ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஆள் கடத்தல் கூலிப்படையால் வி.ஐ.பி.,க்கள் பீதி

தமிழகத்தின் முக்கிய நகரங்களில், பணத்துக்காக கொலை, ஆட்கடத்தலில் ஈடுபடும் கூலிப்படையால், வி.ஐ.பி.,க்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். கடத்தல், கொலை, கொள்ளையில் ஈடுபடும் கூலிப்படை, சேலத்தை மையமாக கொண்டு, தமிழகம் முழுவதும் "நெட்வொர்க்' அமைத்து செயல்படுவதாக, உளவுத் துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ரவுடி கும்பல்:சேலம், அஸ்தம்பட்டியில், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த, ராஜ்குமார் என்பவரை, அஸ்தம்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தலைமையிலான ரவுடி கும்பல் கடத்தி சென்று பணம் பறிக்க முயற்சித்தது. இந்த கடத்தல், போலீசாருக்கு தெரிய வரவே, கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜூன், 26ம் தேதி, சேலம் கணேஷ் மஹால் ஓட்டல் அதிபர் கணேசனின், இரண்டு மகன்களுக்குள், சொத்தை அபகரிப்பதில் ஏற்பட்ட போட்டியில், அண்ணன் சுப்ரமணியத்தை, தம்பி கார்த்திகேயன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. இதில் தம்பி கார்த்திகேயன், கடத்தல் கும்பலை சப்ளை செய்த கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் சேலம் வழக்கறிஞர் ஜெயபால் கடத்தப்பட்டார். இந்த கடத்தலிலும், ஆறு பேர் கொண்ட கூலிப்படை கும்பல் ஈடுபட்டு இருப்பது, போலீசின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவமே நாடகமாக இருக்கக் கூடும் என, போலீசார் சந்தேகிக்கும் நிலையில், கடத்தலில் ஈடுபட்ட கூலிப்படை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பணத்துக்காக கொலை:
சமீபகாலமாக சேலத்தை மையமாக கொண்டு செயல்படும், கூலிப்படையே தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வி.ஐ.பி.,க்கள், அவரின் வாரிசுகளை கடத்தி பணம் பறித்தல், பணத்துக்காக கொலை, கொள்ளையில் ஈடுபடுதல் என, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக உளவுத் துறை, அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. கூலிப்படையினரின் செயல், தமிழக வி.ஐ.பி.,க்கள் மத்தியில், பீதியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் துணை கமிஷனர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், கூலிப்படையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. இந்த கூலிப்படை அனைத்துமே சேலம் மாநகர், மாவட்டத்தில் இருந்தே, தங்களின் நடவடிக்கையை துவக்குகின்றனர். அது மட்டுமின்றி, பிற நகரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடிகளுடன் தொடர்பு அமைத்து உள்ளனர். அதன்படி அம்மாவட்ட ரவுடிகள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், அங்கு செல்கின்றனர். கடத்தல், கொலை ஆகியவற்றுக்கு, ஒரு தொகையை பேசும் இவர்கள், போலீசில் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில், ஜாமின் பெற ஆகும் செலவையும், கூலிக்கு ஆள் பிடிப்பவர்களே வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், சமூக விரோத செயல்களுக்கு துணை போகின்றனர்.



மது, மாது:
அந்த வகையில் கொலைக்கு 1 லட்சம், ஆள் கடத்தலுக்கு, 1.50 லட்சம், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்து செலவு தனி என, பேசப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தான், அனைத்தும் நடக்கிறது. இதற்கு ஆள் பிடித்து கொடுப்பவர்களுக்கு, 25 சதவீத கமிஷனும் வழங்கப்படுகிறது. கை நிறைய பணம், சொகுசு கார், தங்க மாளிகை, மது, மாது என, கூலிப்படைக்கு சப்ளை செய்யப்படுவதால், வேலை இல்லா இளைஞர்கள், ரவுடிகள் ஆகியோர், கூலிப்படையில் இணைகின்றனர். இந்த கும்பல்களின் செயல்களை முற்றிலும் தடுக்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக