ஞாயிறு, 23 ஜூன், 2013

ஞானி: கொலைகளுக்குத் தன் அரசாங்க ஆதரவை அளித்தவர்தான் மோடி.

அத்வானி x மோடி : முகமூடிகளின் கதை"
அத்வானி x மோடி : முகமூடிகளின் கதை<
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தி கோவிந்தாச்சாரியா பல வருடங்கள் முன்னர் வாஜ்பாயியை பிஜேபியின் முகமூடி என்று வர்ணித்தார். பின்னர் தான் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுக்கவும் செய்தார். அவர் சொல்லியிருந்தாலும் சொல்லியே இராவிட்டாலும், வாஜ்பாயி பி.ஜே.பிக்கு வாய்த்த அருமையான முகமூடி என்பதில் சந்தேகமில்லை.
பி.ஜே.பி அடிப்படையில் ஆர். எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில், ஆர்.எஸ் எஸ்சின் லட்சியங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் இயங்கும் அரசியல் கட்சி என்பது யார் மறுத்தாலும் மறைக்கமுடியாத உண்மையாகும். இந்துத்துவா என்பது மதவாதம் அல்ல என்றும் தாங்கள் வலியுறுத்துவது பண்பாட்டைத்தான் என்று பிஜேபி எவ்வளவு குரலெழுப்பினாலும், அவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்சின் இதர மத எதிர்ப்பு/வெறுப்புக்கான அரசியல் தத்துவ வடிவம்தான் என்பது நடைமுறையில் அயோத்தி முதல் குஜராத் வரை அம்பலமாகிவிட்டது.

இந்தியாவில் பி.ஜே.பி தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகக் குரல் எழுப்புவதையே ஒரு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் பெருவாரியான மக்கள் இந்த பிற மத விரோத உணர்ச்சியை தங்கள் வாழ்க்கை முறையாக ஏற்கவே இல்லை. அதனால்தான் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டபோதும், வெவ்வேறு அவதாரங்களில் மக்கள் முன்னால் வந்து நின்றபோதும் ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் வடிவத்தால் சுமார் ஐம்பது ஆண்டுகளாகியும் தொண்ணூறுகள் வரை இந்திய ஆட்சி அதிகாரத்தை முற்றாக வசப்படுத்த முடியவில்லை.
அதற்கு பயன்படுத்திய பல உத்திகளில் ஒன்றுதான் முகமூடி உத்தி. நெருக்கடி நிலையின்போது ஜனநாயக் காவலர்கள் என்ற முகமூடியைப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான ஜனசங்கம் கட்சிஎமர்ஜென்சியை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, காங்கிரசுக்குள்ளேயிருந்து இந்திராவை எதிர்த்து வெளியே வந்த மொரார்ஜி போன்ற மதவாதம் இல்லாத தலைவர்களின் அணிகளுடனும், மதவாத எதிர்ப்பாளர்களான சோஷலிஸ்ட் அணிகளுடனும் ஒன்று சேர்ந்து அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது. எல்லாமாக ஜனதா கட்சி என்ற வடிவத்தில் இயங்கினார்கள். இதில் லாபம் அடைந்தது ஜனசங்கம் எனப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மட்டும்தான். வாஜ்பாயி, அத்வானி போன்ற தீவிர ஆர்.எஸ்.எஸ்காரர்கள் முக்கிய அமைச்சரானார்கள். அரசாங்கத்துக்குள்ளேயும் மீடியா உலகிலும் அப்போது ஏராளமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்/அனுதாபிகள் ஊடுருவினார்கள். இன்று அரசிலும் பல ஊடகங்களிலும் முன்னணியில் இருந்தபடிபிஜேபி சார்பு நிலையை ஊக்குவிக்கும் வலிமையான இடத்தை அடைந்த பலர் அப்போது கீழ் மட்டங்களில் ஊடுருவியவர்கள்தான்.
ஜனதா ஆட்சி சில வருடங்களிலேயே உடையக் காரணம் இந்திராவின் அரசியல் சூழ்ச்சிகள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அவை அசல் காரணங்கள் அல்ல. ஜனதா கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் அப்போது இருந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவு /எதிர்ப்பு சக்திகளின் முரண்பாடுகளினால்தான் ஜனதா ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதில் விசித்திரம் என்னவென்றால் இந்திராவின் சர்வாதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல்வடிவமான ஜனசங்கமும் ஜனதாவும் எதிர்த்தபோதே, ஆர்.எஸ்.எஸ் பகிரங்கமாக இந்திராவை ஆதரித்தே அறிக்கை வெளியிட்டு இரட்டை வேடம் போட்டது. முகம் ஒன்றும் முகமூடி ஒன்றும் பேசுவதுதான் தொடர்ந்து பின்பற்றப்படும் உத்தி.
எமெர்ஜென்சியின்போது பல அராஜகங்களுக்குக் காரணமானவரான சஞ்சய்காந்திக்கு நெருக்கமாக இருந்து டெல்லி கவர்னராக முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளை செய்த ஜக்மோகன் பின்னாளில் பிஜேபி அமைச்சரானார். சஞ்சய் காந்தியின் குடும்பம் முழுவதும் பிஜேபியில்தான் இருக்கிறது.
தொண்ணூறுகளில் ஆர்.எஸ்.எஸ் முகமூடி உத்தியை அபாரமாகப் பின்பற்றியது. அத்வானி பகிரங்கமாக ரத யாத்திரைகள் நடத்தி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டவேண்டுமென்ற இயக்கத்தை நடத்தி, இந்து மத சார்பாளர் ஓட்டுகளையெல்லாம் திரட்டுவது, வாஜ்பாயியோ அத்வானி போன்ற தீவிரமத வெறியர் இல்லை என்று காட்டும் செக்குலர் முகமூடி அணிந்து மதவாதத்தில் நம்பிக்கையற்றவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை திரட்டுவது என்று இருமுனைத் தாக்குதலைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். ஒருத்தர் மூலவர். இன்னொருத்தர் உற்சவர் என்ற இந்த உத்தி சிறப்பாக வேலை செய்தது.
ஆனால் இப்போது இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில்தான் அத்வானி- மோடி ‘மோதல்’ என்பது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்.
அத்வானியை விட சுமார் 20 வயது இளையவர் நரேந்திர மோடி. காங்கிரசில் அடுத்த த லைமைக்கான முகமாக 40 வயது ராகுல் காந்தி முன்னிறுத்தப்படும் சூழலில், பிஜேபி(ஆர்.எஸ்.எஸ்), தன்னிடம் இருக்கும் இளம் முகமான மோடியை முன் நிறுத்தவேண்டிய தேவையில் இருக்கிறது.
மோடி இந்துத்துவாவைப் பொறுத்த மட்டில் அத்வானி வழியைச் சேர்ந்தவர். ராமர் கோவில் ரத யாத்திரைகள் மூலம் பகிரங்கமாக இந்துத்துவ நிலையை அத்வானி எடுத்ததைப் போலவே, கோத்ராவையடுத்து குஜராத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் கொலைகளுக்குத் தன் அரசாங்க ஆதரவை அளித்த செயல்வீரர்தான் மோடி.
அத்வானி இடத்துக்கு மோடி இருக்கிறார். ஆனால் வாஜ்பாயி இடத்துக்கு ? இதுதான் இன்றைய பிஜேபி/ஆர்.எஸ்.எஸ்சின் சிக்கல். பிஜேபியின் உச்சமான தலைமைப் பொறுப்புக்கோ, அல்லது பிரதமர் பொறுப்புக்கோ ஆர்.எஸ்.எஸ் தொண்டரல்லாத வேறு எவரையும் ஒருபோதும் கொண்டு வர மாட்டார்கள். அதனால்தான் ஜஸ்வந்த் சிங்,யஷ்வந்த் சின்ஹா போன்ற ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாத மூத்த தலைவர்கள் யாரும் உச்ச இடங்களுக்கு ஒருபோதும் செல்லவே முடியாது. இப்போது வாஜ்பாயிக்கு நிகராக முன் நிறுத்தி முகமூடி மாட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ள எந்தமுகமும் இல்லை.
எனவே மோடிக்கே வாஜ்பாயி முகமூடியையும் அணிவிப்பது என்று முடிவு செய்தார்கள். கடந்த ஐந்து வருடமாக குஜராத்தின் வளர்ச்சிக்கான சிற்பி என்று ஒரு புது முகமூடியை உருவாக்கினார்கள். ஆனால் மூலவரே உற்சவராக ஊர்வலம் போவது ஒத்து வரவில்லை. ஒருவரையே இரு மாறுபட்ட முகங்களுடன் மக்கள் முன்னால் அனைத்திந்தியஅளவில் விற்பது கடினமாக இருக்கிறது. ஏற்கனவே கோவிந்தாச்சாரியா சுட்டிக் காட்டியிருப்பதை இங்கே நினைவு கூரலாம். அத்வானிதான் பிரதமர் பொறுப்புக்கு ஏற்றவர். நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் பதவியை வகித்து முதலில் அனுபவம் பெறவேண்டும் என்று கோவிந்தாச்சாரியா சில வருடம் முன்பே சொன்னார்.
இந்தப் பின்னணியில்தான் இப்போது அத்வானி, தானே வாஜ்பாயி ஆகமுடியுமா என்று சின்ன முயற்சி செய்து பார்த்திருக்கிறார். பிரதமர் பதவிக் கனவை 15 வருடம் முன்பே இயக்க நலனுக்காக தியாகம் செய்தவர் அவர். இப்போதுதான் கடைசி வாய்ப்பு. மோடி தன் ரோலிலும் தான் வாஜ்பாயி ரோலிலும் நடித்தால் பழைய படத்தின் ரீமேக்கும் அதைப் போலவே வெற்றி பெற்றுவிடும் என்று அத்வானி கணக்கு போட்டிருக்கக்கூடும்.
ஆனால் நாகபுரியில் இருக்கும் இயக்குநர்கள் திரைக்கதையை குணச்சித்திர நடிகர் தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இனிமேல் உங்களுக்கு நம்ம படத்துல கெஸ்ட் ரோல்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.
மோடியை தேர்தல் குழுப் பொறுப்பாளராக்கிய அதிருப்தியில்,அத்வானி கட்சியின் பல பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக எழுதி இப்போது திரும்பப் பெற்றுவிட்ட கடிதத்தில் சொல்லியிருக்கும் முக்கியமான விஷயம் என்ன ஆயிற்று ? அறுபது வருடங்களுக்கும் மேலாக தான் இருந்து வரும் கட்சி தன் லட்சியங்களிலிருந்து விலகிப் போவது, அதன் இன்றைய தலைவர்கள் பலர் சுயநலமிகளாகிவிட்டது என்றெல்லாம் அத்வானி சொன்ன குறைகள் சும்மா ஒரு சாக்குதான். ( இதையே கோவிந்தாச்சாரியா பல வருடம் முன்பே சொல்லிவிட்டுப் போய்விட்டார்) ஏனென்றால் இந்தக் கோளாறுகளின் உச்சமாக கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சி நடந்தபோது அத்வானி இப்படியெல்லாம் கொந்தளிக்கவே இல்லை.
இப்போது அவரது தலைமை ‘வாயை மூடிக்கொண்டு சும்மா கிட’ என்று சொன்னதும் விஸ்வாசமான காக்கி நிஜார் தொண்டராக ராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டார். எந்த அளவு இயக்க விஸ்வாசம் என்றால் அவர் வீட்டிலேயே இந்த அறிவிப்பை கட்சித் தலைவர் செய்கிறார். பக்கத்தில் வந்து மௌனமாக உட்காரக் கூட அவர் வரவில்லை. என்ன சொல்லி அத்வானியை சமாதானப்படுத்தியிருக்க முடியும்? “ இனி பிரதமர் பதவியெல்லாம் உங்கள் தகுதிக்குக் குறைவானது. மோடி பிரதமராகட்டும். அடுத்த ஜனாதிபதியாக உங்களை ஆக்கிவிடுவோம் “ என்று சொல்லியிருப்பார்களோ ? இருக்கலாம்.
இந்த சுற்றில் அத்வானி தோற்பார் என்பது தெரிந்த விஷயம்தான். காரணங்கள் பல. ஆர்.எஸ்.எஸ்சுக்கும் பிஜேபிக்கும் அடுத்த 20 வருடங்களுக்குத் தங்கள் காயை நகர்த்தப் பொருத்தமான வயதில் அத்வானி இல்லை. அதற்கு மோடிதான் சரி. அத்வானி கட்சிக்குள் பலவீனமாகிவிட்ட சுதேசி பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர். ஆனால் இப்போது கட்சி மன்மோகனுக்கு போட்டியாக பன்னாட்டு முதலீடு தாராள பொருளாதார சார்பை நோக்கிச் செல்லும் மோடியையே விரும்புகிறது.
வாஜ்பாயியின் ‘செக்குலர்’ முகமூடி அப்போது பல அறிவுஜீவிகளைக் கட்சிக்கு ஈர்த்தது போல இப்போது ஈர்க்கமுடியாது. ‘வலதுசாரி ஃப்ரீ மார்க்கெட் கொள்கை’தான் ஈர்க்கும் அதற்கு மோடியின் குஜராத் டெவலப்மெண்ட் முகமூடிதான் சரி என்றே நாகபுரி கணக்கு போட்டிருக்கக்கூடும்.
இந்த முகமூடி மாற்ற நாடகம்தான் இப்போது நடந்திருக்கிறது. முகமூடிகளை ஒப்பனை அறைக்குள் மாற்றிவிட்டு பிறகு அரங்கில் வந்து ஆட்டம் ஆடுவது மரபு. ரகசியமாக செய்யும் ஒப்பனையை பகிரங்கமாக செய்ததில் கொஞ்சம் சிக்கலாகிவிட்டது. அவ்வளவுதான்.
நாங்கள் ஆட்சி அமைத்தால் அடுத்த குடியரசுத் தலைவர் அத்வானிதான் என்ற வசனங்களை வரப் போகும் நாட்களில் விரைவில் கேட்போம். மோடியே அதை அறிவித்தாலும் ஆச்சரியப்படவேண்டாம்.
—————
இந்த வார கவன ஈர்ப்பு செய்தி:
இந்தியாவிலேயே மிக அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கும் மாநிலங்களில் நான்காவது இடம்: குஜராத்துக்கு !மொத்தம் 3.9 லட்சம் குழந்தை தொழிலாளர்கள். முதல்நிலை: உத்தரகண்ட் : 17.5 லட்சம். இரண்டாவது: மேற்கு வங்கம்-5.5 லட்சம். மூன்றாவது:ராஜஸ்தான் – 4.05 லட்சம்.
————–
கல்கி 22.6.2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக