புதன், 17 ஜூலை, 2013

பீகார்:மதிய உணவு சாப்பிட்ட 11 குழந்தைகள் பலி - 48 பேருக்கு தீவிர சிகிச்சை

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 11 குழந்தைகள் பரிதாபமாக இறந்து விழுந்தனர். மேலும் 48 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாப்ரா நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்மாசதி கண்டமான் என்ற கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு நேற்று இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில், ஏறத்தாழ 80 மாணவர்களுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இந்த தகவல் ஊருக்குள் பரவியதும், பெற்றோர்கள் அலறியடித்தபடி பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். மயங்கி விழுந்த மாணவர்கள் அனைவரும், உடனடியாக அருகில் உள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 11 குழந்தைகள் பலி ஆனால், அவர்களில் குஞ்சன் குமார், அன்ஷு குமார் ஆகிய 2 பேர், வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். மற்ற குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மேலும் 9 குழந்தைகள் இறந்துவிட்டனர்.

பலியான 11 பேரில், சோனி குமாரி, பேபி குமாரி உள்பட 3 பேர் மாணவிகள். மேலும் 48 பேருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரிக்கு தேவையான கூடுதல் மருந்து - மாத்திரைகள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 12 பேர் கவலைக்கிடம் சிகிச்சை பெறும் மாணவர்களில் 12 பேருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பள்ளிக் கூடத்தில் மதிய உணவாக அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயாபீன்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த உணவை சாப்பிட்டதும் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. நிதிஷ்குமார் அவசர ஆலோசனை தகவல் அறிந்ததும், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த துயர சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தடய அறிவியல் ஆய்வக குழுவினர் உதவியுடன், போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் கோட்ட ஆணையாளர் ஆகியோர் இணைந்து இந்த விசாரணையை நடத்துவார்கள் என்று, முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். தலா ரூ.2 லட்சம் உதவி பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் உதவிப்பணம் வழங்கவும் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற சாப்ரா பகுதி, பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் வெற்றி பெற்ற பாராளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக