சனி, 1 ஜூன், 2013

சாந்தி MLA: தே.மு.தி.க.-வில் விஜயகாந்துக்கே நடித்து காட்ட கூடிய இருவர் உள்ளார்கள்

சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி,
தமது கட்சிக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக மர்மநபர்கள் போன் மூலம் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்கிறார். அத்துடன், தாம் முதல்வரை சந்தித்ததை அடுத்து கட்சிப் பிரமுகர்கள், சென்னையில் பிரியாணி விருந்து வைத்து கொண்டாடி உள்ளனர் என்றும் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி, கடந்த 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அதன்பிறகு, தற்போது அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் என்ன சொல்கிறார்? “கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியில் நான் சந்திக்காத அவமானங்கள் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில், எந்த விழாவிற்கும் கட்சியினர் என்னை அழைக்கவில்லை. இதற்கு நாமக்கல் மாவட்டச் செயலரும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாகவுமான சம்பத்குமார், மாநிலப் பொருளாளர் இளங்கோவன் ஆகியோர்தான் காரணம். ஜாதி அடிப்படையில் என்னை ஓரங்கட்ட பார்த்தனர். இது குறித்து கட்சி தலைவர் விஜயகாந்திடம் புகார் தெரிவிக்க முயன்ற போது, மாநில நிர்வாகி சந்திரகுமார் அனுமதி கொடுக்கவில்லை. “விரைவில், பிரச்னையை தீர்த்து வைக்கிறேன்” என்று சமாளிப்பதிலேயே குறியாக இருந்தார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் புகார் தெரிவித்தேன். “யாரும் வராவிட்டாலும், மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில், நீங்கள் தனியாக சென்று கலந்து கொள்ளுங்கள்” என அவர் கூறினார்.

மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, மாநில நிர்வாகமும் என்னை புறக்கணித்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இரண்டு ஆண்டுகள் பொறுமையாக இருந்த நான், முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். இதற்காக யாரையும் அணுகவில்லை.
நேரடியாக முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அனுமதி பெற்றேன். முதல்வரை சந்திப்பதற்காக நான் கோடி கோடியாக பணம் பெற்றதாக சொல்கின்றனர்; அதில் உண்மையில்லை. தொகுதி பிரச்னைக்காக மட்டுமே முதல்வரை சந்தித்தேன்.
நான் அ.தி.மு.க. விசுவாசி என்பதால் தான் முதல்வரை சந்தித்ததாக கூறுகின்றனர். நான் 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க.வில், சீட் கேட்டது உண்மைதான். இது குறித்து விஜயகாந்திடம் சொல்லியிருக்கிறேன். அதை தெரிந்துதான், அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் வழங்கினார்.
நான் முதல்வரை சந்தித்த நிகழ்வை இளங்கோவனும், சம்பத்குமார் எம்.எல்.ஏ.வும், சென்னையில் பிரியாணி விருந்து வைத்து கொண்டாடி உள்ளனர். ஆனால், பிரியாணி விருந்து முடிந்தபின், விஜயகாந்திடம் போய் வருத்தமான முகத்துடன் அவர்கள் விளக்கமளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
என்னைப் போலவே மேலும் சிலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களும் ஒரு கட்டத்தில் வெளியேறுவது நிச்சயம்” என்கிறார் சாந்தி.
இவர்களது கட்சி தலைவர் விஜயகாந்தே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர். கட்சிப் பிரமுகர்கள் இருவர் பிரியாணி விருந்து முடிந்தபின், விஜயகாந்திடமே போய் வருத்தமான முகத்துடன் விளக்கமளித்து நடித்துள்ளதாக இவர் சொல்கிறாரே…
ஒருவேளை அவர்கள் இருவரும் சினிமாவில் நடித்திருந்தால், விஜயகாந்தைவிட பட்டையை கிளப்பியிருப்பார்களோ! viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக