வியாழன், 18 ஜூலை, 2013

ஓடும் ரயிலில் அடிபட்டு இளவரசன் இறப்பு: "எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிக்கை

தர்மபுரி: "ஓடும் ரயிலில் அடிபட்டு, இளவரசனின் இறந்துள்ளார்' என, இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்த டில்லி, "எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிகையில் தெரிவித்துள்ளனர்.காதல் கலப்பு திருமணம் செய்த இளவரன் கடந்த, 4ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவரது தந்தை இளங்கோ மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற, "டிவிஷன் பெஞ்ச்', டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனையை சேர்ந்த மூன்று தடயவியல் டாக்டர்கள் மூலம் கடந்த, 13ம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்தனர்.


இதில், இளவரசன் இறப்பு குறித்த, 13 சந்தேகங்கள் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்துனர். இதன் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். இளவரசன் வழக்கு விசாரணை நடத்தும் சிறப்பு தனிப்படை போலீஸாருக்கு இதன் நகலை வழங்க வசதியாக நேற்று, (ஜூலை17) தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வணக்காமுடியிடம் ஒப்படைத்தனர். நேற்று இரவு, இதன் நகல் சிறப்பு தனிப்படை போலீஸாரிடம் வழங்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, "இளவரசன் ஓடும் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். அவரது உடலில் உள் காயங்கள் இல்லை. அவரை, ரயிலில் தள்ளி விட்டோ, துன்புறுத்தியோ கொலை செய்ததற்கான எந்த முகாந்திரமும் அவரது உடலில் இல்லை' என அந்த அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிவித்தனர். இளவரசன் கொலை செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை கிளம்பிய நிலையில், மறு பிரேத பரிசோதனையில், இளவரசன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை, சிறப்பு தனிப்படையினர் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார்கள், என தெரிகிறது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக