திங்கள், 3 ஜூன், 2013

தண்ணீர் ஒரு அடிப்படை உரிமை ! Bottle களில் இருந்து தண்ணீரை மீட்போம்

வீட்டுக்குள் குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது என்ற வசதி உலகில் சுமார் 50% மக்களுக்கு இன்னும் போய்ச் சேராத நிலைமை. இவர்கள் வீட்டில் அந்தக் கவலை எல்லாம் இல்லை. சமையலறை, கழிவறை, குளியலறை, முகம் கழுவும் வாஷ் பேசின், தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற என்று எல்லா இடங்களிலும், எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது.
ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (எதிர் சவ்வூடு பரவல்) முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மாடியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பப்பட்டு, குடி தண்ணீர்க் குழாய்களில் வருகிறது. குடிக்க, சமைக்க, குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ அதையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் குளித்தால் ஒத்துக் கொள்வது இல்லை.
சமையலறையிலும், குளியலறையிலும் சுடு தண்ணீர்க் குழாய், குளிர்ந்த தண்ணீர்க் குழாய் என்று இருபுறமும் இருக்கும். தேவைக்கேற்ற சூட்டில் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவசரமாக இருந்தால் ஷவரில் குளித்து விட்டுப் போய் விடுவார்கள். மாலை வேளையில் அலுப்புத் தீர முழுகிக் குளிப்பதற்காக குளியல் தொட்டி(பாத் டப்)யில் நீரை நிரப்பி, அதில் அழுந்திக் குளித்து புத்துணர்ச்சி பெற்றுக் கொள்வார்கள்.
துணி துவைப்பதற்கான எந்திரத்தில் தினமும் ஒரு சுமை துணி துவைக்கப்படும். 4 பேரின் இரவு உடை, ஜிம் உடை, அலுவலக உடை, மாலை உடை என்று குறைந்த பட்சம் ஆளுக்கு 4 செட் துணிகளைத் தினமும் துவைக்க வேண்டும். கூடவே, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், தலை துவட்டும் துண்டுகள், கை துடைக்கும் துண்டுகள் என்று சில நாட்களில் இரண்டு லோடு கூட எந்திரத்தில் போட வேண்டி வரும்.

ஃபிளஷ் டாய்லெட்டில் ஒவ்வொரு முறையும் சுமார் 20 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. (இதற்கு சுத்திகரிக்கப்படாத தண்ணீரைத்தான் இணைத்திருக்கிறர்கள்). கூடவே 5,400 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இரண்டு தள வீட்டின் அறைகளையும், ஹால்களையும், வெளி வராந்தாக்களையும், துடைப்பதற்கும், கழுவுவதற்கும், தோட்டத்தில் மரம், செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்கும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.
வேலை செய்ய வருபவர்களைச் சேர்க்காமல் இந்த 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு மட்டும் தினமும் 2600 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும், சுமார் 1400 லிட்டர் சுத்திகரிக்கப்படாத தண்ணீரும் செலவாகிறது. மொத்தம் 4000 லிட்டர் அல்லது 200 குடம் தண்ணீர்.
எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது? 450 அடி ஆழத்திற்கு ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டி அதிலிருந்து மோட்டர் வைத்து நிலத்தடி நீரை மேற்தொட்டிக்கு ஏற்றிக் கொள்கிறார்கள். இது போக 10,000 லிட்டர் தனியார் டேங்கர் லாரி ஒன்றை வரவழைத்து நல்ல தண்ணீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதற்கு வாரத்துக்கு ரூ 2000 வரை செலவழிக்கிறார்கள். அந்தத் தண்ணீரை ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் சுத்திகரிப்பதற்கு வேறு தனியாக செலவாகிறது. தண்ணீருக்காக மாதத்துக்கு ரூ 15,000 செலவழிக்கிறார்கள்.
வார இறுதியைக் கழிப்பதற்கு கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டிற்கு போகிறார்கள். அந்த ரிசார்ட்டில் சேவை ஐந்து நட்சத்திர தரத்தில் இருக்கும். படுக்கைகளில் வெள்ளை நிற விரிப்புகள், 2 குளியல் டவல்கள், 2 கை டவல்கள், பாத் டப் என்று ஒவ்வொருவருக்கும் வீட்டில் பயன்படுவதை விடச் சிறிது அதிகம் தான் தண்ணீர் செலவாகும். கூடவே, அவர்களது குடிலுடன் இணைந்த நீச்சல் குளத்தில் 50,000 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு அவ்வப்போது வெளியேற்றப்படுகிறது.
இது ஒரு வாழ்க்கை.
05-water-1னால், இவர்கள் வாழும் சென்னை மாநகரில் தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குறை. தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மல்டி பிளெக்சுகள், உல்லாசப் பூங்காக்கள், வணிக நிறுவனங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகள், சொகுசு மருத்துவமனைகள் என்று வெகுவாக வளர்ந்து விட்ட சென்னையின் மக்கள் தொகை 70 லட்சத்தைத் தொட்டு விட்டிருக்கிறது. ஒரு மனிதர் சுத்தமாக, ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் தண்ணீர் (7 குடம்) தேவை. அந்த அடிப்படையில் சென்னையின் ஒரு நாள் தண்ணீர் தேவை 147 கோடி லிட்டர்கள். ஆனால் ஏரிகளிலிருந்து எடுக்கப்படும் நீர், நகருக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்படும் நிலத்தடி நீர், நடைமுறையில் செயல்படாத தெலுங்கு கங்கை திட்டம் என்று எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு 60 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே சென்னை குடிநீர் வாரியத்தால் விநியோகிக்கப்படுகிறது. கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போது 30 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
இத்தோடு, நிலத்தடி நீரையும் சேர்த்து ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு கிடைக்கும் சராசரி நீரின் அளவு 107 லிட்டர் மட்டுமே. இது இந்தியாவின் வேறு எந்த நகரத்தை விடவும் குறைவு. இதுவும் மழை அளவைப் பொறுத்து ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகிறது. பற்றாக்குறை ஆண்டுகளில் நபருக்கு 50 லிட்டர் என்ற அளவில்தான் தண்ணீர் கிடைக்கிறது. இந்த சராசரியில் ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 லிட்டர் வரை பயன்படுத்தும் மேட்டுக்குடியினரும் உண்டு, ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தும் சேரிகளில் வசிக்கும் 3.5 லட்சம் மக்களும் உண்டு. பெரும்பான்மை மக்கள் கொஞ்சம் அதிகமாக 80 லிட்டர் வரை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு சராசரி உழைக்கும் வர்க்கக் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் (10 குடம்) கிடைத்தாலே பெரிது. வாரத்துக்கு ஒரு முறை தெம்பில்லாமல் வந்து பாயும் சென்னைக் குடிநீர் வாரிய குழாய் தண்ணீர், அதுவும் வந்து எட்டாத பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒரு முறை மெட்ரோ டேங்கரில் வரும் தண்ணீர் என்று மக்கள் ஓடி ஓடி சேகரித்துக் கொள்கிறார்கள்.
தேனாம்பேட்டையில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் வள்ளுவர் கோட்டம் அருகில் இருக்கும் சென்னைக் குடிநீர் வாரியத்தின் லாரிகளுக்கான நீர்பிடிப்பு நிலையத்திற்குப் போய் அங்கு சிதறும் தண்ணீரைப் பிடித்து வருகிறார்கள். சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் நிலைமை இப்படித்தான்.
தண்ணீர் மனித உரிமைகுடிக்க, சமைக்க 4 குடம், பாத்திரம் கழுவ 2 குடம், 4 பேர் குளிக்க 4 குடம், துணி துவைக்க 4 குடம், கழிவறைக்கு 2 குடம் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு நாளைக்கு 20 குடம் தேவைப்படுகிறது. இதற்கு மேல் வாசல் கழுவுவது,வீடு துடைப்பது/கழுவுவது, பெட்ஷீட்டுகளைத் துவைப்பது என்பதெல்லாம் வெயில் காலம் தாண்டி தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன. தண்ணீர் கொண்டு வருவதற்காக தினமும் காலையில் 2 மணி நேரம் அலைகிறார்கள். இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் கொண்டு வருவதற்காக பெட்ரோலுக்கு மாதம் ரூ 600, 700 செலவழிக்கிறார்கள்.
இது அதே சென்னையின் இன்னொரு வாழ்க்கை.
சென்னை வேகமாக வளர்ந்திருக்கிறது. விவசாயம் அழிந்ததால், விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக்கி விற்கப்பட்டதால் நகருக்கு இடம் பெயர்ந்த சிறு நில உடமையாளர்கள், விவசாயக் கூலிகள், தொழிற்சாலைகளுக்கு நிலத்தை பறி கொடுத்து விட்டு வந்தவர்கள், சென்னையைச் சுற்றிப் புதிதாக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், புதிய வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் வட மாநிலத் தொழிலாளர்கள் என்று சென்னையின் மக்கள் தொகை ஊதிப் பெருத்துக் கொண்டே போகிறது.
ஆனால், சென்னையில் ஒரு ஆண்டுக்குப் பெய்யும் மழை சராசரியாக ஒரு நாளைக்கு 55 கோடி லிட்டர்கள் அளவில்தான் நல்ல நீரைத் தருகிறது. பூண்டி-செம்பரம்பாக்கம்-செங்குன்றம் ஏரிகளில் தேக்கி வைத்தோ, மழை நீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீரை உயர்த்தியோ, அல்லது கடலில் சேர்ந்த நீரை ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மூலம் சுத்தப்படுத்தியோ எடுக்க முடிவது இவ்வளவுதான். இந்தத் தண்ணீரை வைத்து 15 லட்சம் மக்கள், அவர்களது வாழ்க்கையை ஒட்டிய வணிக நிறுவனங்கள், அவர்கள் வேலை செய்வதற்கான தொழிற்சாலைகள் மட்டுமே சென்னையில் செயல்பட முடியும். ஆனால், இப்போது இருக்கும் சென்னை வாசிகளின் எண்ணிக்கை 70 லட்சம்.
05-water-2பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரித் தொகுப்பிலிருந்து ஒரு நாளைக்கு 20 கோடி லிட்டர்கள் தண்ணீர் வரை சென்னையின் தேவைக்கு கிடைக்கிறது. தெலுங்கு கங்கைத் திட்டம் மூலம் ஆந்திராவில் கண்டலேறுவிலிருந்து கிருஷ்ணா ஆற்று நீரை சென்னைக்குக் கொண்டு வரும் திட்டத்தை வகுத்தார்கள். அதன்படி ஒரு நாளைக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வர வேண்டும். ஆனால், ஆந்திராவின் தேவைகள் போக அதில் சிறு பகுதி கூட சென்னையின் தேவைக்கு கிடைப்பதில்லை. கூடுதலாக, சென்னையிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வீராணம் ஏரியிலிருந்து ஒரு நாளைக்கு 18 கோடி லிட்டர், போரூர் — ரெட்டேரியிலிருந்து 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இதற்கு மேல், வட சென்னையின் மணலி பகுதியில் உள்ள விவசாய கிராமங்களிலும், தென் கடற்கரை கிராமங்களிலும், பாலாறு படுகையிலும் ராட்சஸ ஆழ்குழாய் கிணறுகளை ஏற்படுத்தி சென்னை குடிநீர் வாரியம் 24 மணி நேரமும் நிலத்தடி நீரை இறைத்துக் கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக நாளொன்றுக்கு 6,000 டேங்கர் (6 கோடி லிட்டர்) தண்ணீர் வட சென்னையின் கிணறுகளிலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. பாலாற்றுப் படுகையிலிருந்து நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் தண்ணீர் இறைக்கப்படுகிறது.
இவை தவிர தனியார் அடுக்கக கட்டிடங்கள், பங்களாக்களில் குழாய் கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு 24 கோடி லிட்டர் நிலத்தடி நீர் இறைக்கப்படுகிறது. இப்படியாக முட்டி மோதி, நகரை உயிருடன் வைத்திருப்பதற்காகத் திரட்டப்படும் தண்ணீரில் பெரும்பகுதி, மறுபடியும் நிரப்ப முடியாத நிலத்தடி நீர்.
த்தகைய கடும் பற்றாக்குறை நிலவும் சூழலில், தண்ணீர் யாருக்கு எவ்வளவு போய்ச் சேர வேண்டும் என்று எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் கீழ் காசு இருப்பவன் தான் ராஜா என்பதால் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நட்சத்திர விடுதிகள், பணக்காரர்களின் பங்களாக்கள், மேட்டுக்குடியினரின் அடுக்ககங்கள் தமக்குத் தேவையான முழு அளவுத் தண்ணீரையும் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் முதல் தனியார் டேங்கர்கள் வரை, நிலத்தடி நீர் இறைப்பதற்காக பம்புகள் வரை அடிபணிந்து சேவை செய்ய அணிவகுத்து வருகின்றன.
பாட்டில்களிலும், பாக்கெட்களிலும் தண்ணீர் அடைத்து விற்கும் பணியை நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் செய்து வருகின்றன. விவசாய நிலங்களைக் கைப்பற்றி அவற்றில் குழாய்களை இறக்கி, தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை இறைத்து பாட்டில்களில் அடைத்து, லாரிகளில் கொண்டு சென்று விற்கின்றனர்.
பாக்கெட்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும் விற்கும் 450 தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தினமும் சுமார் 50 லட்சம் அளவில் 250 மி.லி. பாக்கெட்களும், சுமார் 3.5 லட்சம் அளவில் 20-லிட்டர் கேன் தண்ணீரும் சென்னையில் விற்பனை ஆவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1 லிட்டர் பாட்டில்கள், 10,000 லிட்டர் டேங்கர்கள் இவற்றையும் சேர்த்து சென்னையின் தண்ணீர் சந்தையின் மொத்த மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ 500 கோடி முதல் ரூ 700 கோடி வரை. இவற்றில் பல நிறுவனங்களின் தண்ணீர் மாசு பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், யாரும் தண்டிக்கப் படவுமில்லை. தண்ணீர் வியாபாரம் தடைபடவும் இல்லை.
எங்கிருந்து வருகிறது தண்ணீர் ?
விவசாய விளைநிலங்களாக இருந்த பூந்தமல்லி-ஆவடி சாலையின் இருமருங்கிலும் உள்ள நிலங்கள் இரக்கமின்றி சுரண்டப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 30-35 டேங்கர் லாரிகளில் இங்குள்ள நிலத்தடி நீர் நிரப்பப்பட்டு ஒவ்வொரு டேங்கர் தண்ணீரும் ரூ 1000 விலைக்கு நகருக்குள் விற்கப்படுகின்றன. பெசன்ட் நகரிலும், பல்லடுக்கக வளாகங்களிலும் நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் நாள் முழுவதும் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன.சென்னையின் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து நீரை உறிஞ்சிக் கொண்டு, நாளொன்றுக்கு சுமார் 13,000 டாங்கர் லாரிகள் சென்னைக்குள் வருகின்றன.
1987-ம் ஆண்டு இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதி நிலத்தடி நீர் (ஒழுங்குமுறை) சட்டத்தின்படி சென்னையை சுற்றியுள்ள 302 கிராமங்களில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்துக்காக எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனியார் டேங்கர்கள் மட்டுமின்றி அரசு சார்ந்த வாரியங்களும் இந்தத் தடையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்தூர் கிராமத்தில் போலோ, அக்வா என்ற இரண்டு தனியார் தண்ணீர் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, நிலத்தடி நீரை உறிஞ்சி, சுத்தப்படுத்தி விற்கின்றன.
05-water-4தனியார் நிறுவனங்களும், சென்னை குடிநீர் வாரியமும், பல்லடுக்கக வளாகங்களும் போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சியதில் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 80% குறைந்திருக்கிறது. வளசரவாக்கம், கே கே நகர், அண்ணா நகர், இராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் இரும்புச் சத்து அதிகமாகி மஞ்சள் நிறமாக தண்ணீர் வருகிறது. மந்தைவெளி, அண்ணா நகர், இந்திரா நகர், வேளச்சேரி, தரமணி பகுதிகளில் உப்புத்தன்மை அதிகரித்திருக்கிறது. பெசன்ட் நகர் பகுதியில் கடல் நீர் உள் புகுந்திருக்கிறது. பொதுவாகவே நகரின் நிலத்தடி நீரில் கார்பனேட், நைட்ரேட் உப்புக்களின் அளவு அதிகமாகி, குடிக்க லாயக்கில்லாமல் போயிருக்கின்றது.
சென்னை குடிநீர் வாரியம் நிலத்தடி நீரை எடுப்பதற்காக ஏற்படுத்திய ராட்சச ஆழ்குழாய் கிணறுகளில் பல வறண்டு கைவிடப்பட்டிருக்கின்றன. 1969-ல் தாமரைப்பாக்கம், பஞ்செட்டி, மீஞ்சுர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் நாளொன்றுக்கு 12.5 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன. ஆனால், 2005-ம் ஆண்டு முதல் அந்தக் கிணறுகளிலிருந்து 55 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. அதே போல ஒரு நாளைக்கு 5.5 கோடி லிட்டர் எடுக்க திட்டமிடப்பட்ட பூண்டி, கண்ணிகைபேர், கொரட்டேலி ஆறு போன்ற நீராதாரப் பகுதிகளிலிருந்து 2005-ம் ஆண்டு முதல் 71 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியூர் கிராமத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இந்த கிராமத்தில் 804 ஏக்கர் பரப்பளவிலான ஒரு குளம் இருந்தாலும், நிலத்தடி நீரை நம்பியே நெல், நிலக்கடலை விவசாயம் நடந்து வந்தது. 1990-க்குப் பிறகு நீர் மட்டம் குறைந்ததால் 60-க்கும் மேற்பட்ட கிணறுகள் பாழடைந்து போயிருக்கின்றன. 1980-ல் 50 முதல் 80 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட 280 கிணறுகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வந்தது. இப்போது 130 முதல் 160 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட 220 கிணறுகள் செயல்படுகின்றன. கிராமத்தின் விவசாயம் முழுமையாக செயலிழந்து போனதோடு மட்டுமின்றி கிராமத்துக்குத் தேவையான குடிநீர் கூட கிடைப்பதில்லை;
பாலாற்றுப் படுகையில் உள்ள பழைய சீவரம் கிராமத்தில் 1980-ல் 24 முதல் 27 அடி ஆழத்திலான 71 கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. 2004-ம் ஆண்டில் 60 முதல் 100 அடி ஆழப்படுத்தப்பட்ட 150 கிணறுகள் இருந்தன. அவற்றில் 20 கிணறுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் நிலையில் உள்ளன. 1985-ல் பெருமளவில் நடைபெற்று வந்த விவசாயம், 2004 வாக்கில் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது
தண்ணீர் ஏற்றுமதி !
பொழுதுபோக்கு பூங்காஇந்தச் சூழலில் ஒவ்வொரு நாளும் சென்னை துறைமுகத்திலிருந்து பல கோடி லிட்டர் தண்ணீர் ஏற்றுமதி ஆகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம், 1990-களுக்குப் பிறகு சென்னையில் ஏற்படுத்தப்பட்ட ஹூயுண்டாய், நிஸ்சான், பிஎம்டபிள்யூ, டைம்லர், ஃபோர்டு ஆகிய கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 750 கார்களை ஏற்றுமதி செய்கின்றன. 1.1 டன் எடை உடைய ஒரு காரின் உற்பத்தியோடு தொடர்புடைய அனைத்து மனித, தொழில், வணிக நடவடிக்கைகளும் 3.5 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன. அந்தக் காரை இறக்குமதி செய்யும் நாடு 3.5 லட்சம் லிட்டரை சேமித்துக் கொள்கிறது. அந்த வகையில் சென்னையில் 25% உற்பத்தி நடவடிக்கைகள் நடப்பதாக வைத்துக் கொண்டால் சென்னை ஒரு நாளைக்கு 6.5 கோடி லிட்டர் தண்ணீரை ஏற்றுமதி செய்கிறது.
குடிநீருக்கு தட்டுப்பாடு ! பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இல்லை கட்டுப்பாடு !!
ஒரு ஆண்டுக்கு உற்பத்தியாகும் சுமார் 7 லட்சம் மொத்தக் கார்களை எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 16 கோடி லிட்டர் தண்ணீரை குடிக்கும் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னையிலும், இந்தியாவின் பிற நகரங்களிலும், உலகின் பிற நாடுகளிலும் வசிக்கும் மேட்டுக்குடியினரின் சொகுசுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. அதற்காக, சென்னை நகரும் நகரில் வாழும் உழைக்கும் மக்களும் கொடுக்கும் விலையை யாரும் கணக்குப் போடுவதில்லை. திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கான சாயப்பட்டறைகளால் நாசமாக்கப்பட்ட ஆறுகள், விளைநிலங்கள், நிலத்தடி நீர் உள்ளிட்ட ஏற்றுமதி சார்ந்த தொழில்களால் நாசமாகும் நீர்வளத்தை இதே போல கணக்கிட்டுக் கொள்ளலாம்.
சென்னையில் உள்ள சொகுசு விடுதிகளில் 4,656 அறைகள் படுக்கைகள் உள்ளன. ஒரு நட்சத்திர விடுதியின் அறைக்கு சுமார் 1,500 முதல் 2,000 லிட்டர் தண்ணீர் செலவு ஆவதாக கூறுகின்றனர் (ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் லிட்டர்). சென்னையில் உள்ள 3 கோல்ப் விளையாட்டு மைதானங்களைப் பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 60 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் செலவிடப்படுகிறது. தனியார் நீச்சல் குளங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். இவற்றுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் மாற்றப்பட்டாலே நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகும். சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் செயல்படும் விளையாட்டுப் பூங்காக்களின் தண்ணீர் விளையாட்டுக்களுக்காக தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் லாபத்துக்காக, ஆனால் மக்களின் நன்மைக்காக என்று சொல்லி புதிய புதிய தொழிற்சாலைகள், அமெரிக்காவுக்கு தொண்டு செய்யும் தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள், தனியார் தொழில்முறைக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் என்று சென்னையை வளர்த்துக் கொண்டே போக திட்டமிடுகிறது ஆளும் வர்க்கம். அந்த வளர்ச்சியின் அழுத்தத்தையும், பற்றாக்குறையையும் சுமப்பது, சுமக்கப் போவது உழைக்கும் ஏழை மக்கள்தான்.
05-water-5சென்னை ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இதனை எல்லா நகரங்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் நகரங்களைக் காட்டிலும் கொடிய தண்ணீர்ப் பஞ்சத்தை இந்தியாவின் கிராமங்கள்தான் அனுபவித்து வருகின்றன. உலகிலேயே மிக அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்திய அரசு நீர்ப்பாசன மராமத்தைப் புறக்கணித்த காரணத்தினால், நாட்டின் 60% விவசாயம் நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றது. கிராமப்புற, நகர்ப்புற குடிநீர் திட்டங்களில் 80% நிலத்தடி நீரைத்தான் நம்பி இருக்கின்றன. பருவங்கள் பொய்க்கின்றன. நிலத்தடி நீரூற்றுகள் வற்றுகின்றன. தண்ணீர் மென்மேலும் அரிய பொருளாக மாறி வருகின்றது.
அரிய பொருட்களை யார் சொந்தம் கொண்டாட முடியும் ?
பணமிருப்பவர்கள்தான். சென்னை நகர குடிநீர் விநியோகம் குறித்த விவரங்கள் இதைத்தான் காட்டுகின்றன. மனித சமூகத்திற்கு மட்டுமின்றி, உயிரினங்கள் அனைத்திற்குமே பொதுவான தண்ணீரை ஒரு விற்பனைச் சரக்காக நம் பண்பாடு கருதியதில்லை. இந்திய அரசியல் சட்டத்தின்படி, நிலத்தின் மேல் உள்ள நீர் அரசு சொத்து. நிலத்தடி நீர், நிலத்தின் உரிமையாளருடையது. நிலத்தடி நீர் தனக்கு சொந்தம் என்ற போதிலும் விவசாயியோ, வேறு யாருமோ தம் தேவைக்கு மேல் அதனை எடுத்ததுமில்லை, விற்றதுமில்லை.
கோல்ஃப் மைதானம்
மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர்தான், தண்ணீர் கொள்ளை முதல் மணற்கொள்ளை வரையிலான அனைத்தும் தலைவிரித்தாடத் தொடங்கின. நீர் நிலைகளையும் நிலத்தடி நீர்வளத்தையும் உறிஞ்சி சூறையாடிய முதலாளித்துவ மாஃபியாக்கள், இப்போது நிலத்தடி நீரை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று கோருகிறார்கள். நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்ற பெயரில் நிலத்தடி நீர்வளம் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, அதனை முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவே ஒரு ஆணையத்தை உருவாக்க இருக்கிறது மன்மோகன் அரசு.
கால்ஃப் மைதானத்தை பராமரிக்கும் நீரைக் கொண்டு ஒரு ஊருக்கே குடிநீர் அளிக்க முடியும் !
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணயம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போல இது தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம். அந்த ஆணையங்கள் தொலைபேசிக் கட்டணம், மின்கட்டணத்தை நிர்ணயிப்பது போல இது தண்ணீரின் விலையை நிர்ணயம் செய்யும். இப்படித் தண்ணீருக்கு விலை வைப்பதன் மூலம்தான் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியுமாம். ஒவ்வொரு மாநிலமும் தண்ணீரை எப்படி சேமிப்பது என்று சொல்லித்தருவதற்காக 15 சர்வதேச ஆலோசனை நிறுவனங்களை ஆசிய வளர்ச்சி வங்கி சிபாரிசு செய்திருக்கிறது.
முன்மாதிரியாக, குஜராத்தின் மோடி அரசு ஒரு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. அம்மாநிலத்தில் 45 மீட்டர் ஆழத்துக்கு மேல் கிணறு தோண்டினாலோ, குழாய் இறக்கினாலோ அரசின் அனுமதி பெற வேண்டும். விவசாயிகள், தாங்கள் பாசனத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரை எப்படி எடுத்தோம் என்று அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும். தவறினால் ரூ 10,000 அபராதம், ஆறு மாதம் சிறை.
தண்ணீர் சிக்கனத்துக்கான தேசிய கழகம் ஒன்றை அமைக்கவிருப்பதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நீச்சல் குளங்கள், கோல்ப் மைதானங்கள், தண்ணீர் விளையாட்டுகள் போன்றவற்றுக்கும் அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படுமோ என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடும்.
இந்த சிக்கனக் கழகத்தை உடனே வரவேற்று முதலில் அறிக்கை விட்டிருப்பது யார் தெரியுமா? பெப்சி நிறுவனம்.
இது பாட்டில் தேசம்தான் – இரண்டு அர்த்தங்களிலும், சந்தேகமே வேண்டாம்.
- செழியன் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக