திங்கள், 15 ஜூலை, 2013

பார்பனரல்லாத மாணவர்களின் கல்வி எழுச்சியை பார்த்து நடுங்கும் தினமணி வகையறா !

macaulayசமசீர் கல்வி :பார்ப்பனரல்லாத மாணவர்களின் இன்றைய கல்வியெழுச்சியைப் பார்த்து, ‘ச்சீ.. இது ஒரு கல்வி.. இந்தக் கல்விமுறையையே மாற்ற வேண்டும்’ என்று சமூக அக்கறையுடன் பொங்கி இருக்கிறது தினமணி.

மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்

ந்தியக் கல்விமுறை மனப்பாடம் செய்யும் முறையாக இருப்பதும், மாணவர்களின் தனித்தன்மையை ஊக்குவிக்கும் முறையாக சமூக பொறுப்பை, எளிய மக்களின் பால் அக்கறையை ஏற்படுத்துகிற கல்வியாக இல்லாமல் இருப்பதும் பெரும் குறைதான்.
வெள்ளைக்காரர்கள் தங்களுக்கு குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக கொண்டு வந்த கல்விமுறை இது. சரியாக சொல்ல வேண்டுமானால் அடிமைகளை உருவாக்க வந்த கல்விமுறை. பிறகு அந்தக் கல்வியில் எப்படி விடுதலை உணர்வை எதிர்பார்க்க முடியும்?
ஆனாலும், வெள்ளை மெக்காலே கொண்டு வந்த இந்த அடிமைக் கல்வியை; இன்னொரு கோணத்தில் புரட்சிகர கல்வி என்றும் அழைக்கலாம்.
குருகுலக் கல்வி, ஆதிக்க ஜாதிக்கார்களுக்கு மட்டும் கல்வி, பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட இந்திய இந்து சமூகத்தில், எல்லோருக்குமான ஒரே கல்வி என்று வந்தது மெக்காலேவின் கல்வி திட்டம்.
அதுவரை இந்து புராணங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், ஜாதி வேறுபாட்டையும் நியாயப்படுத்தி வந்த கல்விமுறையிலிருந்து அறிவியல்  அடிப்படையில் வந்த மெக்காலே கல்வி முறையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் மெக்காலேவின் கல்விமுறை புரட்சிகரமானதுதான்.

ஆனாலும் குருகுலக் கல்வியை எப்படி பார்ப்பனர்கள் மட்டுமே படித்து, மற்றவர்களுக்கு படிப்பதற்கு தடை வித்திருந்தார்களோ, அதுபோலவே மெக்காலே கல்வி முறையிலும் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல், அதையும் சுற்றி வளைத்து அபகரித்தார்கள். இதிலும் ‘தனக்கு மட்டுமே’ என்று ‘பென்ஞ்சை’ தேய்த்தது பார்ப்பனியம்.
அதனால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு மெக்காலே கல்வி முறையை படிப்பதற்குகூட இடஒதுக்கிடு தேவைப்பட்டது.
அப்படி மூன்று தலைமுறைக்கு முன்பு படிக்க ஆரம்பித்த மக்கள், இப்போதுதான் தங்கள் கல்வியின் உயரங்களை தொட முயற்சித்திருக்கிறார்கள்
மற்றவர்களுக்கு படிக்க வாய்ப்பைத் தராமல், அப்படி மீறி படித்தால், நாக்கை அறுப்பேன், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவேன் என்று மிரட்டிய பார்ப்பனியம்; ‘நாங்கள்தான் அதிகம் படித்தவர்கள்’ என்று கூச்சமில்லாமல் அலட்டிக் கொண்டதைப்போல், வெள்ளைக்கார கல்வித் திட்டத்திலும் தன் கணக்கை கூட்டிக் கொண்டே போனது.
பல நூற்றாண்டுகளாக நிறையப் படித்த பார்ப்பனப் பரம்பரையின் தகுதி, திறமைக்கான ரகசியம் இதுதான். இந்த தகுதி, திறமைக்கு வேட்டு வைக்க வந்தது இடஒதுக்கிடு.
அந்த இடஒதுக்கிடுக்கு வேட்டு வந்தது தனியார் கல்வி.
‘தனியார் கல்விமுறையில் பணம் கொடுத்தால் குறைந்த மதிப்பெண் எடுத்தவன் மட்டுமல்ல, பெயிலானவன் கூட உயர்கல்வி படிக்கலாம்’ என்ற முறைக்கு ஆதரவு தெரிவித்தனர் இடஒதுக்கிடால் தகுதி, திறமை போய்விடும் என்று கூச்சல் போட்ட பார்ப்பனர்கள். காரணம் தனியார் கல்வி, இடஒதுக்கிடுக்கு எதிரானது என்பதினாலேயே. இதுதான் பார்ப்பனியத்தின் நீதி, நேர்மை, தகுதி, திறமை.
இப்படியான சூழலில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவந்த சமச்சீர் கல்வி முறையால், தனியார் கல்வி வேறுபாட்டை பள்ளிக் கல்வியில் குறைந்த அளவிலாவது குறைக்க முடிந்தது.
அதன் விளைவாக, முந்தைய கல்வியாண்டில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 86 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தார்கள். இந்தக் கல்வியாண்டில் அதைவிட 3 சதவீதம் கூடுதலாக பெற்று 89 சதவீதம் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதில் மகிழ்ச்சியானது இது மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவிற்கு முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்று நிறைய மாணவர்கள் வந்திருப்தோடு;
சமூக அறிவியல், அறிவியல், கணக்கு இந்த மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 87,739. சமூக அறிவியல் பாடத்தில் 38,154. கணிதத்தில் 29,905. அறிவியலில் 19,680. இதுபோக ஆங்கிலத்திலும் நிறைய மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
(கடந்த ஆண்டு  15 ஆயிரம்.)
அது மட்டுமல்ல, முதல் இரு இடங்களை பிடித்த 61 பேரில் 58 பேர் பார்ப்பனரல்லாத மாணவர்கள்.
இது போதாதா பார்ப்பனர்கள் புரட்சிகர வேசம் போடுவதற்கு.
சங்கரமட சாயலில் அரசியல் மனோபாவம் கொண்டவர்கள், பெரியாரை திட்டுவதற்காகவே திடீரென்று கம்யுனிஸ்டு ஆனவர்கள் அல்லவா? அவர்களுக்கு அவதாரம் எடுப்பதற்கு சொல்லியா தரவேண்டும்.
மெக்காலேவின் வெள்ளைக்கார கல்வியை நன்றாக படித்து பட்டம் பெற்று ஆங்கில அறிவால் வெள்ளைக்காரனுக்கு எதிரான ‘விடுதலை உணர்வும்’இன்னொரு புறம் அதிகாரத்தில் வெள்ளைக்காரனோடு ஆட்சியில் ‘பங்கும்’ பெற்ற பார்ப்பனர்கள்; அதே கல்வியை படிக்க பார்ப்பனரல்லாதவர்கள் இடஒதுக்கிடு கோரிக்கை வைத்தபோது, ‘ச்சீ  வெள்ளைக்காரனுக்கு அடிமை வேலை பார்ப்பவர்கள், தேச துரோகிகள்’ என்று புரட்சியாளர்களாக வெகுண்டெழுந்ததைப்போல்,
பார்ப்பனரல்லாத மாணவர்களின் இன்றைய கல்வியெழுச்சியைப் பார்த்து, ‘ச்சீ.. இது ஒரு கல்வி.. இந்தக் கல்விமுறையையே மாற்ற வேண்டும்’ என்று சமூக அக்கறையுடன் பொங்கி இருக்கிறது தினமணி.
பெரியாரின் தளபதிகளில் ஒருவரான குத்தூசி குருசாமி, ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’ என்று இந்து நாளிதழை குறிப்பிடுவார். அதுபோல் ‘அம்பத்தூர் அய்யரான’ தினமணி, தன் தலையங்கத்தில் இப்படியெல்லாம் சபித்திருக்கிறது:
“மாணவர்களே, தங்களுக்குள் பாராட்டிக்கொள்ளும்போது, “எப்படிடா? எனக்கே தெரியவில்லை!’ என்று பூரிப்பார்கள் என்றால், எங்கேயோ பிழை இருக்கிறது என்பதைத்தான் உணர முடிகிறது.”
…. .. .. …………
எல்லா மாணவர்களும் தேர்ச்சிபெற வேண்டும், எல்லாரும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வினாத்தாளை மிக எளிமையாக அமைப்பதும், மாதிரி வினாத்தாளில் பயிற்சி கொடுத்துவிட்டு அதையே மீண்டும் பொதுத்தேர்வில் எழுதச் சொல்வதும், மாணவர்களின் மதிப்பெண்களை 90 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த வேண்டுமானால் உதவலாமே தவிர, மாணவரின் அறிவுத்திறனை அறிய உதவாது. இப்படி ஒரு தேர்வை நடத்துவதைக் காட்டிலும் தேர்வு நடத்தாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி அளித்துவிடலாம்.
 கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவதுகூட சில மாணவர்களால்தான் முடியும் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. விடை சரியாக இருந்தால்கூட முழு மதிப்பெண் வழங்கமாட்டார்கள்.”
…. .. .. …………
அள்ளித் தரப்பட்ட மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை!
 கல்வி இலவசமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் தேர்ச்சி என்பது கடுமையாகத்தான் இருந்தாக வேண்டும். தேசிய அளவில் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அதிக மதிப்பெண்கள் உதவலாமே தவிர தேர்வுபெற உதவாது. தரம் குறைந்த கல்வியால் தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தலைகுனிவுதான் ஏற்படும் என்பதை ஏனோ யாரும் உணர்வதாகவே தெரியவில்லை.”
தினமணியின் இந்தக் கோபத்தை வரிக்கு வரி நாம் கேள்விக்குட்படுத்தி விசாரிப்பதைவிட, ஒரே ஒரு எதிர் கேள்வி கேட்டு அம்பலப்படுத்தலாம்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கே ‘அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது தமிழ்ச் சமூதயாத்திற்கே தலைக்குனிவு’ என்று எழுதுகிற தினமணி;
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் – 98.76 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதை இந்தியாவிற்கு ஏற்பட்ட அவமானம் என்று ஏன் எழுதவில்லை?
அதில்தான் இருக்கிறது தினமணியின் தகுதி, திறமைக்கான ரகசியம்.
*
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை  கு. ராமகிருட்டிணன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக ‘பெரியார் பாதை’ இதழுக்கு 11.5.2013 அன்று எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக