ணெண்ணை கசிவு: குடிக்கவோ, குளிக்கவோ முடியாமல் தவிக்கிறோம்

சென்னை மணலியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை சென்னை துறைமுகத்துக்கு கப்பல் மூலம் வருகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கச்சா எண்ணை கொண்டு செல்லப்படும் இந்த குழாயில் கடந்த சில மாதங்களாக கசிவு ஏற்பட்டு உள்ளது. இது நிலத்தடி நீரில் கலப்பதால் குடிநீர் மாசுபட்டு உள்ளது. தண்டையார்பேட்டை, திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வரதராஜ கோவில் தெரு, பகுதியில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.
அங்கும் வசிக்கும் 100–க்கும் அதிகமான குடும்பங்கள் தண்ணீரை உபயோகப்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அமிலம் போன்று கறுப்பு நிறத்தில் உள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடம், வாளிகளில் அந்த தண்ணீரை பிடித்து வைத் தால் சிறிது நேரத்தில் கறுப்பு வண்ணமாக மாறி விடுகிறது. தண்ணீரில் எண்ணை பசையும், டிசல், மண்ணெண்ணை நெடியும் வீசுகிறது.

இந்த தண்ணீரில் துணியை நனைத்து தீ பற்ற வைத் தால் குபீர் என்று தீப் பிடித்து விடுகிறது. குடிநீர் தொட்டிகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசு கலந்து உள்ளது. அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர்.
குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த முடியாமல் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பாத்திரம் தேய்ப்பதற்கும் துணி துவைப் பதற்கு மட்டுமே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.
எண்ணை கலந்த தண்ணீர் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த வசந்தி கூறியதாவது:–
நிலத்தடி நீரில் எண்ணை கலந்து அமிலத் தன்மையானது பற்றி அதிகாரிகள் யாருமே கண்டு கொள்ளவில்லை. கடந்த 10 மாதமாக இந்த அவலம் நீடிக்கிறது.
குடிக்க தண்ணீருக்கே இந்த நிலை இருந்தால் எப்படி ஜீவிக்க முடியும். சொந்த வீட்டில் இருக்கும் எங்களுக்கே இந்த நிலை வாடகைக்கு இருப்பவர்கள் இங்கு வசிக்க பிடிக்காமல் வீட்டை காலி செய்கிறார்கள். பயனற்றுப் போன குடி தண்ணீரில் நாங்கள் கேன் வாட்டரை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. குளிப்பதற்கு கூட பயன் படுத்த முடியவில்லை. இந்த தண்ணீரில் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது.
செல்வி: இந்த பகுதியில் 80 அடிக்கு ஆழ்துளை கிணறு போட்டு உள்ளோம் 1 வருடத்துக்கு முன்பு வரை இந்த தண்ணீர் மிக அருமையாக இருந்தது. குடிநீருக்கும், சமையலுக்கும் அதனைதான் பயன்படுத்தினோம்.
இப்போது தண்ணீரில் எண்ணை கலந்து வருவதால் பயன்படுத்துவதற்கே பயமாக உள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம். அன்றாட குடும்ப பட்ஜெட்டில் இது கூடுதல் செலவு பிடிக்கிறது. நிலத்தடி நீரை சுத்தம் செய்து பார்த்தனர். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.
விஜயா: இந்த தண்ணீரில் குழந்தைகள் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். மக்களின் உயிர் நாடி பிரச்சினையான குடிநீரில் அலட்சியம் காட்டக் கூடாது.
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக இங்கு வருகிறார்கள். இப்போது பிரச்சினை எடுத்துக் கொண்டு சென் றால் ஓடிவிடுகிறார்கள். வசிப்பதற்கே தகுதியில்லாத இடமாக இந்த தண்டையார்பேட்டை பகுதி மாறிவிட்டது. பெரிய விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு இதனை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக