புதன், 12 ஜூன், 2013

IPL சூதாட்ட தரகர்களின் Code Word 'பாவ் ஏக் ருப்யா'

மும்பை: ஐபில் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த கும்பல் சிக்க
காரணமாக இருந்த 3 வார்த்தைகள் இது தான் 'பாவ் ஏக் ருப்யா'. இதற்கு அர்த்தம் விலை ஒரு ரூபாய். ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக போலீசார் மும்பை கல்பாதேவி பகுதியில் திடீர் சோதனை நடத்தி 92 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதில் 30 போன்கள் பாகிஸ்தானுக்கு கால் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 3 போன்கள் துபாய்க்கு போன் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. போலீசார் வந்து கதவைத் தட்டியவுடன் தரகர் ரமேஷ் வியாஸ் ஒரு போன் செய்து பாவ் ஏக் ருப்யா என்று மட்டும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன் பிறகு போலீசார் தரகர்கள் ரமேஷ் வியாஸ், அசோக் வியாஸ் மற்றும் பாண்டுரங் கதம் ஆகியோரை கைது செய்தனர். ரமேஷ் வியாஸ் போனில் பேசியவுடன் தரகர்கள் நெட்வொர்க்கின் அனைத்து போன்களின் இணைப்பும் சில நொடிகளில் துண்டிக்கப்பட்டன.
தரகர்களின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து வந்த டெல்லி போலீசாருக்கு திடீர் என்று அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது வியப்பளித்தது. இந்நிலையில் போலீஸ் விசாரணையில் ரமேஷ் வியாஸ் கூறுகையில், பாவ் ஏக் ருப்யா என்று கூறி தரகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தேன் என்றார். தரகர்கள் அனைவரும் உஷாரானதையடுத்து டெல்லி போலீசார் விரைந்து வந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா ஆகியோரை கைது செய்தனர். ஐபிஎல் போட்டிகள் முடியும் வரை காத்திருந்தால் மும்பை போலீசார் முந்திக் கொள்வார்கள் என்று நினைத்த டெல்லி போலீஸ் அவசர அவசரமாக வந்து அந்த 3 வீரர்களை கைது செய்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வியாஸ் கைதான உடனேயே அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால் மும்பை போலீசார் தான் பிக்ஸிங் குறித்து முதலில் அனைத்து விவரங்களையும் பெற்றிருப்பார்கள். ரமேஷ் வியாஸ் துபாய் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். வியாஸ் மூலம் தான் பாகிஸ்தான் தரகர்கள் இந்திய தரகர்களை தொடர்பு கொண்டுள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த வியாஸை டெல்லி போலீசார் கைது செய்தனர்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக