செவ்வாய், 9 ஜூலை, 2013

யாழ் மக்கள் பெரிய படிப்பாளிகள் என்பது கடந்த கால உண்மை! ஆனால் ? ஒரு தலைமுறையே படிப் பறிவை இழந்து நிற்கிறது

Jaffnacityஇலங்கையில் ‘துக்ளக்’ - 12
விரக்தியின் விளிம்பில் இலங்கைத் தமிழர்கள்
கட்டம் இடப்பட்ட செய்தி:
ஒரு தலைமுறையே படிப்பறிவை இழந்து விட்டது
இங்கிருக்கும் சிலர் யாழ்ப்பாணத்தை ‘ஒரு புனித நகரம்’ என்பது போல் பார்க்கிறார்கள். யாழ்ப்பாணம் ஒரு அழகான பசுமையான ஊர்தான். ஆனால், அதற்காக அது உலகின் மாதிரி (Model) நகரமல்ல. அங்கும் குடிகாரர்கள் இருக்கிறார்கள். மஞ்சள் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆளில்லா வீடுகளின் கதவு, ஜன்னல், ஓடுகளைக் களவாடிக் கொண்ட திருடர்கள் இருக்கிறார்கள். மோசடிப் பேர்வழிகள் இருக்கிறார்கள். மலையகத் தமிழர்களை, தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி ஏளனமாகப் பார்ப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். யாழ் மக்களுக்குள்ளேயே ஜாதியைப் பார்த்து அணுகும் குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அங்கும் அரசியல்வாதிகள் மோதிக் கொள்கிறார்கள். ஆகவே, தமிழகத்தில் உள்ள ஒரு நகரம் மாதிரி நல்லவர்களும், கெட்டவர்களும் கலந்து வாழும் நகரம்தான் யாழ்ப்பாணமும்.
யாழ் மக்கள் பெரிய படிப்பாளிகள் என்பது கடந்த கால உண்மை. ஆனால், புலிகள் தொடுத்த போர் காரணமாக ஒரு தலைமுறையே படிப் பறிவை இழந்து நிற்கிறது. புத்தகம் தூக்க வேண்டிய இளம் தலைமுறையைத் துப்பாக்கி தூக்க வைத்து விட்டதால், இன்று அமைதி திரும்பியும் கூட, மாணவர்களுக்குப் பாடம் போதிக்க போதுமான ஆசிரியர்கள் யாழ் பகுதியில் இல்லை. குறிப்பாக இங்கிலீஷ் டீச்சருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் குறிப்பிட்டார் யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த பேராசிரியை ஒருவர்.

“தமிழர்களில் ஆங்கில ஆசிரியர்களுக்குக் கடும் தட்டுப்பாடு உள்ளது. சிங்களர்களும் தமிழர் பகுதிக்கு வந்து பணிபுரியத் தைரியமில்லாமல் இருக்கிறார்கள். இதனால் அடுத்த தலைமுறையும் ஆங்கிலத்தில் புலமை பெற வாய்ப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது” என்று வருத்தப்பட்டார் அவர்.
‘இலங்கை தமிழர்களுக்காக இங்கு இவ்வளவு உணர்ச்சிவசப்படும் தமிழ் உணர்வாளர்கள் மலேஷியத் தமிழர்கள் ‘ஹிண்ட்ராஃப்’ என்ற அமைப்பு மூலமாக சம உரிமை கேட்டு அங்கு போராடியபோது இந்தளவு கொதிக்கவில்லை. காரணம், ஹிண்ட்ராஃப் அமைப்பு அங்கு தனிநாடு கேட்கவில்லை. அதை விட முக்கியம் அது அஹிம்சை முறையில் போராடியது. மலேஷிய அரசாங்கத்திற்கு எதிராகத் துப்பாக்கி தூக்கவில்லை. தமிழனின் ‘வீரம்’ அங்கு வெளிப்படவில்லை என்பதால் இவர்கள் கொதிக்கவில்லை.
இன்று அதே ஹிண்ட்ராஃப், ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளது. அரசால் தேடப்பட்டு, கைது செய்யப்பட்ட வேதமூர்த்தி இன்று அங்கு அமைச்சராகியுள்ளார். இதன் மூலம் தமிழர்களுக்கு முடிந்த அளவு சலுகைகளைப் பெற்றுத் தரமுடியும் என்று ஹிண்ட்ராஃப் நம்புகிறது. இதற்குப் பெயர் ‘சோரம் போவது’ அல்ல. இதுதான் ராஜதந்திரம். பலத்தைக் காட்டிப் பயமுறுத்தினார்கள். அவர்கள் சமரசத்திற்கு வரும்போது, அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால், இங்குள்ள தமிழ் உணர்வாளர்களுக்குச் சமரசம் தேவை இல்லை. தமிழனின் வீரம் என்னாவது! எங்கோ தமிழன் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும். அந்தத் தமிழனின் வீரத்தை இவர்கள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடிக் கொள்வார்கள். உயிரிழப்பு, உறவுகள் இழப்பு, அங்க இழப்பு, பொருள் இழப்பு... என்று எல்லா இழப்புகளையும் அங்கிருக்கும் தமிழன் அனுபவித்துக் கொள்வான்.
உயிர் என்பது எல்லோருக்கும் எவ்வளவு முக்கியமான விஷயம்? அதைத் தாண்டி, குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு பெற்றோர் ஆசைப்படுவது எவ்வளவு நியாயமானது? இலங்கையிலிருந்து சாரி சாரியாக அகதிகள் வெளியேறியது இதனால்தானே? ‘நாம் உயிர் பிழைக்க வேண்டும், குழந்தைகளைப் புலிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்’ என்ற இரு காரணங்களுக்காகத்தானே அங்கிருந்த மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள்? இதுதானே இயல்பான விஷயம்? அப்படி தப்பி வந்தவர்கள் எல்லாம் ‘வீரமில்லாத கோழைகள்’ என்று கூட, சில தமிழ் உணர்வாளர்கள் பட்டம் சூட்டக் கூடும். அந்தளவுக்கு இந்த விஷயத்தில் அவர்கள் மதி மயங்கிப் போயிருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் ‘நிரந்தரக் குடிவாசி’ (பி.ஆர்.) ஆவதற்காக, இன்றைக்கும் கூட ஏராளமான தமிழ் இளைஞர்கள் தலைகீழாக நின்று தவம் புரிகிறார்கள். ஆனால், அப்படி பி.ஆர். கிடைத்த பிறகு, இவர்களுக்கு ஒரு மகன் பிறந்து அவன் 18 வயதை நெருங்கினால் போதும்... ‘சிங்கப்பூரே வேணாம்டா சாமி’ என்று அலறியடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்து விடுவார்கள். (இப்படித் திரும்பி வந்த பல குடும்பங்களை எனக்குத் தெரியும்.) இதற்குக் காரணம், சிங்கப்பூரில் 18 வயது நிரம்பிய ஆண்கள் எல்லோரும் மூன்று வருடங்கள் கண்டிப்பாக ராணுவத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். இதற்குப் பயந்துதான் நமது தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்து விடுகிறார்கள். இத்தனைக்கும் சிங்கப்பூருக்குப் போர் அபாயம் என்பது துளியும் இல்லை. ஆனாலும், வீரத்தமிழன், மறத்தமிழன் என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் தமிழ்க் கூட்டம், மகனை மூன்று வருட ராணுவப் பயிற்சிக்கு அனுப்பப் பயந்து ஊர் திரும்பி விடுகிறது. இதுதான் யதார்த்தம். இதுதான் குழந்தைகள் மீது பாசமுள்ள பல பெற்றோரின் மனோநிலையாக இருக்கும். இதில் தவறு காண முடியாது.
இதே மனநிலைதான் ஈழத்தில் உள்ள பெற்றோருக்கும் இருந்திருக்கும். ‘தனி நாடே வேண்டாம்டா சாமி.... என் பிள்ளைகளை என்னிடம் கொடுத்து விடு’ என்றுதான் புலிகளின் காலில் விழுந்து ஆயிரக்கணக்கான பெற்றோர் அழுது கெஞ்சியிருக்கிறார்கள். இன்றும்கூட, அங்குள்ள பெருவாரியான தமிழர்கள் ‘இழந்தது போதும்’ என்ற விரக்தியில்தான், ‘தனி நாடெல்லாம் வேண்டாம்’ என்று கூறுகிறார்கள். ஆனால், ஓய்வு நேரத்தில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் ஒரு சிலர்தான் ‘ஈழத்தை அடைந்தே தீருவோம். மாவீரன் திரும்பி வருவார்’ என்று கிளறி விடுகிறார்கள். இவர்கள் தூண்டிவிட, தூண்டி விட ரணகளமாவது என்னவோ இலங்கையிலுள்ள அப்பாவித் தமிழர்கள்தான்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த போராட்டங்களைப் பற்றிப் பேசும்போது, இலங்கையின் முக்கிய தமிழ்ப் புள்ளிகள் சிலரே, ‘2009, 2010, 2011, 2012-ல் எல்லாம் தமிழக மாணவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வேறு வேலையில் மும்முரமாக இருந்தார்களோ? அல்லது நான்கு ஆண்டுகள் தூங்கி விட்டு இன்றைக்குத்தான் தமிழகம் முழிக்கிறதா?’ என்று கிண்டலாகவே கமென்ட் செய்தனர். காரணம், இங்கு நடக்கும் போராட்டங்களைக் காலங்கடந்து, தேவையற்ற நேரத்தில் நடத்தப்படும் போராட்டமாகவே அங்குள்ளவர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கையில் சிங்களருக்கு இணையாக தமிழரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான், தமிழகத்தில் உள்ள அத்தனை தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும். பிறகெப்படி தமிழக மக்களிடையே தமிழ் உணர்வாளர்கள் (?), தமிழ்த் துரோகிகள் (?) என்ற பாகுபாடு உருவாக்கப்படுகிறது. கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கான பதில்களில்தான் அந்த முரண்பாடு எழுகிறது.
1. தமிழருக்குத் தேவை சம உரிமையா? தனி நாடா?
2. ராணுவத்துடன் கடும் போர் என்று வந்த பிறகு, அப்பாவித் தமிழர்களைப் புலிகள், தங்களின் அரணாகப் பிடித்து வைத்துக் கொண்டது சரியா, இல்லையா?
3. இத்தனை அப்பாவி உயிர்கள் பறிபோனதற்காகப் பதறும் அதே நேரம், ராஜீவ் காந்தி, அவருடன் 25 பேர், அமிர்தலிங்கம், பத்மனாபா, சிறீ சபாரத்தினம் உள்ளிட்ட புலிகள் நடத்திய ஏராளமான தலைவர்களின் படுபாதகக் கொலைகள், அப்பாவி சிங்கள மக்களின் கொலைகள், போர்ப் பகுதியிலிருந்து தப்பிப் போக நினைத்த அப்பாவித் தமிழர்களின் கொலைகள் குறித்தும் இம்மியளவாவது பதற வேண்டுமா, வேண்டாமா?
இந்த மூன்று கேள்விக்கான பதில்களில்தான் தமிழ் உணர்வாளர்களும் (?), தமிழ்த் துரோகிகளும் (?) அடையாளம் காணப்படுகிறார்கள்.
1. இவ்வளவு ஆயுதங்கள், இவ்வளவு உயிரிழப்புகளைச் சந்தித்த போராட்டம், சம உரிமைக்கான போராட்டமாக அமைந்திருந்தால், எப்போதோ ஜெயித்திருக்கும். விடுதலைப் புலிகளின் பலத்தைப் பார்த்துப் பயந்து, அழிவுகளைப் பார்த்து மிரண்டு, இலங்கை அரசுகள் பலமுறை பேச்சுவார்த்தைக்கு வந்தன. அப்படி வாய்ப்புகள் வந்த போதெல்லாம் தமிழருக்கு வேண்டிய உரிமைகளைக் கேட்டு வெற்றி பெறாமல், தனி நாடு ஒன்றையே திரும்பத் திரும்பக் கேட்டு புலிகள் தோற்றுப் போனார்கள். இன்று சம உரிமையைக் கேட்டுக் கெஞ்ச வேண்டிய நிலைக்கு அங்குள்ள தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைக்குக் காரணம் புலிகளா, இல்லையா என்ற கேள்விக்கான பதிலில்தான் தமிழக மக்களுக்குள் முரண்பாடு எழுகிறது.
2. புலிகள் தங்களைப் போர்க் களத்திலிருந்து வெளியேற விடவில்லை என்பதை, நாங்கள் சந்தித்த பெரும்பாலான வன்னிப் பகுதி மக்கள் எங்களிடம் உறுதி செய்தனர். இறுதிக்கட்டப் போரின் போது, புலிகள் தங்களுடன் வைத்திருக்கும் தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரி, யாழ்ப்பாணத்தில் பல ஆயிரம் தமிழர்கள் போராட்டமே நடத்தியிருக்கிறார்கள். ‘நாங்கள் அழிந்தாலும் அப்பாவி மக்களோடுதான் அழிவோம்’ என்று பிடிவாதம் பிடித்தனர் புலிகள். அதனால்தான் உயிரிழப்பு அதிகமானது. ராணுவத் தாக்குதல்களுக்குப் பயந்து மக்கள் போர்க்களத்தை விட்டு வெளியேறத் துடிக்கின்றனர். ஆனால், புலிகள் அவர்களை மறிக்கின்றனர். ‘உங்களுக்காகத்தான் போராடுகிறோம். நீங்கள் எங்களோடுதான் இருக்க வேண்டும்’ என்று மிரட்டுகின்றனர். பொதுமக்களோ, ‘எங்களுக்குத் தனி நாடே வேண்டாம். உயிரோடு இருந்தாலே போதும். எங்களை விடு’ என்று கதறுகின்றனர். அந்தத் தருணத்திலாவது அரசியல் தீர்வை நோக்கி புலிகள் நகர்ந்திருக்க வேண்டாமா? என்ற கேள்விக்கான பதிலில்தான் முரண்பாடு எழுகிறது.
இது நியாயமான கேள்விதான் என்று நினைத்தால், அவர்கள் தமிழ்த் துரோகிகள். ‘ராணுவம் ஏன் தாக்குதல் நடத்தியது? ராணுவம் ஏன் புலிகளை ஒடுக்க நினைத்தது?’ என்று கீறல் விழுந்த ஓட்டை ரிக்கார்ட் மாதிரி கேள்வி எழுப்பினால் அவர்கள் தமிழ் உணர்வாளர்கள். நான் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டேன். “இலங்கை கிரிக்கெட் வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று கோருகிறீர்களே? அதில் முத்தையா முரளிதரன் என்ற தமிழனும் பாதிக்கப்படுகிறாரே.... அது தமிழர்களே தமிழருக்குச் செய்யும் துரோகமில்லையா? இங்கு சாமி கும்பிட வரும் சிங்களர்களை மொத்தமாகத் தாக்குகிறார்களே.... அதில் ஓரிரு தமிழர்களும் இருந்தால் அவர்களுக்கும் அடி விழாதா?” அதற்கு அவர் சொன்னார்: “மொத்த சிங்களனும் அழிவான் என்றால் அதற்குச் சில தமிழர்கள் பலியானால் தப்பில்லை.” என்ன ஒரு பதில்? இவர்களுக்கென்றால் ஒரு நியாயம்! இதையே இலங்கை ராணுவம் ‘மொத்த புலிகளும் அழியணும். அதற்குக் கொஞ்சம் சிவிலியன்கள் செத்தாலும் பரவாயில்லை’ என்று நினைக்காதா?
3. ராணுவம் செய்த கொலைகள் எல்லாம் அநியாயம் என்று சொல்லும்போது, புலிகள் செய்த கொலைகள் எல்லாம் நியாயம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? அப்பாவி சிங்கள மக்களைக் கொன்ற புலிகள், தமிழ் முஸ்லிம்களைக் கொன்ற புலிகள், சக தமிழ்த் தலைவர்கள் அத்தனை பேரையும் கொன்று குவித்த புலிகள், கடைசி நேரம் போர்ப் பகுதியிலிருந்து ராணுவத்திடம் சரணடையச் சென்ற தனது ஈழ மக்களையே மனித வெடிகுண்டை அனுப்பி வெடித்துச் சிதறச் செய்த புலிகளை ‘வீரர்கள்’ என்று கொண்டாடுவதா, இல்லை கொடுங்கோலர்கள் என்று கூறுவதா? என்ற கேள்விக்கான பதிலில்தான் முரண்பாடு எழுகிறது.
இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலில்தான் ‘தமிழ் உணர்வாளன்’ அல்லது ‘தமிழ்த் துரோகி’ என்ற பட்டத்தை நிர்ணயம் செய்கிறது என்றால், துக்ளக் ஆசிரியரோடு சேர்ந்து தமிழ்த் துரோகி பட்டத்தை ஏற்றுக் கொள்ள நான் உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் தயாராகவே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இலங்கை அரசாங்கம் முன்பு என்னென்னவோ அக்கிரமங்களை இழைத்திருக்கட்டும். அதை மட்டும் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு, இன்று எஞ்சியுள்ள மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதில் அர்த்தமில்லை. இன்றைக்கு அந்த அரசாங்கம் என்ன செய்கிறது? முன்னாள் புலிகளை ராணுவத்தில் சேர்த்துக் கொள்கிறது. துப்பாக்கி சுடுவதில் நிபுணர்களாக உள்ள புலிகளை, ஆசிய மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தயார் செய்து வருகிறது. ராஜபக்ஷவின் ஆளும் கட்சி என்ன செய்கிறது? புலிப் படையின் பிரபல முன்னாள் பெண் தளபதியான தமிழினியைத் தனது கட்சி வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் நிறுத்த முன் வந்துள்ளது. இதுதான் கால மாற்றம்! உடனே இதற்கு உடன்படும் தமிழர்கள், முன்னாள் புலிகளையெல்லாம் ‘துரோகிகள்’ என்று கூறிப் பழி போடாமல், அங்கு நடப்பது நல்லதாகவே நடக்கட்டும் என்று வாழ்த்துவதுதான் நியாயம்.
காலங்கள் மாறும். முஸ்லிம் பயங்கரவாதத்தை எதிர் கொண்ட இந்தியா, ஒரு அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கிய மாதிரி, தனி நாடு கேட்டுப் பிரதமரைச் சுட்டுக் கொன்ற சீக்கிய சமூகத்தை ஒதுக்காமல், இன்று அந்தச் சமூகத்திலேயே ஒருவரை இந்தியா, பிரதமர் ஆக்கிய மாதிரி, இலங்கையிலும் தரமான, தன்னலமற்ற, எல்லோரையும் வசீகரிக்கிற ஒரு தமிழ்த் தலைவர் உருவானால், சிங்கப்பூர் போல இலங்கையிலும் ஒரு தமிழர் அதிபர் பதவியேற்கும் நாள் வந்தாலும் வரலாம். அதற்கு அவர்களின் அரசியல் சாசனத்தில் தடையில்லை. அது போன்ற ஒரு பாஸிட்டிவ் சிந்தனையோடு ‘வீரம் என்ற பெயரில் நடத்தும் பயங்கரவாதம் முக்கியமில்லை; தமிழ் மக்களின் வாழ்வு முக்கியம்’ என்று முடிவெடுப்பதுதான் உண்மையான மனித நேயம்.

– எஸ்.ஜே. இதயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக