வெள்ளி, 12 ஜூலை, 2013

நோர்வேயில் ஏராளமான இந்திய இலங்கை சிறுவர்கள் காப்பகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

காப்பகத்தில் உள்ள சிறுவர்களை மீட்குமாறு மகஜர்
நோர்வேயில் வதியும் தமது உறவினர்களின் பிள்ளைகளை குழந்தைகள் காப்பகத்திடமிருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு இலங்கைக்கான நோர்வே தூதரகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலகம் ஆகியவற்றுக்குச் சென்று நோர்வேயில் வதிவோரது யாழ். உறவினர்கள் வலியுறுத்தினர். அத்துடன், தமது உறவினர்கள் பிள்ளைகள் உட்பட கானா, இந்தியா, எத்தியோப்பியா, சோமாலியா ரஷ்யா, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 16 ஆயிரம் சிறுவர்கள் இவ்வாறு குழந்தைகள் காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் கையளித்தனர். ஆதார ஆவண கோவையை பெற்றுக்கொண்ட நோர்வே தூதரகத்தின் உயர் அதிகாரி இவ்விடயத்தை நோர்வே அரசாங்கத்தினதும் நோர்வே சிறுவர் காப்பகங்களினதும் உடனடி கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார். இதேவேளை தமது உறவினர்களினதும் தமதும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாதவிடத்து நோர்வேக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று வெடிக்கும் என்றும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுவதை தடுக்க முடியாது என்றும் யாழ். உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நோர்வே அரசாங்கம் சிறுபிள்ளைகள் மற்றும் பெற்றோர் விடயத்தில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஜெனிவா சர்வதேச மனித உரிமைப் பேரவை நோர்வே அரசை எச்சரிப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் பாதுகாக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். அதேவேளை, நோர்வேயில் குடியுரிமை பெற்றுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள் தமது பிள்ளைகளை சிறுவர் காப்பகங்களிடமிருந்து மீட்டுக்கொள்வதற்காக கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நோர்வேயில் வதிவோரது யாழ். உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் புதன்கிழமை இலங்கை பாராளுமன்றம் நுழைவாயில் பாதையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக