வெள்ளி, 14 ஜூன், 2013

மத்திய மந்திரிசபை மாற்றம் !

மத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகியதால் பல்வேறு துறைகளுக்கான மந்திரி பதவி காலியாக உள்ளது. அதே போல மத்திய மந்திரி அஸ்வின்குமார், பி.கே.பன்சால் ஆகியோர் பதவி விலகியதால் அந்த துறைகளும் காலியாக உள்ளன. அவர்களின் துறைகளை மற்ற மந்திரிகள் கூடுதலாக கவனித்து வருகிறார்கள். மு.க.அழகிரியிடம் இருந்து உரம் மற்றும் ரசாயன துறை மத்திய மந்திரி சிரிகந்தஜனாவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அஸ்வினி குமார் விலகியதால் ஏற்பட்ட அவர் வகித்த சட்டத்துறை கபில்சிபிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பி.கே.பன்சாலிடம் இருந்த ரெயில்வே துறையை சி.பி.ஜோசி கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே காலியாக உள்ள இடங்களை நிரப்பவும், மந்திரிகளிடம் கூடுதலாக உள்ள துறைகளை விலக்கி கொள்ளவும் மந்திரி சபையை மாற்றம் செய்ய பிரதமர் முடிவு செய்தார்.


சமீபத்தில் ஜப்பான் சென்று திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது மந்திரி சபையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மந்திரி சபை மாற்றம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் திடீரென சந்தித்து பேசினார்கள். அதில் மந்திரி சபை மாற்றம் குறித்தும் யார்-யாரை மந்திரிகளாக நியமிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. எனவே அடுத்த வாரம் மந்திரி சபை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும், பிரச்சினையில் சிக்கி தவிக்கும் ஆந்திர பிரதேசத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்த மாநில எம்.பி.க்கள் மத்திய மந்திரிகள் ஆக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

5 மந்திரிகள் வரை அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரி சபை மாற்றத்தை அடுத்து கட்சி நிர்வாகத்திலும் பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலிட நிர்வாகிகள் ஜெகதீஷ் டைட்லர், குலாம்நபி ஆசாத், குல்ஜெயின்சிங், சான்டில் ஆகியோர் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களை அந்த பதவியில் அமர்த்த ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நேற்று சோனியா-பிரதமர் சந்திப்பின்போது உணவு பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசித்ததாக தெரிகிறது malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக