ஞாயிறு, 7 ஜூலை, 2013

குற்றவாளியான பன்சாலை சுதந்திரமாக விடுவதா?சி.பி.ஐ., நடவடிக்கைக்கு எதிர்ப்பு

புதுடில்லி: ரயில்வே வாரியத்தில், "பசையுள்ள' பதவி பெறுவதற்காக, ரயில்வே வாரிய உறுப்பினர், லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், முன்னாள் ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சாலை, அரசு தரப்பு சாட்சியாக, சி.பி.ஐ., சேர்த்துள்ளதற்கு, நேற்று கோர்ட்டில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "குற்றம் சுமத்தப்பட வேண்டியவரை, சுதந்திரமாக உலாவ விடுவதா' என்றும், வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.ஆதாரங்கள் இல்லை':ரயில்வே வாரியத்தில், அலுவலர் பிரிவுக்கான உறுப்பினராக இருந்தவர், மகேஷ் குமார். இவர், அதே வாரியத்தில், "பசையுள்ள' பதவியாகக் கருதப்படும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கான, உறுப்பினராக விரும்பினார். இதற்காக, அப்போது, ரயில்வே அமைச்சராக இருந்த, பவன்குமார் பன்சாலின் உறவினர், விஜய் சிங்லா என்பவரிடம், 10 கோடி ரூபாய் பேரம் பேசி, முதல் கட்டமாக, 90 லட்சம் ரூபாயை, இடைத்தரகர்கள் மூலம் வழங்கினார்.
இந்த லஞ்ச ஊழல் வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., கடந்த, 2ம் தேதி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள, 10 பேர் மீது, குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மீது, குற்றம் சுமத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவரை, அரசு தரப்பு சாட்சியாகச் சேர்த்திருந்தது.இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில், பன்சாலுக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால், அவரை அரசு தரப்பு சாட்சியாகச் சேர்த்திருப்பதாகவும், சி.பி.ஐ., கூறியது.இதற்கிடையில், இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில், ராகுல் யாதவ், சமீர் சந்திர் மற்றும் சுஷில் தாகா என்ற மூன்று பேர், டில்லி, சி.பி.ஐ., கோர்ட்டில், ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று, நீதிபதி சுவர்ண காந்த சர்மா முன்,
விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:

"விடுவிக்க வேண்டியவர்கள்':

ரயில்வே வாரியத்தில், "பசையுள்ள' பதவி பெறுவதற்காக, லஞ்சம் கொடுத்த இந்த வழக்கில், குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டியவரை (பன்சால்), சி.பி.ஐ., விடுவித்துள்ளது; சுதந்திரமாக உலாவ விட்டுள்ளது. அதே நேரத்தில், முக்கிய பங்கில்லாத, அப்பாவிகளான, எங்கள் கட்சிக்காரர்களை, குற்றவாளிகளாகச் சேர்த்துள்ளது.இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் பன்சால், அரசு தரப்பு சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்றால், வழக்கு விசாரணை எந்தப் பாதையில் செல்கிறது என்பதைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை. பன்சால் சாட்சியெனில், குற்றம் சுமத்தப்பட்ட மற்றவர்கள் எல்லாம் விடுவிக்கப்பட வேண்டியவர்களே.இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வழக்கறிஞர் கூறினார்.

"கைது செய்ய வேண்டும்':

இதற்கிடையில், வழக்கை விசாரித்த நீதிபதி, சுவர்ண காந்த சர்மா கூறியதாவது:இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில், ராகுல் யாதவ், சமீர் சந்திர் மற்றும் சுஷில் தாகா போன்றவர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். ஆனால், குற்றப் பத்திரிகையில், இடம் பெற்றுள்ள வேணுகோபால் மற்றும் முரளி கிருஷ்ணன் என்ற இரு நபர்கள், கைது செய்யப்படவில்லை; இது சரியல்ல. அவர்களும், கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.இதன்பின், மூவரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை, வரும், 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக