சனி, 22 ஜூன், 2013

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி அவர்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற கும்பல்!

பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆதரவோடு ஒரு கும்பல் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பிஎம்எல்-என் கட்சியின் ஆதரவுள்ள நிலச் சொந்தக்காரர் அப்துல் ராஷீத் என்பவரின் மகன் மொஹமட் முனீர். அவரால் அனுப்பப்பட்ட அடியாட்கள் சிலர் கடந்த 3ம் திகதி இரவு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அர்ஷத் பீபி, சாஜிதா பீபி மற்றும் சௌரியா பீபி ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது மாமனார் சாதிக் மாசிஹ் மற்றும் மாமியார் ராணி பீபி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.


அந்த அடியாட்கள் சாதிக்கின் மகன்களைத் தேடினர். அவர்கள் இல்லாததால் மருமகள்கள் 3 பேரையும் அடித்து உதைத்து அவர்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர். பின்னர் அவர்களை வெளியே இழுத்து வந்து ஊராருக்கு அவர்கள் கோலத்தை காட்டினர்.

இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போயினர். அந்த 3 பெண்களும் உதவி கேட்டு அலறியதையடுத்து ஊர் பெரியவர்கள் தங்கள் தலைப்பாகையை கழற்றி அந்த அடியாட்களின் பாதங்களில் வைத்து பெண்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். இதையடுத்து அடியாட்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் பொலிஸாரிடம் சென்றால் அவ்வளவு தான் என்று ஊர் மக்களை மிரட்டிவிட்டு சென்றனர்.

முன்னதாக சாதிக்கின் வீட்டு ஆடுகள் முனீரின் வயல்களில் புகுந்துவிட்டதாம். ஆடுகள் பயிர்களை சேதப்படுத்தியதாக முனீர் தெரிவித்து அவற்றை பிடித்து வைத்துக் கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாதிக்கின் மகன் சௌகத் முனீரை சந்தித்து ஆடுகளை விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு முனீர் சௌகத்தை அறைய பதிலுக்கு அவர் முனீரை அறைந்துவிட்டார். இதனால் தான் முனீர் ஆட்களை அனுப்பி பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ilankainet.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக