புதன், 24 ஜூலை, 2013

தி.மு.க.,வை அழிக்க ஸ்டாலின் போதும் ! வேறு யாரும் தேவையில்லை! கரூரில் பரிதி இளம்வழுதி

கரூர்: ""தி.மு.க., வை அழிக்க ஸ்டாலின் ஒருவரை போதும். வேறு யாரும் தேவையில்லை,'' என, சமீபத்தில் தி.மு.க.,வில் இருந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கரூர் 80 அடி ரோட்டில் நடந்தது.கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசியதாவது:தி.மு.க.,வில் இருந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவை, நான் வசைபாடியிருக்கிறேன். ஆனால், என்னை தாய் உள்ளத்தோடு அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள் தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.சிறுபான்மையினரின் நலம் காக்கும் அரசாக, முதல்வர் ஜெயலலிதா அரசு உள்ளது. தமிழகத்தில் உள்ள 3,000 பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்புக்காக 4,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா.கடந்த தி.மு.க., ஆட்சியில் "டிவி' வழங்கப்பட்டதன் நோக்கம், கேபிள் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரிக்கத்தான். ஹிந்தி தெரிந்ததால், தயாநிதி மாறனுக்கும், ஆங்கிலம் தெரிந்ததால், கனிமொழிக்கும் எம்.பி., சீட் கொடுத்ததாக கருணாநிதி கூறினார்.
ஆனால், எங்களை போன்றவர்களை தமிழை தவிர வேறு எந்த மொழியையும் படிக்க விடாமல் அரசியல் நடத்தியவர் கருணாநிதி. தி.மு.க.,வை அழிக்க வேறு யாரும் வெளியில் இருந்து வரவேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் ஒருவரே தி.மு.க.,வை அழித்து விடுவார்.
"அண்ணாதுரை இறந்த பிறகு, நெடுஞ்செழியன்தான் முதல்வராக வருவார்' என தி.மு.க., வினரும், பத்திரிக்கைகளும் கணித்தனர். ஆனால், எம்.ஜி.ஆர்., தயவால் கருணாநிதி முதல்வராக வந்தார். பிறகு, எம்.ஜி.ஆரையே கட்சியை விட்டு நீக்கினார் கருணாநிதி.அண்ணாதுரை எழுதிய நூல்களை அரசுடைமை ஆக்கினால், அவரது எழுத்துக்கள் மக்களை சென்று சேர்ந்து விடும் என தடுத்தவர் கருணாநிதி. ஆனால், முதல்வர் ஜெயலலிதாதான், அண்ணாதுரை எழுதிய நூல்களை அரசுடையாக்கி, அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாயை கொடுத்தார்..என்.எல்.சி., விவகாரத்தில் அதிரடி முடிவு, காவிரி நீர் பிரச்சனையில் கோர்ட் அணுகுமுறை, கச்சத்தீவு மீட்பு முயற்சி, மீத்தேன் திட்டத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் முதல்வர் ஜெயலலிதாவின் இமேஜ் பல மடங்கு உயர்ந்துள்ளது.வரும் 2014 ம் ஆண்டு எம்.பி., தேர்தலுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக வரும் தகுதியும், திறமையும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. இதை சில ஆங்கில பத்திரிகைகள் சுட்டி காட்டியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ.,க்கள் காமராஜ், பாப்பா சுந்தரம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கீதா, கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் காளியப்பன், பஞ்சாயத்து யூனியன் தலைவர் திருவிகா, நகர அ.தி.மு.க., செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக