வெள்ளி, 5 ஜூலை, 2013

திருமாவளவன்: அந்த வழியாக எந்த ரயிலும் போகவில்லை! இளவரசனின் சாவு திட்டமிட்ட சதி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், “தர்மபுரி இளைஞர் இளவரசனின் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “இளவரசன் மரணம் அடைந்திருக்கும் இந்த செய்தி, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ரயில் பாதை ஓரம் தலையில் மட்டும் அடிபட்டு, மூளை சிதறிய நிலையில், குப்புற விழுந்து பிணமாக கிடந்திருக்கிறார். உடலில் வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை.
அவர் இறந்த நேரத்தில் அந்த வழியாக எந்த ரயிலும் போகவில்லை என்று தெரிய வருகிறது. அவருடைய சாவு தற்கொலையாக இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.
திவ்யாவை சிலர் மிரட்டி, நீதிமன்றத்தில் ‘இளவரசனோடு இனி வாழமாட்டேன்’ என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். ஜூலை 1-ம் தேதி நடந்த விசாரணையில், ‘எனது கணவரோடு வாழ விரும்புகிறேன்’ என்று சொல்லிய அவர், அடுத்து 3-ம் தேதி நடந்த விசாரணையில், அவருக்கு எதிராக பேசியிருக்கிறார்.

இது இளவரசனுக்கு நன்றாகவே தெரியும். எப்படியும் திவ்யா தன்னை தேடி வருவார் என்று நம்பிக்கையோடு இருந்தான். ஆகவே, அவன் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை என்று தெரிய வருகிறது.
இந்த நிலையில், அவனுடைய சடலம் ரயில் பாதையில் கிடப்பது, பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு, இளவரசனின் சாவு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.
திவ்யா மற்றும் அவருடைய அம்மா, தம்பி ஆகியோருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. அவர்கள் மூவரும் சிலரின் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிய வருகிறது. ஆகவே, மூவரையும் அரசாங்கம் தன்னுடைய பாதுகாப்பில் வைக்கவேண்டும்.
திவ்யாவை நீதிமன்றத்தில் முன்னுக்குபின் முரணாக பேசவைத்த சக்திகள் யார்? என்பதை அடையாளம் காணவேண்டும். இளவரசனின் இந்த சாவில் திட்டமிட்ட சதி இருப்பதாகவே நம்புகிறோம். அது கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும், அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக