வெள்ளி, 12 ஜூலை, 2013

பாகிஸ்தானின் முதல் பெண்கள் பஞ்சாயத்து அமைப்பு

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு முடிய தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது. அப்போது அந்தப் பகுதியின் பெண்கள், ஆண் துணையில்லாமல் வெளியில் செல்லவே
அனுமதிக்கப் படவில்லை.பெண்கள் படிப்பதற்கு அனுமதியில்லை. அவர்களின் பள்ளிக்கூடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு
இங்கு மீண்டும் அரசு நிலைப்படுத்தப் பட்ட போதிலும், பிற பகுதிகளைப் போல் பெண்கள் இங்கு செயல்படமுடியவில்லை. இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் பழங்குடியினரிடம் பெண்கள் பருவமடையும் சிறு வயதிலேயே திருமணம் செய்தது தரப்படும் வழக்கம் காணப்பட்டது.
இந்தப் பகுதியில் வாழ்ந்துவந்த தஹிரா என்ற பெண், நான்கு வருடங்களுக்கு முன் 12 வயதிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். சென்ற வருடம் ஆசிட் வீசப்பட்டு அந்தப் பெண் உயிரிழக்க நேரிட்டது. தஹிராவின் தாய் தனது மருமகன் சுபா கான்தான் ஆசிட் வீசி தனது மகளைக் கொன்றதாகக் கூறினார். ஆனால், அவரால் அவனுக்கு எந்தத் தண்டனையும் வாங்கித் தர முடியவில்லை. இவருடைய மூத்த மகன் அரசாங்க அதிகாரிகளை சந்திக்க முயன்றபோது சுபாகானாலும், அவனது தந்தையாலும் மிரட்டப்பட்டார்.

அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த பங்குடியினரின் மூத்த மக்களைக் கொண்ட பஞ்சாயத்துக் குழுவும் அவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யவில்லை. பின்னர், ஸ்வாட் பள்ளத்தாக்கின் இரட்டை நகரங்களான மிங்கோராவில் உள்ள சாது ஷரிப் என்ற இடத்தில் நடத்தப்பட்டு வரும் மகளிர் பஞ்சாயத்துக் குழு பற்றிக் கேள்விப்பட்டு அங்கு இவர்கள் சென்றனர். 25 உறுப்பினர்கள் கொண்ட இந்த மகளிர் குழுவின் தலைவியான தபசும் அட்னன் உள்ளூரில் போராட்டங்கள் நடத்தி, சுபாகான் மீது வழக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளார். தஹிராவின் தாய்க்கும் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு ஒரு வக்கீலையும் ஏற்பாடு செய்து தந்துள்ளார். காவல்துறையினர் சுபாகான் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவனைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் தனது மகளது மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று அந்தத் தாய் எண்ணுகின்றார்.

இந்தப் பகுதியில்தான் சென்ற வருடம் மலாலா யூசுப்சாய் என்ற பள்ளி மாணவி தலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக