ஞாயிறு, 21 ஜூலை, 2013

சற்குண பாண்டியன் சுயவிருப்பில் கட்சிப்பதவியை விட்டு விலகினாரா ?

லோக்சபா தேர்தலுக்குள், தி.மு.க., மகளிர் அணியை வலுப்படுத்துவதற்கும், தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கும் கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் மாநில செயலர் கனிமொழிக்கு, கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள் அளவில், முக்கிய பதவி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கனிமொழிக்கு துணைப்பொதுச்செயலர் பதவியை வழங்கும் வகையில், முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், உடல் நலம் கருதி, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்ற கருத்தும், மற்றொரு தரப்பில் ராஜினாமா செய்யவில்லை என்ற கருத்தும் கட்சி வட்டாரங்களில் நிலவுகிறது.ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்ற பின், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, கனிமொழி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

டில்லி அரசியலில், தன் பிரதிநிதியாக, கனிமொழி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான், கனிமொழிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவியை கருணா நிதி வழங்கிஉள்ளார். ஆனால், கனிமொழிக்கு, கட்சி ரீதியாக, "பவர்புல்' பதவி இல்லை என்ற அதிருப்தி, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இம்மாதம், 8ம் தேதி, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கனிமொழி பங்கேற்றார். கருணாநிதி, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் அதிகமாக தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது, கனிமொழியின் ஆர்ப்பாட்டத்திற்கு தான் என, மத்திய, மாநில உளவுத் துறை போலீஸ் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.,வில் மகளிர் அணியை வலுப்படுத்தவும், லோக்சபா தேர்தலை ஒட்டி, கருணாநிதியின் பிரதிநிதியாக, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்வதற்கும், கனிமொழி தயார்படுத்தப்படுகிறார்.தென் மாவட்டங்களில், நாடார் சமுதாயத்தினரின் ஆதரவு, கனிமொழிக்கு நிரந்தரமாக இருப்பதால், தற்போது, வட மாவட்டங்களில், வன்னியர் சமுதாய ஓட்டுகளை கவருவதற்கும், அம்மாவட்ட அரசியலில், கனிமொழி தீவிரம் காட்ட துவங்கியுள்ளார்.காதல் விவகாரம் தொடர்பாக, தற்கொலை செய்து கொண்ட, தர்மபுரி இளவரசனுக்கு, சென்னையில் ரோட்டரி கிளப் சார்பில், சமீபத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி, குறிப்பிட்ட, இரண்டு சமுதாயத்தினருக்கும், பொதுவான கருத்துக்களை பதிவு செய்து, அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நாடார் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக, சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, அவர், "தான் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், தன் பதவியை கனிமொழிக்கு வழங்க வேண்டும்' என, கருணாநிதிக்கு கடிதம் எழுதி அனுப்பிவைத்துள்ளதாகவும், ஒரு செய்தி, கட்சியினர் மத்தியில் திடீரென கசிந்தது.அதே சமயம், "சற்குணபாண்டியன், தன் பதவியை ராஜினாமா செய்யவில்லை' என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சற்குண பாண்டியன், தன் பதவியை தாரை வார்த்து தான், கனிமொழிக்கு பதவி வாங்க வேண்டிய அவசியமில்லை. கனிமொழிக்கு எப்போது, என்ன பதவி வழங்க வேண்டும் என்பது, கருணாநிதிக்கு தெரியும். டில்லி அரசியலுக்கு கனிமொழி என்பதை, கருணாநிதி ஏற்கனவே தீர்மானித்து விட்டார். கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலர் பதவி வழங்கினால், அப்பதவி, "புரட்டேகால்' படி தென் மண்டல அமைப்புச்செயலர் அழகிரியின் பதவிக்கு முன்னதாக வரும்.தன் தங்கை, தன் பதவியை விட, உயர்ந்த பதவியில் அமருவதை, அழகிரி விரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அழகிரியை பொறுத்தவரையில், தன் தம்பி ஸ்டாலின், தன் பதவியை விட, பொருளாளர் என்ற உயர் பதவியில் இருக்கும் போது, தங்கை கனிமொழி உயர் பதவியில் இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என, கருணாநிதியிடம் தெரிவித்து விட்டார். கருணாநிதியை பொறுத்தவரையில், தன் குடும்பத்தினரும், கட்சியினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, புதிய பதவியை, கனிமொழிக்கு உருவாக்கி கொடுக்க திட்டமிட்டுள்ளார். அது எந்த பதவி என்பது தான், "சஸ்பென்ஸ்' ஆக இருக்கிறது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
dinamalar.com
- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக