வெள்ளி, 19 ஜூலை, 2013

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ! வாலியின் சகாப்தம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை:கவிஞர் வாலியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் தகனம் நடக்கிறது.காவிய கவிஞர் என்று திரையுலகினரால் பாராட்ட பெற்றவர் வாலி (82). கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த மாதம் 14&ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். 2 தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு வாலி மரணம் அடைந்தார். அவரது உடல் ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி,  நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் வாலியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கண்கலங்கினர்.


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன், தி.க. தலைவர் கி.வீரமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர்கள் அஜீத், சிவகுமார், பிரபு, பாண்டியராஜன், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் முக்தா சீனிவாசன், பி.வாசு, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.சி. சக்தி, விக்ரமன், வி.சேகர், ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிகுமார், வெங்கட் பிரபு, சுந்தர்.சி, வசந்த பாலன், நடிகை குஷ்பு, ஷாலினி அஜீத், இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, (சங்கர்) கணேஷ் வித்யாசாகர், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், பாடலாசிரியர்கள் வைரமுத்து, பா.விஜய், அறிவுமதி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் தேவா, செயலாளர் சச்சு, எழுத்தாளர் சோ மற்றும் ஏராளமான திரையுலகினர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாலி உடல், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரது சிதைக்கு மகன் பாலாஜி தீ மூட்டுகிறார். வாலியின் மனைவி ரமணதிலகம் ஏற்கனவே இறந்துவிட்டார்.

வாழ்க்கை வரலாறு

1931&ம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் நிஜப்பெயர் டி.எஸ்.ரங்கநாதன். எஸ்எஸ்எல்சி முடித்ததும் சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு படித்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது ‘நேதாஜி’ என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை நடத்தினார். சிறுவயதிலேயே கவிதை எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர் எழுதிய நாடகங்கள் திருச்சி வானொலியில் ஒலிபரப்பானது. சினிமாவுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தார். அப்போது திரையுலகில் கவியரசு கண்ணதாசன் கோலோச்சி இருந்த காலம். நீண்டநாள் காத்திருந்தும் வாலிக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ஊருக்கு திரும்பி செல்ல முடிவு செய்து பெட்டி, படுக்கையை கட்டினார். அந்த நேரத்தில்தான் ‘மயக்கமா கலக்கமா.. மனதிலே குழப்பமா’ என்ற பாடலை கண்ணதாசன் எழுதி இருந்தார். அந்த பாடலை கேட்டதும் ஊருக்கு செல்லும் முடிவை கைவிட்டு, பாடலாசிரியராகும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டார் வாலி.

அவரை சினிமாவுக்கு பாடல் எழுத அழைத்து வந்தவர் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். முருக பக்தரான டிஎம்எஸ்க்கு ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ என்ற பாடலை போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பி இருந்தார் வாலி. அந்த பாடல் நன்றாக இருந்ததால், தானே இசை அமைத்து பாடினார் டி.எம்.சவுந்தர்ராஜன். அதன்பிறகு 1958&ம் ஆண்டில் சினிமாவுக்கு பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. ‘அழகர்மலை கள்ளன்’ என்ற படத்துக்கு பாடல் எழுதினார். அன்று தொடங்கி இன்று வரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான சினிமா பாடல்களை எழுதியுள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய் அஜீத், தனுஷ், சிம்பு, விமல், விக்ரம் பிரபு என 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இன்று ரிலீசான தனுஷின் ‘மரியான்’ படத்துக்கும் பாடல் எழுதி இருக்கிறார். வசந்த பாலன் இயக்கி வரும் ‘காவியத் தலைவன்’ படத்துக்கும் பாடல் எழுதி தந்திருக்கிறார். எம்ஜிஆருக்காக இவர் எழுதிய ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி’, சிவாஜிக்காக எழுதிய ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’, ‘மாதவிப் பொன் மயிலால்’, ரஜினிக்காக எழுதிய ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’, கமலுக்காக எழுதிய ‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ போன்ற பாடல்கள் பிரபலமானவை. 5 முறை தமிழக அரசின் மாநில விருதுகளை பெற்றுள்ளார். 2007&ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இரண்டு ஆண்டுக்கு முன்பு வாலிக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதன்பிறகு சில காலம் பாடல் எழுதாமல் இருந்த வாலி, குணம் அடைந்தபிறகு மீண்டும் பாடல்கள் எழுத தொடங்கினார். கலியுக கண்ணன், கடவுள் அமைத்த மேடை உள்பட 17 படங்களுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். மாருதிராவுடன் சேர்ந்து ‘வடைமாலை’ என்ற படத்தை இயக்கி உள்ளார். அவதார புருஷன், ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி உள்பட 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர், கருணாநிதி, மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களுடன் நட்புடன் பழகி வந்தார். இயக்குனர் கே.பாலச்சந்தர், கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதால் ‘பொய்க்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ போன்ற படங்களிலும் சில டி.வி. சீரியல்களிலும் வாலி நடித்திருக்கிறார். tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக