திங்கள், 1 ஜூலை, 2013

சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ புனிதர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி

சியாமா பிரசாத் முகர்ஜிபாரத மாதாவை பாசத்துடன் உச்சிமோரும் தேசபக்திக்கு ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்தவர்கள் போல சங்க பரிவாரங்கள் காட்டிக் கொள்வதுண்டு. ஆனால் இது அப்பட்டமான வரலாற்று மோசடி என்பதற்கு ஆங்கிலேயர் காலம் முதல் வரலாற்றின் பக்கங்களில் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன. இன்றைக்கு அமெரிக்க கூஜாக்களாக இருக்கும் இந்துமதவெறியர்கள் 47-க்கு முன்னர் ஆங்கிலேயரது கூஜாக்களாக அடியாள் வேலை பார்த்து வந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே சில கட்டுரைகளை வினவில் வெளியிட்டிருக்கிறோம். சமீபத்திய அத்வானி – மோடி அதிகாரச் சண்டையின் போது வயிற்று வலியால் துடித்த பீஷ்ம பிதாமகர் அத்வானி புலம்பியது நினைவிருக்கிறதா? சியாம் பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்கள் ஆரம்பித்து வைத்த பாஜக இன்று சுய மோக தலைவர்களால் சீர்குலைந்து வருகிறது என்று தனது வயிற்று வலிக்கு காரணம் சொன்னார் அத்வானி. ஆனால் அத்வானி கொண்டாடும் இந்த சியாம் பிரசாத் முகர்ஜி ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய அடிமை என்பதை திரைகிழித்து காட்டுகிறது இந்தக் கட்டுரை. பொய்களாலும், மதவெறியாலும் வரலாற்றை மாற்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் யோக்கியதையை படியுங்கள், பகிருங்கள்!
- வினவு

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி (1901-1953) ஆர்எஸ்எஸ்/பிஜேபி முகாமின் முக்கியமான இந்துத்துவ புனிதர். எம் எஸ் கோல்வால்கரின் ஆலோசனையின் பேரில் 1951-ம் ஆண்டு பாரதீய ஜன சங்கத்தை உருவாக்கி ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவின் முதல் தலைவர் ஆக பணியாற்றியவர் அவர். ஜூன் 23, 1953-ல் ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் கைதாகி இருக்கும் போது அவர் மரணமடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது இறந்த நாள், ‘பிரிவு 370-ஐ ரத்து செய்யும் நாள்’ என்றும் ‘காஷ்மீரை பாதுகாப்போம்’ என்றும் இந்துத்துவ அமைப்புகளால் அனுசரிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் அடிவருடி சியாமா பிரசாத் முகர்ஜி
இந்த ஆண்டும் ஜம்மு காஷ்மீருக்காக டாக்டர் முகர்ஜி செய்த தியாகங்களை போற்றும் விதமாக கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எல் கே அத்வானியும், நரேந்திர மோடியும் முறையே டெல்லியிலும் பஞ்சாபின் மாதேபுராவிலும் நடந்த கூட்டங்களில் உரையாற்றினார்கள். டாக்டர் மூகர்ஜி ஒரு மகத்தான தேசியவாதியாகவும், தேசப்பக்தராகவும் போற்றப்பட்டார்.
தனது வலைப்பதிவில் அத்வானி ஜூன் 23, 2013 அன்று ‘ஒரு மகத்தான தியாகிக்கு வணக்கங்கள்‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். டாக்டர் முகர்ஜி பாரதீய ஜனசங்கத்தை உருவாக்கியது, காஷ்மீர் போராட்டம், மாதோபூரில் கைது செய்யப்பட்டது, தொடர்ந்து ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் மரணமடைந்தது போன்றவை பற்றிய விபரங்களை குறிப்பிட்டதோடு அவரை, ‘மாபெரும் தலைவர்’ என்றும் ‘பிறவியிலிருந்தே ஒரு மகத்தான தேசபக்தர்’ என்றும் அத்வானி அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியினர் இப்போது இந்திய அரசியலில் தாம் வகிக்கும் இடத்துக்கு, முன்பு வந்த ஆயிரக்கணக்கானவர்களின் முயற்சிகளுக்கு அனைத்துக்கும் மேலாக டாக்டர் முகர்ஜியின் தியாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.
அதே நாளில், நரேந்திர மோடி எழுதிய செய்தி அத்வானியின் பதிவில் வெளியிடப்பட்டது:
“மகத்தான சியாமா பிரசாத் முகர்ஜியை நாம் இன்று நினைவு கூர்கிறோம். அவர் ஒரு ராஜதந்திரி, சிந்தனையாளர், தேசபக்தர், தனது வாழ்வை தேசிய ஒருமைப்பாட்டுக்காக அர்ப்பணித்தவர். பாரதீய ஜனசங்கத்தை உருவாக்கியவரான அவர் 59 ஆண்டுகளுக்கு முன்பு 1953-ம் ஆண்டு இதே நாளில் நம்மை விட்டுப் பிரிந்தார். அவரை நினைவுகூரும் விதமாக அத்வானிஜி, மனதைத் தொடும் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.”
ஆர்எஸ்எஸ்/பாஜக முகாமின் இந்த இரண்டு இரும்பு மனிதர்களின் வாய்வீச்சை அந்த காலத்திய ஆவணங்களுடன் சரிபார்த்தல் அவசியமான ஒன்று. அந்த ஆவணங்களை பரிசீலிப்பதன் மூலம் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஒரு ‘மகத்தான தலைவர்’ மற்றும் ‘பிறவியிலிருந்தே மகத்தான தேசபக்தர்’ என்பது ஒரு மோசடி என்று தெரிய வருகிறது. இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக நடத்தப்பட்ட சுதந்திர போராட்டத்தில் டாக்டர் முகர்ஜி கலந்து கொள்ளவில்லை. தேசபக்தி என்றால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகங்கள் செய்வது என்றால், டாக்டர் முகர்ஜி அதிலிருந்து விலகி இருந்ததோடு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடனும் முஸ்லீம் லீகுடனும் சேர்ந்து கொண்டு அதற்கு துரோகமும் இழைத்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு வங்காளத்தை இரண்டாக பிரிப்பதற்கு பெரும் ஆதரவாளராக அவர் இருந்தார்.
இந்து மகாசபை
காலனிய எஜமானர்களின் சேவையில் இந்து மகாசபை.
சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் அவர் வி டி சாவார்க்கர் தலைமையிலான இந்து மகாசபாவின் முக்கியமான தலைவராக இருந்தார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மக்கள் வெள்ளை ஆட்சியாளர்களை நாட்டை விட்டு வெளியேற கோரிய போது, ஆட்சியாளர்கள் மக்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகளை அவிழ்த்து விட்டனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கான பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் இந்து மகாசபாவும், எம் ஏ ஜின்னாவின் தலைமையிலான முஸ்லீம் லீகும் சிந்து, வங்காளம், வடமேற்கு எல்லைப் புற மாகாணம் ஆகிய இடங்களில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தனர். ‘வீர்’ சாவார்க்கரின் பின் வரும் உரையிலிருந்து அது நிரூபணமாகிறது (1942-ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இந்து மகாசபாவின் 24-வது மாநாட்டில் அவரது தலைமை உரையிலிருந்து) :
“நடைமுறை அரசியலில் சாத்தியமாகும் சமரசங்கள் மூலம் முன்னேற வேண்டும் என்று மகாசபாவுக்கும் தெரியும். சமீபத்தில் சிந்து இந்து மகாசபை அழைப்பின் பேரில் லீகுடன் கை கோர்த்து சிந்துவில் ஒரு கூட்டணி அரசை நடத்துவதற்கு முன் வந்துள்ளது என்ற உண்மையை பாருங்கள். வங்காளத்தைப் பற்றிய விபரங்கள் அனைவருக்கும் தெரிந்தவை. காங்கிரஸ் தனது அடிபணிதல்களால் மகிழ்விக்க முடியாத காட்டுத் தனமான லீகினர் இந்து மகாசபையின் தொடர்பில் வந்ததும் போதுமான அளவுக்கு சமரசம் செய்பவர்களாகவும், சேர்ந்து செயல்படத் தகுந்தவர்களாகவும் மாறினர். திரு பஸ்லுல் ஹக்கின் தலைமையில், நமது பெருமை வாய்ந்த மகாசபா தலைவர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் வழிகாட்டலின் கீழ் கூட்டணி அரசாங்கம் ஒரு ஆண்டு வரையில் இரண்டு மதத்தினருக்கும் ஆதாயம் அளிக்கும் வகையில் வெற்றிகரமாக செயல்படுகிறது.”
சுபாஷ் சந்திர போஸ்சிந்துவில் மதசார்பற்ற பிரதமர் (அப்போது மாநில முதலமைச்சர்கள் பிரதமர் என்று அழைக்கப்பட்டனர்) அல்லா பக்ஷ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் பிரிட்டிஷ் ஆளுனரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்து மகாசபா முஸ்லீம் லீகுடன் கூட்டணி அரசு அமைத்தது. அல்லா பக்ஷ் இத்திஹாத் (ஒற்றுமை) கட்சி அரசுக்கு தலைமை வகித்து வந்தார். இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என்று அனைத்து தரப்பு மக்களைச் சார்ந்த அந்த கட்சி, முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான சிந்துவுக்குள் முஸ்லீம் லீகை நுழைய விடாமல் தடுத்து வந்தது. 1943-ல் அவர் முஸ்லீம் லீக் முரடர்களால் கொலை செய்யப்பட்டார். பின்னர் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்திலும் இந்து மகாசபைக்கும் முஸ்லீம் லீகுக்கும் இடையிலான கூட்டணி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.
நேதாஜி இந்திய தேசிய இராணுவம் அமைத்த காலத்தில் பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு உதவி செய்தது சியாமா பிரசாத் முகர்ஜியின் இந்து மகாசபை
மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் டாக்டர் முகர்ஜியின் இந்து மகாசபா இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆதரிக்க முடிவு செய்தது என்பது. அந்த நேரத்தில்தான் நேதாஜி என்று அறியப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய இராணுவத்தை (ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்) உருவாக்கி பிரிட்டிஷாரை துரத்த முயற்சித்து கொண்டிருந்தார். பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு உதவி செய்ய இந்து மகாசபை எந்த அளவு தயாராக இருந்தது என்பதை இந்து மகாசபையின் தலைவராக சாவார்க்கர் வெளியிட்ட உத்தரவிலிருந்து தெரிந்து கொள்ளலாம் :
“இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்தவரை, இந்துத்துவம் எந்த விட தயக்கமுமின்றி, ஒத்துழைப்பு உணர்வோடு, இந்து நலன்களோடு பொருந்தி வருவது வரை இந்திய அரசின் போர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ராணுவம், கடற்படை, விமானப் படை போன்றவற்றில் பெரும் எண்ணிக்கைகளில் சேருவது, அனைத்து ஆயுத, வெடிமருந்து மற்றும் போர்த் தளவாட தொழிற்சாலைகளில் நுழைவது மூலம் இதை செய்ய வேண்டும்.
போரில் ஜப்பானின் நுழைவு நம்மை நேரடியாகவும் உடனடியாகவும் பிரிட்டனின் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. விளைவாக, நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நமது இல்லங்களையும், நாட்டையும் போரின் அழிவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். இந்தியாவை பாதுகாப்பதற்கான அரசின் போர் முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதை செய்ய முடியும். எனவே, இந்து மகாசபை இந்துக்களை குறிப்பாக வங்காளத்திலும் அஸ்ஸாமிலும் உள்ள இந்துக்களை திறமையாக, உடனடியாக எழுச்சியடையச் செய்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் இராணுவப் படைகளில் சேர வைக்க வேண்டும்” [வி டி சாவார்க்கர், சமாக்ர சாவார்க்கர் வாங்மயா : ஹிந்து ராஷ்டிரா தர்ஷன், தொகுதி 6, மகாராஷ்டிரா பிராந்திக் ஹிந்துசபா, பூனா, 1963, பக்கம் 460]
இந்து மகாசபை பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்குத் தேவையான மனித மற்றும் பொருள் வளங்களை ஏற்பாடு செய்வதற்காக பிரிட்டிஷ் வைஸ்ராயுடனும், பிரிட்டிஷ் ஆயுதப் படைகளின் தலைமை தளபதியுடனும் நேரடி தொடர்பில் இருந்தது. அது போர்ப்படைகளுக்கான ஆள் எடுக்கும் முகாம்களை ஏற்பாடு செய்தது. பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் சேர முன்வரும் அனைத்து இந்துக்களையும் “இராணுவ ஒழுக்கத்துக்கும் விதிமுறைகளுக்கும் அவை இந்து கௌரவத்தை பாதிக்காதது வரை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் அடிபணியவும் வேண்டும்” என்று சாவார்க்கர் அறிவுறுத்தினார். [ஏ எஸ் பீடே (ஓய்வு), வினாயக் தாமோதர் சாவார்கரின் சூறாவளி பிரச்சாரம் : டிசம்பர் 1937 முதல் அக்டோபர் 1941 வரையிலான பிரச்சார பயணங்களைப் பற்றிய தலைவரின் நாட்குறிப்புகள், நேர்முகங்களிலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள், பம்பாய், 1940 பக்கம். xxviii]
ஸ்டார்பக்ஸ் அத்வானித்வானியின் பதிவில், வங்காளத்தில் முஸ்லீம் லீக் அரசாங்கத்தில் டாக்டர் முகர்ஜி பங்கேற்றது பற்றி குறிப்பிட்டு அதைப் பற்றி அவரது கருத்தை வேண்டி நான் ஜூன் 23, 2013 அன்று 9.14 மணிக்கு பின்னூட்டம் ஒன்றை இட்டேன். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பின்னூட்டம் நீக்கப்பட்டது. நான் மீண்டும் 10:43-க்கு பின்னூட்டத்தை சமர்ப்பித்தேன், அதற்கும் அதே கதிதான் ஏற்பட்டது. 26-ம் தேதி எனது பின்னூட்டம் மீண்டும் தோன்றியது, ஆனால் அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை.
அமெரிக்க காபிக் கடையான ஸ்டார்பக்சில் தேசபக்தர் அத்வானி.
அந்த வலைப்பதிவு ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர் அத்வானியுடையது, அதில் எதை வெளியிட வேண்டும் என்பதை தீர்மானிக்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும், அவர் வெளியிட்டிருக்கும் பதிவு தொடர்பான, “ஜனநாயக, மதசார்பற்ற இந்தியாவுக்கு டாக்டர் முகர்ஜி ஒரு தேசபக்தரா?” என்ற எனது கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவரது வாய்வீச்சுக்கு வரம்பு இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதை அவரது அமைதி காட்டுகிறது.
நான் அவரது நிலையை புரிந்து கொள்ளாமல் இல்லை. பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேறச் சொல்லிக் கொண்டிருக்கும் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாகாணங்களை நிர்வாகம் செய்ய இந்து மகாசபை உதவி செய்தது என்ற முரண்பாட்டை திறமை வாய்ந்த புரட்டாளர் கூட எதிர் கொள்ள முடியாதுதான்.
எண்ணிலடங்கா இந்தியர்கள் “பிரிட்டிஷ் மகுடத்தில் இருக்கும் நகை’ மீண்டும் தமது நாடாக மாற வேண்டும் என்று விரும்பிய காலத்தில், அதற்காக சுபாஷ் போஸ் படை திரட்டிய காலத்தில், டாக்டர் முகர்ஜியின் குரு சாவார்க்கர் பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு உதவி செய்தார் என்பதை அத்வானி கூட விளக்க முடியாதுதான். சாவார்க்கரும் டாக்டர் முகர்ஜியும் தலைமை வகித்த ஹிந்து மகாசபை காலனிய எஜமானர்களின் போர் முயற்சிகளுக்கு வசதி செய்து கொடுத்திருந்த காலத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள், “ஒரு ஆள் கூட கிடையாது, ஒரு பைசா கூட கிடையாது” என்று முழக்கம் எழுப்பியதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது.
இறுதியாக, ‘டாக்டர் முகர்ஜி பிறந்ததிலிருந்தே ஒரு மகத்தான தேசபக்தர்’ என்பதற்கான, வேறு யாருக்கும் தெரியாத, ஆதாரங்களை வெளியிடும்படி இந்திய வரலாற்றின் மாணவனாக நான் அத்வானியை கேட்டுக் கொள்கிறேன். அத்வானியின் வலைப்பதிவில் பதில் பெறுவதற்கான எனது உரிமை மறுக்கப்பட்டது, இந்த கட்டுரை மூலமாவது அந்த ஆர்எஸ்எஸ் மூதறிஞரின் விளக்கம் வெளி வந்து டாக்டர் முகர்ஜி பற்றிய தேசத்தின் நினைவுகளை அது செறிவூட்டும் என்று நம்புகிறேன்.

தமிழாக்கம்: பண்பரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக