வெள்ளி, 26 ஜூலை, 2013

ஜெயேந்திரர், விஜேந்திரருக்கு பிடிவாரண்ட் எச்சரிக்கை காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் காஞ்சிபுரம் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ஜெயேந்திரர், விஜேந்திரர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி முருகன் விசாரித்து வருகிறார். சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை, குறுக்கு விசாரணை, வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவை முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த முறை விசாரணைக்கு வந்நத போது வழக்கறிஞர்கள் ஸ்டிரைக் காரணமாக ஜூலை 26ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கு விசாரணை இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் வந்த போது, ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 6 பேர் மட்டுமே ஆஜராகியிருந்தனர். மேலும், புதுச்சேரியில் வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம், குற்றம்சாட்டப்பட்ட 23 பேருமே ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி முருகன் எச்சரித்தார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக