செவ்வாய், 2 ஜூலை, 2013

நீரா ராடியா உரையாடலை ஆதாரமாக்க ஆ. ராசா கடும் எதிர்ப்பு!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை ஒரு ஆதாரமாக பதிவு செய்ய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் வரும் 9-ந் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சிடிக்களை ஆராய குழு ஒன்று உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது. 6 பேர் கொண்ட குழு ஒன்றும் இந்த சிடிக்களை ஆராய்ந்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மொத்தம் உள்ள 5,800 உரையாடல்களில் 62 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பானவை என்று அரசு வழக்கறிஞர் லலித் கடந்த வார விசாரணையின் போது கூறியிருந்தார். இந்த உரையாடல்களையே ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு ஆதாரமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் டாடா குழுமத்தின் சார்பில் கடந்த வாரம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது நீரா ராடியா உரையாடல்களை இந்த வழக்கில் ஆதாரமாக பயன்படுத்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 9-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதே நாளில் தொழிலதிபர் அனில் அம்பானியை சாட்சியமாக விசாரிக்கக் கோரும் சிபிஐ மனு மீதும் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக