திங்கள், 10 ஜூன், 2013

F I R பதியாமல் இழுத்தடிக்கும் போலீசாருக்கு ஓராண்டு சிறை

புதுடில்லி: "முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) உடனடியாக பதிவு செய்யாத போலீசார், அதிகபட்சம், ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்படுவர். எனவே, குற்றங்கள் நிகழ்ந்த, தகவல் அறிந்த உடனேயே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்' என, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில், கடந்த ஆண்டு, மருத்துவ மாணவி, கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதும், 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்திலும், போலீசார், உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை என்பது, புகாராக உள்ளது. இந்நிலையில், உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:வழக்கு தொடர வேண்டிய வகையிலான குற்றம், ஒரு இடத்தில் நடந்துள்ளது என்பதை அறிந்த உடனேயே, அது குறித்து தகவல் கிடைக்கப் பெற்ற உடனேயே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்; அவ்வாறு செய்யாததால், குற்றவாளி தப்பி விடுகின்றனர்.இதைத் தவிர்க்க, உடனடியாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதுடன், குற்றவாளிகளை தப்ப விடாமல், கைது செய்ய வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் மீது நடவடிக்கை எடுத்த பிறகு, அந்த பகுதி தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதி இல்லை என்பதை அறிந்தால், முதல் தகவல் அறிக்கையை, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிக் கொள்ளலாம்.இதை செய்யத் தவறும் போலீசார் மீது, இந்திய குற்ற நடைமுறைச் சட்டம், 166 ஏ-யின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, போலீசார் கைது செய்யவும் படுவர். கைதாகும் போலீசாருக்கு, அதிகபட்சம், ஓராண்டு வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக