வியாழன், 11 ஜூலை, 2013

நடிகை லீனா மரியாவை கில்லாடி காதலன் சுகாஷ் உண்மையில் சிறைபடுத்தி வைத்திருந்தானா ?

சென்னை : மலையாள நடிகை லீனா மரியா பாலுடன் இணைந்து, 19 கோடி
ரூபாய் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட சுகாஷ், ஸ்பானிஷ், பிரெஞ்ச், ஆங்கிலம், தமிழ் என, எட்டு மொழிகள் அறிந்தவர். சென்னையில் இருந்த போது, "ஐ.ஏ.எஸ்.,' அதிகாரி என தன்னை கூறிக் கொண்டு, 10 பாதுகாவலர்களுடன் வலம் வந்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சுகாஷ் மீது தற்போது, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் மட்டும், 14 வழக்குகள் உள்ளன.சென்னை, அம்பத்தூரில், 19 கோடி ரூபாய் மோசடி மற்றும் சேலையூரில் ஜவுளி வியாபாரியிடம் மோசடி உள்ளிட்ட வழக்குகளில், டில்லியில் கைது செய்யப்பட்ட சுகாஷை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ரயில் மூலம், சென்னை கொண்டு வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில், ஏற்கனவே அவர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிவப்பு சுழல் விளக்கு காரில் வலம் வந்ததுடன், பலரிடம், "ஐ.ஏ.எஸ்.,' அதிகாரி என்று ஏமாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு, நாகர் பாவி கிராமத்தில், சிவா அபார்ட்மென்டில் வசித்து வரும் சந்திரசேகர் - மாலா தம்பதியின் ஒரே மகன் சுகாஷ். சந்திரசேகரும், மாலாவும், பெங்களூரு, பீனியாவில், "துர்கா என்டர் பிரைசஸ்" என்ற பெயரில், ரப்பர் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு கிறிஸ்ட் கல் லூரியில் படித்த சுகாஷிற்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதால், படிப்பை பாதியில் நிறுத்தினார்.வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசையில் இருந்த சுகாஷ், 2008ம் ஆண்டு, பெற்றோரின் ரப்பர் தொழிற்சாலைக்குச் சென்ற போது, இயந்திரத்தில் கை சிக்கியதால், நான்கு விரல்கள் நசுங்கின. அதன் பின், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம், கையை சரி செய்து கொண்டார்.

பணக்கார தோரணை :
தன்னை பெரிய பணக்காரன் என்று பிறர் நம்ப வேண்டும் என்பதற்காக, விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ., காரை, 50 லட்சம் ரூபாய்க்கு வாங்க, டி.டி., அனுப்பியது போலவும், தனக்கு சொந்தமாக ஹெலிகாப்டர், விமானம் இருப்பது போலவும், லேப்-டாப்பில், பல தகவல்களை உருவாக்கி வைத்துள்ளார் சுகாஷ்.மேலும், சினிமா தயாரிப்பாளர் என தன்னை கூறிக் கொண்டு, தன் லேப்-டாப்பில், பெங்களூருவில் உள்ள மாடல் அழகிகள் பலரது போட்டோக்களை, பதிவு செய்து, அவர்கள் அனைவரும், சினிமா சான்ஸ் கேட்டு தன்னை அணுகியதாகவும் தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

பாதுகாவலர்களுடன் உலா :

கடந்த, 2010ல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள, பாலா டிராவல்சில், சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய கார்களை வாடகைக்கு எடுத்து, தன்னுடன் பாதுகாவலர்களை அமர்த்திக் கொண்டு, தன்னை பணக்காரன், முக்கிய புள்ளியின் மகன் என, பிறர் கண்டு பயப்படுவதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.பணக்கார தோரணையைப் பயன்படுத்தி, கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு, கர்நாடகாவில் இருந்து கார் வாங்கித் தருவதாகக் கூறி, 3 லட்சம் ரூபாய் வாங்கியதுடன், பிரேம் என்பவரையும் கார் வாங்கித் தருவதாக ஏமாற்றிஉள்ளார்.இது போல், சென்னையைச் சேர்ந்த, மகேந்திரன், அனுபமா ராவ் ஆகியோரிடம், 6.5 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றிஉள்ளார்.அரசு கார்களை ஏலத்திற்கு எடுத்துத் தருவதாகவும், அரசியல் புள்ளி என்று கூறியும், பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார் சுகாஷ். இதுகுறித்து, சென்னை, சேத்துப்பட்டு போலீசில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பொய் சொல்லி "பிரிவியூ' :

மதுரையில், தமிழ்ஜெயா தியேட்டருக்கு புதிய சவுண்டு சிஸ்டம் வாங்கித் தருவதாகக் கூறி, மானேஜரிடம் பேசி, 10 ஆயிரம் ரூபாய் சுருட்டியுள்ளார் சுகாஷ், அதன் பேரில் புகார் அளிக்கப்பட்டு, ஊமச்சிகுளம் போலீசார் கைது செய்துள்ளனர்.அதே போல், 2010ல், சென்னை, சேத்துப்பட்டு பகுதியில், பியூட்டி பார்லர் நடத்தி வரும் கண்ணன் என்பவரை சைரன் காரில் அழைத்துச் சென்று, அபிராமி தியேட்டரில், "பையா' படத்தின்," பிரிவியூ' பார்க்க வைத்துள்ளார்.சுகாஷ் மீது, சென்னை சேத்துப்பட்டு போலீஸ், மத்திய குற்றப்பிரிவில் தலா, இரண்டு, மதுரை ஊமச்சிகுளத்தில் ஒன்று, கோவை மத்திய குற்றப்பிரிவில் ஒன்று என, ஆறு வழக்குகளும், கர்நாடகாவில், எட்டு வழக்குகளும் என, 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளின் அடிப்படையில், சுகாஷ் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல குரல், பல மொழி!

கணினி தொழில்நுட்பம் அறிந்த சுகாஷ், மொபைல் போனில் உள்ள சிறப்பு வசதிகளை பயன்படுத்தி, பல குரல்களில் பேசும் திறமை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. பல துறை அறிவு பெற்ற இவர், தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம். பிரெஞ்ச், ஸ்பானிஷ், குஜராத்தி என, எட்டு மொழிகளை அறிந்து வைத்துள்ளார்.பாடி கார்டுகள் வைத்துக் கொண்டு, மாதம், 1.5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்த, சுகாஷ், "பேஸ்புக்' மூலம், நடிகை லீனா மரியா பாலை, நடிக்க வைப்பதாகக் கூறி, மயக்கியுள்ளார். தன் இடது கையில், "லீனா' என ஆங்கிலத்தில் பச்சை குத்தியுள்ளார்.விசாரணையின் போது இத்தகவல்களை தெரிவித்ததாக, போலீசார் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக