திங்கள், 1 ஜூலை, 2013

ஸ்டாலின்: காங்., - தி.மு.க., கூட்டணி இப்போதைக்கு இல்லை

மதுரை: ""தமிழகத்தில் காங்கிரஸ் உடனான கூட்டணி என்பது இப்போதைக்கு இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரையில், கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் நிதியளிப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதாவது:ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றதை பலராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொதுத்தேர்தலின் போது மக்களிடம் ஓட்டு கேட்பது போல் தான், ராஜ்யசபா தேர்தலிலும், காங்கிரஸ் உட்பட கட்சிகளிடம் ஆதரவு கேட்டோம். எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சி என்ற, உரிமையில் ஆதரவு கேட்டோம். அவ்வளது தான். இதனால், பொதுத் தேர்தல்களிலும், இக்கூட்டணி தொடரும் என்பது அர்த்தமில்லை. ராஜ்யசபா தேர்தலில், 23 எம்.எல்.ஏ.,க்களை மட்டும் வைத்து, வெற்றி பெற்றது கருணாநிதியின் ராஜதந்திரம்.
"அ.தி.மு.க.,வுடன் தி.மு.க., கூட்டணி வைத்தது' என, விஜயகாந்த் கூறுகிறார். அவர் தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தார். அவரது, எம்.எல்.ஏ.,க்கள் தான், அ.தி.மு.க.,விற்கு வாக்களித்துள்ளனர்.சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லாதது என, முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இத்திட்டம் தேவை என்று, ஆவேசமாக, பேசிய ம.தி.மு.க., பொது செயலர் வைகோ, இப்போது ஏன் பேசுவதில்லை. பல கூட்டங்களில் இதை நான் குறிப்பிட்டும் அவர் பதில் கூறவில்லை.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்போம் எனக் கூறுகின்றனர். ஆனால், மாநில குற்றத் தகவல் ஆணையத்தின் புள்ளி விவரப்படி, 2011 ஆக., முதல் 2012 ஆக., வரை, 1 லட்சத்து 34,949 வழக்குகள், தமிழகத்தில் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட இரு மடங்காகும். மதுரையிலும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
"முதல்வர்' கோஷம்:

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் அனைவரும், "ஸ்டாலின் தான் அடுத்த தலைவராகி கட்சியை வழி நடத்த வேண்டும்; அவருக்குத் தான் தகுதி உண்டு. கட்சியில் வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை' என்று ஆவேசமாக பேசினர். முதல்வர் பதவி அவருக்குத் தான் கொடுக்க வேண்டும் என, கதைகளை கூறியும் சிலர் பேசினர். இதை ஸ்டாலினும் ரசித்துக் கேட்டார். அவர் பேசுகையில், ""மதுரையில் இப்போதுதான், புதிய உற்சாகம், உத்வேகம் ஏற்பட்டுள்ளது,'' என குறிப்பிட்டார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக