வெள்ளி, 28 ஜூன், 2013

அழகி: சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடித்துரைக்கப் படாமல் அனுதாபத்துடன் சித்தரிக்கப்படுவது ஏன்

“அழகி” திரைப்பட விமரிசனம் – 2002-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை )
 அற்பத்தனம் என்பது யாதெனில்….
நடைபாதையோரத்தில் சண்முகம் தனத்தைச் சந்திக்கின்ற அந்தத் தருணம் வரை, “உன் குற்றமா, என் குற்றமா, யாரை நானும் குற்றம் சொல்ல” என்று பாடல் ஒலிக்கிறதே அந்தத் தருணம் வரை, சண்முகம் குற்றமற்றவன் என்றே ஒப்புக் கொள்வோம். ஒரு கூலிக்காரியாக, நடைபாதை வாசியாக, கணவனை இழந்த கைம்பெண்ணாக, தாயாக, அநாதையாக தனத்தைச் சந்தித்த சண்முகம் அவளை நண்பர் வீட்டில் வேலைக்காரியாக ஏன் சேர்த்து விட வேண்டும்?
நேரே தன் மனைவியிடம் வந்து அவளைப் பற்றிக் கூறி, பள்ளிப் பருவத்தில் தங்களுக்குள் இருந்த பருவம் வராக் காதலைப் பற்றியும் கூறி, தனத்தை வீட்டிற்கு அழைத்து வர மனைவியிடம் ஒப்புதல் கேட்டிருக்கலாமே. வளர்மதி அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், ஒரு வேலைக்காரியாக இல்லாமல், சமமான தோழியாக தனம் அவர்களுடன் வாழ்ந்துருக்க முடியுமே! வளர்மதி மறுத்திருக்கக் கூடும். அப்படியானால் அவளுடன் போராடியிருக்கலாம். இனிமையான அமைதியான மணவாழ்க்கையில் ஒரு சிறிய சலனம் ஏற்படிருக்கும்; ஒருவேளை, அத்தகைய போராட்டம் வளர்மதி என்ற அன்பு மனைவியின் அதுவரை தெரியாத அற்பத்தனங்களையும் சண்முகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கும்.
“கண்ணீர் வடிப்பதென்பது சிந்திப்பதாகும்” என்றார் ஒரு கலை விமரிசகர். “ஒரு கலைப்படைப்பில் துன்பியல் நாயகனின் அனுபவத்தில் பங்கு பெற்று அவனுக்காக அனுதாபப்படுகையில் தான் படும் சொந்தத் துன்பத்தின் மூலமாக ரசிகன் தூய்மைப் படுத்தப் படுகிறான். அவனுடைய வாழ்வு ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறது” என்பது இதன் பொருள்.
தமிழ் மக்கள் தம் அன்றாட வாழ்வில் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைக் காட்டிலும், சொந்த வீட்டு எழவுக்கு அழுத கண்ணீர் அதிகம். “கண்ணீர் வடிப்பது என்பது சிந்திக்க மறுப்பதாகும்” என்பதுதான் நாம் அனுபவத்தில் கண்டிருக்கும் உண்மை.

‘அழகி’ படத்தைப் பற்றிக் கேட்டால், ‘நல்லபடம்’, ‘அழகான சித்தரிப்பு’, ‘சொல்ல வந்த கதையை அழகாய்ச் சொல்லியிருக்கிறார்’ என்று ராஜதந்திரிகளின் மொழியில் பலர் கருத்து கூறுகின்றனர். “அழகான ரோஜா மலரொன்றைக் கண்டேன்” என்று சொல்பவரிடம் “ரோஜா மலர் என்ன கருத்தைச் சொல்ல முயல்கிறது?” என்று நாம் கேட்கப் போவதில்லை. அது அழகை நுகர்கின்ற அனுபவம். அவ்வளவே.
ஆனால் அழகி எனும் திரைப்படம் வெறும் அழகு நுகர்ச்சி அனுபம் அல்ல. ஒருவேளை கருத்துக் கூற முடியாத அளவுக்கு அந்த அழகியல் அனுபவத்தில் ரசிகன் கிறங்கி விட்டான் என்றால், அத்திரைப்படம் கூறும் கருத்தும் வெளிப்படுத்தும் உணர்ச்சியும் அவனுக்குள் நெருடல் ஏதுமின்றி இறங்கிவிட்டதென்றே பொருள். எனவே, விமரிசனம் அவசியமாகிறது.
*
டத்தின் பெயர் ‘அழகி’யானாலும், கதாநாயகன் சண்முகத்தின் (பார்த்திபன்) துயரம் தோய்ந்த முகம்தான் படத்தின் மையப்பாத்திரம். ஆரம்பப் பள்ளியில் சிநேகிதமாகத் தொடங்கி உயர்நிலைப் பள்ளியில் காதலாக வளர்ந்த தனலட்சுமி – சண்முகத்தின் உறவு திடீரென அறுபடுகிறது. டாக்டர் படிப்புக்கு சண்முகம் சென்னை போக, இரண்டாம் தாரமாகத் தன் அக்காள் புருசனுக்கே வாழ்க்கைப் படுகிறாள் தனம் (நந்திதாதாஸ்); இதனைக் கேள்விப்பட்டு மனம் ஒடிந்து போகிறான் சண்முகம்.
உதவி கேட்டு வரும் தனத்தின் கணவனுக்கு சண்முகம் வேலை வாங்கித் தருகிறான். தன் வீட்டில் பார்த்த பெண் வளர்மதியை (தேவயானி) வரதட்சிணை வாங்கித் திருமணமும் செய்து கொள்கிறான். தனத்தை மறந்து அவனுடைய வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது. திடீரென ஒருநாள் சென்னையின் சாலையோரத்தில் நடைபாதை வாசியாக, கட்டிடத் தொழிலாளியாகத் தனத்தைச் சந்திக்கிறான். கணவனை இழந்து தன்னந்தனியாய்த் தன் மகனுடன் தவிக்கும் தனத்திற்கு உதவத் துடிக்கிறது சண்முகத்தின் மனது.
காரணம் – முன்னாள் காதலி என்ற பாசமா, இன்னும் அவனது நெஞ்சில் எஞ்சியிருக்கும் காதலா, வாழ்ந்து கெட்ட அவளது ஏழ்மை தோற்றுவித்த இரக்கமா…. எல்லாமுமா?
சண்முகம் அவளை நேரே தன் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கலாம். ஏனோ தனது பணக்கார நண்பரின் வீட்டில் வேலைக்காரியாகச் சேர்த்து விடுகிறான். “எசமான் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்னால் வேலைக்காரி மகனுக்குப் பிரியாணி கேட்கிறதா” என்று தனத்தை ஏசுகிறாள் மூத்த வேலைக்காரி. பணக்கார நண்பரின் மகனோ தனத்தின் பையனுடைய கையிலிருந்து புத்தகத்தைப் பிடுங்கி “உனக்கெல்லாம் எதுக்குடா புத்தகம்” என்று விரட்டுகிறான் மகன். “நாம் இந்த வீட்டை விட்டுப் போய் விடலாம்” என்கிறான் தனத்தின் மகன். “சண்முகம் சார் மனசு கஷ்டப்படும். அப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று மகனைச் சமாதானம் செய்கிறாள் தனம். இதை மவுன சாட்சியாகப் பார்த்திருந்து கண் கலங்குகிறான் சண்முகம்.
“நண்பர் வீட்டில் தனத்தைக் கவுரவமாக நடத்தவில்லை. எனவே அவளை நம் வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம்” என்று இப்போதாவது மனைவியிடம் சண்முகம் தன் விருப்பத்தை நேரடியாகத் தெரிவித்திருக்கலாம். ஆனால் கைக்குழந்தையைக் கவனிக்க முடியாத நிலைமை பற்றி மனைவி பேசுகின்ற சந்தர்ப்பம் பார்த்து “தனத்தை வீட்டோடு வைத்துக் கொண்டால் நமக்கும் உபயோகமாக இருக்கும்; அவளுக்கும் உதவியாக இருக்கும்” என்று கூறி மனைவியின் ஒப்புதலைப் பெறுகிறான். ஆனால் சண்முகத்தின் வீட்டிற்கு வருவதற்குத் தயங்குகிறாள் தனம். “எனக்காக இந்த உதவியைக் கூடச் செய்ய விருப்பமில்லைன்னா விடு” என்று சின்னதாக ஒரு பிளாக்மெயில் செய்து அவளைச் சம்மதிக்க வைக்கிறான்.
சண்முகத்தின் வீட்டில் அவனது படுக்காயறையைச் சுத்தம் செய்ய நுழைந்து, கனவுக் காட்சியில் அவனுடன் ஒரு டூயட் பாடி, முடிவில் சண்முகம் – வளர்மதி திருமணப் புகைப்படத்தை கை தவறிப் போட்டுடைக்கிறாள் தனம். வேலைக்காரி தனத்தை சண்முகத்தின் மாமியார் மிக மோசமாக ஏசுகிறாள். சண்முகம் மறைவில் நின்று கண்கலங்குகிறான். சண்முகத்தின் பெயரை உச்சரித்ததற்காக இன்னொரு முறை எல்லோர் முன்னாலும் வசவுகளைச் சுமக்கிறாள் தனம். இதையும் சகித்துக் கொள்கிறான் சண்முகம். “என்னால் தானே உனக்கு இந்தத் துன்பமெல்லாம்” என்று மறைமுகமாக அவளுக்கு ஆறுதல் கூறுகிறான். அவளோ சண்முகத்துக்காக எல்லா அவமானங்களையும் சுமக்கத் தயாராக இருக்கிறாள்.
இறுதியாக, சண்முகத்தின் இளம் பருவத்தோழன் கட்டையன் மூலம் “சண்முகம் – தனம் காதல் விவகாரம்” தற்செயலாகத் தெரிய வந்தவுடன் மனைவி வளர்மதி நிம்மதி இழக்கிறாள். அடுத்து நண்பர் வீட்டில் நடக்கும் விருந்தில் தனத்தை அவமானப்படுத்துகிறாள் வளர்மதி; சண்முகத்தின் வைப்பாட்டி என்று தனத்தை கந்துவட்டிக்காரன் ஏளனம் செய்ய, அதைத் தொடர்ந்து நடக்கும் சண்டையில் சண்முகம் அடிவாங்குவதை வெறுப்புடன் வேடிக்கை பார்க்கிறாள் வளர்மதி.
இத்தனைக்குப் பிறகும், சண்முகம் தன் மனைவியைக் கண்டிக்கவில்லை. ‘தனம் தன்னுடைய இளம்பருவக் காதலி’ என்பதை அவளிடம் கூறவுமில்லை. பொறுக்க முடியாமல் மனைவி வளர்மதி கேட்கும் போதுதான் அதை ஒப்புக் கொள்கிறான். “எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது” என வருந்துகிறான். “யார்தான் இளம்பருவத்தில் காதலிக்கவில்லை?” என்று கேட்டுவிட்டு நான் உனக்குத் துரோகம் நினைத்ததில்லை என்று கூறி மனைவியிடம் கண் கலங்குகிறான். “எனக்கு உங்கள் மீதும் சந்தேகமில்லை; தனத்தின் மீதும் சந்தேகமில்லை. ஆனால் பயமாக இருக்கிறது. அவளைப் போகச் சொல்லி விடுங்களேன்” என்கிறால் வளர்மதி. அதற்கு முன் தனமே போய் விடுகிறாள். “வளர்மதியின் இடத்தில் நானிருந்தால் இதைத்தான் செய்திருப்பேன்” என்று கடிதமும் எழுதிவைத்துவிட்டுப் போகிறாள் தனம்.
*
“அழகி படத்தில் குணசேகரன் நடித்திருக்கிறாராமே. என்ன கதாபாத்திரம்?” என்று படம் பார்க்கும் முன்பாக ஒரு நண்பரிடம் கேட்டபோது “படத்தில் வில்லங்கமே அவராலதான்” என்று பதில் சொன்னார் அந்த நண்பர்.
அப்பாவியான கட்டையன் மட்டுமல்ல அடிமைச் சிந்தனையில் ஊறிப்போன வேலைக்காரியும், ஆதிக்கச் சிந்தனையில் ஊறிய மாமியரும் ரசிகனின் பார்வையில் வெறுக்கத்தக்க வில்லிகளாகி விடுகிறார்கள்; ஆனால் உண்மையான வில்லனான சண்முகமோ ரசிகனின் பார்வையில் பரிதாபத்துக்குரிய துன்பியல் நாயகனாகி விடுகிறான்.
ரசிக சண்முகங்கள்!
சண்முகம் கண்கலங்கிய காட்சிகளிலெல்லாம் அவனுடன் சேர்ந்து கண்கலங்கிய ரசிகர்கள் சண்முகத்தை வில்லன் என்று சொன்னால் தங்களையே வில்லன் என்று கூறுவதாகக் கருதி வெறுப்படையக் கூடும். அதற்கெல்லாம் பயந்து நாம் அடக்கி வாசிக்க முடியாது. இது எம்.ஜி.ஆர். கதையோ, ரஜினி கதையோ அல்ல. இயக்குநரே சொல்வது போல ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்திருக்கக் கூடிய கதை. இத்தகையதொரு சூழலில் சண்முகம் செய்ததைதான் நீங்களும் செய்திருப்பீர்களென்றால் சண்முகத்தை நோக்கி வைக்கப்படும் கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அற்பத்தனம் என்பது யாதெனில்….
நடைபாதையோரத்தில் சண்முகம் தனத்தைச் சந்திக்கின்ற அந்தத் தருணம் வரை, “உன் குற்றமா, என் குற்றமா, யாரை நானும் குற்றம் சொல்ல” என்று பாடல் ஒலிக்கிறதே அந்தத் தருணம் வரை, சண்முகம் குற்றமற்றவன் என்றே ஒப்புக் கொள்வோம். ஒரு கூலிக்காரியாக, நடைபாதை வாசியாக, கணவனை இழந்த கைம்பெண்ணாக, தாயாக, அநாதையாக தனத்தைச் சந்தித்த சண்முகம் அவளை நண்பர் வீட்டில் வேலைக்காரியாக ஏன் சேர்த்து விட வேண்டும்?
நேரே தன் மனைவியிடம் வந்து அவளைப் பற்றிக் கூறி, பள்ளிப் பருவத்தில் தங்களுக்குள் இருந்த பருவம் வராக் காதலைப் பற்றியும் கூறி, தனத்தை வீட்டிற்கு அழைத்து வர மனைவியிடம் ஒப்புதல் கேட்டிருக்கலாமே. வளர்மதி அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், ஒரு வேலைக்காரியாக இல்லாமல், சமமான தோழியாக தனம் அவர்களுடன் வாழ்ந்துருக்க முடியுமே! வளர்மதி மறுத்திருக்கக் கூடும். அப்படியானால் அவளுடன் போராடியிருக்கலாம். இனிமையான அமைதியான மணவாழ்க்கையில் ஒரு சிறிய சலனம் ஏற்படிருக்கும்; ஒருவேளை, அத்தகைய போராட்டம் வளர்மதி என்ற அன்பு மனைவியின் அதுவரை தெரியாத அற்பத்தனங்களையும் சண்முகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கும்.
சண்முகத்தைப் போன்ற மனிதர்கள் தமது சொந்தத் தவறுகளும் அற்பத்தனங்களும் மற்றவர்களுக்கு வெளிப்பட்டு விடுமே என்று மட்டும் அஞ்சுவதில்லை. மனைவி முதலான தமது சொந்தங்களின் அற்பத்தனங்கள் அவர்கள் வாயாலேயே அதிகாரபூர்வமாகத் தங்கள் முகத்தின் மீது உமிழப்படுவதை எண்ணியும் நடுங்குகிறார்கள். உறவுகள் உண்மைத்தீயில் புடம் போடப்படுவதைக் காட்டிலும், பொய்யின் நிச்சயமற்ற கதகதப்பில் பேணப்படுவதையே பாதுகாப்பானதாகக் கருதுகிறது அற்பத்தனம்.
பயங்கள் பலவிதம் !
இறுதிக் காட்சியில் மனைவி குறுக்கு விசாரணை செய்யும் போது உண்மையை ஒப்புக் கொள்ளும் ‘நல்லவனான’ சண்முகம் முதலிலேயே அவளிடம் இதைச் சொல்லாததற்குக் காரணம் – பயம். தனத்திற்கு அடைக்கலம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தைக் காட்டிலும், தன்னுடைய நடத்தையின்மீது மனைவிக்குச் சந்தேகம் வந்து விடுமோ என்ற பயம்!
மனைவிக்கு வேறுவிதமான பயம் “உங்கள் மீதும் தனத்தின் மீதும் எனக்குச் சந்தேகமில்லை. இருந்தாலும் பயமாயிருக்கிறது” என்கிறார் வளர்மதி. “இதுவரை நீங்கள் வரம்பு மீறவில்லையென்பதை வேண்டுமானால் நம்புகிறேன். ஆனால் இனியும் மீற மாட்டீர்கள் என்று நம்ப முடிவில்லை” என்பதுதான் வளர்மதி கூறும் பயத்தின் பொருள்.
பழசையெல்லாம் மறந்து விடுமாறு சண்முகத்திற்குப் புத்திமதி சொல்லும் தனமும், அறிவுரை சொல்லி முடித்தபின் “எனக்குப் பயமாயிருக்கிறது” என்கிறாள். “இதுவரை நாம் வரம்பு மீறவில்லை என்பது உண்மை. ஆனால் மீறமாட்டோம் என்பதற்கு உத்தரவாதமில்லை” என்பதுதான் தனம் வெளிப்படுத்தும் பயம்.
இரண்டு பெண் பாத்திரங்களும் உண்மையைப் பேசி விடுகின்றனர். ஆனால் சண்முகம் நடிக்கிறான். தனத்தின் நினைவாக அவளது செருப்பை ஒளித்து வைத்திருக்கும் சண்முகம், தனது தடுமாற்றத்தை யாரிடமும் மனம் திறந்து கூறுவதில்லை. ஆனால் சண்முகமும் பயப்படுகிறான்; தனது பலவீனம் வெளிப்பட்டுவிடக் கூடாதே என்பதுதான் அவனது பயம்.
ஆணாதிக்கத்தின் பரந்த உள்ளம் !
இறுதிக் காட்சியில், “எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது” என்று தன் மனைவியிடம் சொல்கிறான் சண்முகம். தன் நடத்தை மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்று கருதும் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தவிர்த்து, உண்மையிலேயே வெளிப்படையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.
ஒரு மனிதன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதிலிருந்து உலகம் அவனை மதிப்பிடுவதில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதிலிருந்துதான் அவனை மதிப்பிடுகிறது; அவனது விருப்பத்தையும் ஊகிக்கிறது. தனத்திற்கு உதவி செய்வதில் மனிதபிமானம் தவிர ‘வேறு’ எந்த நோக்கமும் சண்முகத்திற்குக் கிடையாது என்பதை நம்புவதாக இருந்தால், “துவக்கத்திலேயே வளர்மதியிடம் அவன் ஏன் உண்மையைச் சொல்லவில்லை?” என்ற கேள்வி எழுகிறது.
ஆண் வர்க்கத்தின் சார்பாக இதற்கு அளிக்கப்படும் விடை இதுதான்! “குறுகிய சிந்தனை கொண்ட பெண்கள் ஆண்களின் பரந்த உள்ளத்தைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்வதில்லை. எனவே இந்த மாதிரி விசயங்களையெல்லாம் அவர்களிடம் உடைத்துச் சொல்லிவிட முடியாது.”
ஒருவேளை வளர்மதிக்கு ஒரு முன்னாள் காதலன் இருந்து, அவனை அழைத்துவந்து இன்னாரென்று செல்லாமல் வீட்டிலே தங்க வைத்தால்? “இயற்கையிலேயே ஆணாதிக்கச் சுபாவம் கொண்ட ஆண்கள் பெண்களின் இரக்க மனத்தைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் ‘இவன் என் முன்னாள் காதலன்’ என்ற உண்மையை நான் கணவனிடம் சொல்லவில்லை” என்று வளர்மதி அதற்கு விளக்கம் சொன்னால்….?
அபாயகரமான அவலம் !
பல படங்களில் நாம் காண்பதைப் போல இறுதிக் காட்சியைக் கீழ்க்கண்டவாறு அமைத்திருந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
“தனம் இந்த விட்டில்தான் இருப்பாள். உனக்குச் சம்மதமில்லையென்றால் நீ வெளியே போடீ” என்று சண்முகம் பொங்கி எழுகிறான் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகும்? படம் முழுவதும் ரசிகர்களின் கண்களிலிருந்து தோண்டித் தோண்டியெடுக்கப் பட்ட கண்ணீர் அந்தக் கணமே வறண்டு போகும். சண்முகத்தின் பணிவும் கையறு நிலையும், தவிப்பும்தான் அவனை ஒரு துன்பியல் நாயகனாக்குகிறது. வளர்மதியோ, கணவனின் வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய வறட்டுப் பிடிவாதக்காரியாக, புத்தி கெட்டுப் போய்க் காரியத்தைக் கெடுத்த ஆத்திரக்காரியாகக் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறாள்.
எப்போதுமே ஆதிக்க வர்க்கம் அகம்பாவத்தோடு நடந்து கொள்ளும் நேரங்களில் அது வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால் அது தன்னை அவல நிலையில் இருத்திக் கொள்ளும்போது மிகவும் அபாயகரமானதாகி விடுகிறது. ஆதிக்க வர்க்கத்தின் அவலத்திற்கு அடக்கப்பட்ட வர்க்கமே கண்ணீர் வடிக்கும் கேலிக்கூத்து இங்கேதான் தொடங்குகிறது.
“ஐயோ…. யாருமே இல்லையா” என்ற அவலக்குரலுடன் திரைக்குள் வருகிறாள் தனம். ஆனால் அந்தக் கணத்தோடு அவளது அவலம் முடிந்து விடுகிறது; சண்முகத்தின் அவலம் தொடங்கிவிடுகிறது. “என்னல்லாம் மறந்துட்டீல்ல”, “எனக்காக இந்த உதவியக்கூட செய்ய முடியலன்னா விடு”, “உன்னுடைய செருப்பை வச்சிக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா?” – என்று சரம் சரமாக சென்டிமெண்ட் அம்புகளை வீசுகிறான் சண்முகம். இரக்க உணர்ச்சியால் உந்தப்பட்டு, சண்முகத்திற்காக எதையும் இழக்கச் சித்தமாகிறாள் தனம். அடிமைத்தனம் பரவச நிலையை எய்துகிறது.
அடிமைத்தனத்தின் பரவசம் ஆதிக்க உணர்வின் வருத்தம் !
சண்முகத்தால் அருளப்பட்ட இந்த வாழ்க்கையில் தனம் அடைந்த ஆதாயங்கள் என்ன? தனத்தின் கூற்றுப்படி “ரோட்ல கிடந்தவளுக்கு இது பெரிய வாழ்க்கை”. மேட்டுக்குடி வர்க்கத்தின் பயன்படுத்திய மிச்சங்களும், அதிலிருந்து முளைத்த நடுத்தர வர்க்கமாகிவிடும் கனவும் ‘ஆதாயங்கள்’! சண்முகத்தைச் சந்தித்ததால் தோன்றிய மனப்போராட்டமும், ஒரு வேலைக்காரி என்ற முறையில் அவள் பட்ட அவமானங்களும், சண்முகத்துக்காக அவற்றைச் சகித்துக் கொள்ள நேர்ந்த கொடுமையும் அவளது இழப்புகள்.
ஒரு வேலைக்காரி என்ற முறையில் அவள் இழிவுபடுத்தப் படும் போதெல்லாம் அதை எதிர்க்க முடியாத கையறு நிலையை சண்முகம் வெளிப்படுத்துகிறான். பழைய பிளாஸ்டிக் செருப்புக்காகத் தனத்திடம் அவன் நடத்தும் போராட்டத்தைக் கூட, அவளுடைய சுயமரியாதைக்காக மற்றவர்களிடம் அவனால் நடத்த முடியவில்லை. தனம் யார் என்பதை மறைத்ததன் காரணமாக மட்டும் தான் அவள் மவுனம் சாதிக்க நேர்ந்தது என்று கருத இடமில்லை. “ஸ்கூட்டரை விற்று நண்பனுக்கு உதவி செய்தேன்” என்ற சாதாரண விசயத்தைக் கூட வெளிப்படையாக மனைவியிடம் சொல்ல முடியாத கோழை சண்முகம். பணக்கார வீட்டில் பெண்ணெடுத்து, வரதட்சிணையாக வீட்டை வாங்கிக் கொண்டு, தன்மானத்தை அடகு வைக்கச் சம்மதிக்கும் ஒரு மனிதன் அடுத்தவரின் மானத்துக்கு எப்படிப் போராட முடியும்? போராட முடியாது; வருத்தப்பட முடியும். தனத்திற்கு நேரும் அவமானங்களுக்காக சண்முகம் வருந்தத்தான் செய்கிறான். ஆனால் தான் போராடத் தவறியதற்காக அவன் வருந்தவில்லை.
சூழ்நிலையின் கைதிகள் !
துவக்கத்தில் திருமணம் செய்ய முடியாமல் தனத்தை இழக்க நேர்ந்தது முதல், இறுதியில் வேலைக்காரியாக நீடிக்க முடியாமல் அவள் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது வரை அனைத்துமே ‘யாரையும் குற்றம் சொல்ல முடியாத’ விதியின் விளையாட்டாகவே அவனுக்குத் தோன்றுகிறது.
சூழ்நிலையின் கைதிகளாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், – அவர்கள் எவ்வளவு தாராளமனம் கொண்டவர்களாக இருந்த போதிலும் – சுய விமரிசனம் செய்து கொள்வதில்லை. “ஒரு நல்ல மனம் கொண்ட நடுத்தர வர்க்க ஆணாதிக்கவாதி” என்ற முறையில் சண்முகம் இயல்பாகத்தான் சிந்திக்கிறான். தனது மனைவி, குடும்பம், தகுதி ஆகியவற்றுக்ககுச் சேதம் ஏற்படாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு அவன் தனத்துக்கு உதவ விரும்புகிறான். இப்படியொரு நிபந்தனை வைத்துக் கொள்வது குறித்து அவன் வெட்கமொ குற்றவுணர்வோ அடையவில்லை. அது இயற்கையானதாகவும் நியாயமானதாகவுமே அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
நடுத்தரவர்க்கம் ஏழைக்கு உதவும்போது அது, ஏழையின் தேவைகளையும் விருப்பங்களையும் கேட்டறிவதில்லை. தனது பெருந்தன்மை குறித்த மயக்கத்திலும், ஆன்ம திருப்தியிலும் திளைக்கிறது. இவையெதையும் பரிசீலிப்பதையோ கேள்விக்குள்ளாக்குவதையோ அது விரும்புவதில்லை.
நாம் பரிசீலிப்போம். ஒருவேளை தனம் இன்னாரென்று வளர்மதக்குத் தெரிய வராமல் போயிருந்தால்? தொடர்ந்து சண்முகத்தின் வீட்டில் அவள் வேலைக்காரியாகவே நீடித்திருக்க வேண்டியதுதானா? சண்முகம் தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்க, தனம் தனது கடந்தகாலக் காதல் குறித்த நினைவுகளுடன் காலம் தள்ள வேணுமா? “சிந்தனை வடிவத்திலான இந்தச் சின்னவீடு” சண்முகம் தனக்குத்தானே செய்து கொள்ளும் உதவியா, தனத்திற்குச் செய்யும் உதவியா? ஒருவேளை அந்த இளம் விதவைக்கு வேறொருவனை மறுமணம் செய்து வைப்பது கடந்தகாலக் காதலுக்குச் செய்யும் துரோகமாகி விடுமா?
சண்முகத்தின் வீட்டிற்குள் தனம் நுழையும் அந்தக் கணத்திலிருந்து ‘அழகி’ ஒரு திகில் படமாகிவிடுகிறது. பலவீனமானதொரு தருணத்தில் சண்முகமும் தனமும் பாலியல் ஒழுக்க நெறியை மீறிவிடுவார்கலோ என்ற அச்சம் திரைக்கதையால் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. ஒழுக்கம் ‘மீறப்பட்டது கனவில்தான்’ என்ற விசயம் தெளிவானவுடன் தங்களது நல்லொழுக்கம் உறுதி செய்யப்பட்ட திருப்தியில் ரசிக சண்முகங்கள் கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்கள்.
தர்க்க ரீதியான கேள்விகளால் அழகியல் உணர்வுகளை அறுத்துப் பார்வைக்கு வைப்பது, கலாரசிகர்களுக்கும் கவிதை மனம் கொண்டோருக்கும் வெறுப்பைத் தரலாம். ஆனால், இவையனைத்தும் எதார்த்த வாழ்வில் ஒரு சாதாரண மனிதன் எழுப்பக்கூடிய கேள்விகள்தான். “கறுப்பு – வெள்ளை எனப் பிரித்துக் கூறமுடியாத பகுதிகளும், இனம் புரியாத உணர்வுகளும், விடை தெரியாத கேள்விகளும் இருக்கத்தானே செய்கின்றன” என்று கூறிக் கொண்டு, அதையே கலையென்றும் அழகென்றும் சிலாகித்துக் கொண்டு, அத்தகைய நிழலான பகுதிகளில் ஆணாதிக்கக் கோழைகளும், கொட்டைபோட்ட காரியவாதிகளும் ஒளிந்து கொள்ளவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
அற்ப மனிதனுக்கு அனுதாபம் ஏன் ?
“சண்முகம் ஒன்றும் புரட்சிக்காரனல்ல; உங்களையும் என்னையும் போன்று குறைகளும் பலவீனங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதன் – அவ்வளவுதான்” என்று ரசிக சண்முகங்கள் வாதிடலாம். “சண்முகம் ஏன் ஒரு சராசரி மனிதனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்” என்பதல்ல நம் கேள்வி. “இந்தச் சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடித்துரைக்கப் படாமல் அனுதாபத்துடன் சித்தரிக்கப்படுவது ஏன்” என்பதுதான் கேள்வி.
ஒரு கதாபாத்திரத்தின் வாழ்வும் படைப்பாளியின் வாழ்வும் பிரிக்க முடியாதவை. சண்முகம் முழுமையாகவே ஒரு கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தைச் செதுக்கி உருவாக்கும் போக்கில் அதன் படைப்பாளி (தங்கர் பச்சான்) ஏறத்தாழ அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து பார்த்து விடுகிறார். அதே நேரத்தில் தனது சொந்தக் கண்ணோட்டத்தில் அந்தப் பாத்திரத்தை மதிப்பிடவும் செய்கிறார்.
செய்ய வேண்டியதைச் செய்யத் தவறிய குற்றவாளியாக, செய்யக் கூடியதைச் செய்ய முயலாத கோழையாகச் சண்முகத்தை அவரால் மதிப்பிட முடியவில்லை. சண்முகத்தின் உருவில் அவர் தன்னையே காண்கிறார். சோகம் பூசப்பட்ட குரலில் தன் கதையை வருணிக்கும் சண்முகத்தின் குரல் “நான் விதிக் காற்றில் சிக்கிய சருகு” என்கிறது; கண்ணீர் ததும்பும் அவனது முகமோ “எனது துயரம் ஒரு விடை தெரியாத புதிர்” என்கிறது.
சினிமாத்திரை எனும் பிரம்மாண்டமான கண்ணாடியில் தங்களுடைய பிம்பம் கண் கலங்குவதைக் கண்ட ரசிக சண்முகங்கள் உடனே தங்களது கண்ணிலும் நீரை வரழைத்துக் கொண்டு, கலைக்கு ஏற்ப எதார்த்தத்தைச் சரி செய்து கொள்கிறார்கள். இனி, நடுத்தர வர்க்கத்தின் அற்பமனிதர்கள் அனைவரும் தங்களைத் துன்பியல் நாயகர்களாகக் கருதிக் கொள்ளலாம்.
ஆனாலும் இதில் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. திரையரங்கில் தன் நிழலைப் பார்த்துக் கண்கலங்குவது எளிது; நிஜவாழ்க்கையில் “நான் செய்யத் தவறியது இதுதான்” என்று தெளிவாகத் தெரியும்போது கையறு நிலையைக் கற்பித்துக் கொண்டு கண்கலங்குவது கடினம். ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த முரண்பாடுகளைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக அறிந்திருக்கிறான் என்பதால், இந்த அறிவே அவன் ஆட்பட விரும்பும் போலியான உணர்ச்சிகளை அவ்வப்போது உறிஞ்சிக் காய வைத்துவிடுகிறது.
கையறுநிலையின் சொர்க்கம் !
னது சொந்த அறிவு குத்திக் காட்டும் உண்மையிலிருந்தும் குற்றவுணர்விலிருந்தும் தப்பித்துப் போலி உணர்ச்சிகளில் அடைக்கலம் புகுவதற்கும், அதன் மூலம் தனக்குத்தானே ஆறுதல் பெறவும் அவன் முயற்சிக்கிறான். அறிவு என்பது ஒரு சாபக்கேடாகவும் அறியாமையே மாபெரும் வரப்பிரசாதமாகவும் தோன்றும் மனநிலை இது. தனது சமூக மதிப்பீடுகளுக்கும் தனது சொந்த நடைமுறைக்கும் இடையே நியாயப்படுத்த முடியாத பிணக்கு ஏற்பட்டு விட்டதைத் தனது சொந்த அறிவே சுட்டிக் காட்டும்போது அறியாமையை வழிபடுகிறார்கள் இத்தகைய மனிதர்கள். இவர்கள் அறிவாளிகளாக இருக்கும் பட்சத்தில் அறியொணாவாதம் இவர்களின் ஆயுதமாகிவிடுகிறது.
அறிவு முதிர்ச்சியுறாத இளம்பருவத்தின் மகிழ்ச்சி, உளவியல் முரண்பாடுகள் தோன்றாத ‘சுதந்திரமான’ பழைய பொற்காலம், அதன் இனிமை, குதூகலம், கள்ளம் கபடமற்ற தன்மை, தாய்மடி….! இதோ, மூளைக்குள்ளேயே கிளிசரின் தயராகிவிட்டது! குற்றவுணர்வின் நரகத்திலிருந்து தப்பித்து, கையறு நிலையின் சொர்க்கத்திற்குள் நுழைகிறான் சண்முகம். திரையரங்கின் முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் ரசிக சண்முகங்களும் தேவதைக் கதையின் கனவிற்குள் நுழையும் பிள்ளைகள் போலத் தம் இளமைக் காலத்திற்குள் நுழைகிறார்கள்.
திரையரங்குக்கு வெளியில் நிறுத்தியிருக்கும் புத்தம்புதிய மோட்டார் சைக்கிளையும், செரிமானமாகாமல் நெஞ்சில் வந்து இனிக்கும் சரவண பவன் சிற்றுண்டியையும் மறந்து, “இதுதான்…. இதுதான்…. நாங்கள் இழந்த சொர்க்கமும் இதுவேதான்” என்று மல்லாக் கொட்டையையும் மரத்தடிப் பள்ளியையும் கண்டு கண்கலங்குகிறார்கள். முன்வரிசையில் அமர்ந்திருக்கும் பஞ்சம் பிழைக்க வந்த மக்களோ தங்கள் கிராமத்தை உள்ளபடியே பார்த்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் கட்டையனும் இருக்கக்கூடும்.
‘ அழகி ‘யலின் அரசியல்
“இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே, அது ஏன், ஏன்… நண்பனே” என்ற கேள்வியை சிவாஜி கணேசன் 30 ஆண்டுகள் முன்னமே கேட்டுவிட்டார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சண்முகமாவது அதற்கு விடை சொல்வான் என்று எதிர்பாத்தால், அந்த நாள் ஞாபகத்தை இன்னும் கொஞ்சம் ஆழ உழுதிருக்கிறான், அவ்வளவு தான்.
“ஆழ உழுவதுதான் அழகியல்” என்பார்கள் கலா ரசிகர்கள். நாம் இந்த ‘அழகி’யலின் அரசியலை லேசாகக் கிளறி மட்டும் பார்ப்போம். படத்தின் முதல் காட்சியிலேயே நமக்கு வேடிக்கையானதொரு ‘தடயம்’ கிடைக்கிறது. தனத்தின் பிள்ளையை வளர்க்கும் சண்முகம், அவனது பள்ளி ஆவணத்தில் ‘காப்பாளர்’ என்று குறிக்கப்பட்ட இடத்தில் கையொப்பமிடுகிறான். ஆண்கள் ‘இயற்கையிலேயே’ பெண்களின் காப்பாளராகி விடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கமும், மேட்டுக்குடியினரும் கூட தத்தம் சமூகத்து ஏழை எளியவர்களின் காப்பாளர்களாகத்தான் தம்மைக் கருதிக் கொள்கிறார்கள்.
குஜராத்தில் பாரதீய ஜனதா நடத்திவருவதைப் போன்றதொரு படுகொலையை அவர் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டார் என்பதை இந்தத் தருணத்திலும் உறுதியாகச் சொல்லலாம். எனினும் பாரதீய ஜனதாவை அவரால் தட்டிக் கேட்க முடியவில்லை.
தனது மாமியாரைத் தட்டிக் கேட்க முடியாத சண்முகத்தின் நிலையைப் போன்றதொரு ‘அரசியல் அவல நிலை’ இது. தனது கட்சியின் நலனுக்கு ஊறு நேராது என்ற உத்திரவாதம் மட்டும் இருந்தால் அவர் முசுலீம்களுக்கு ஏதேனும் செய்யவே விழைகிறார். திருவாரூரின் வீதிகளில் கருப்புக் கொடியேந்தி நடந்து சென்ற கள்ளங்கபடமற்ற நேர்மையான மாணவப் பருவம் அவரது நினைவில் நிழலாடக் கூடும். அவரும் கண்கலங்கக் கூடும்!
குஜராத்தின் சண்முகங்கள் !
குஜராத் முசுலீம் அகதிகளில் தற்போது தம் வீடுகளுக்குத் திரும்பியபோது அண்டை வீட்டுக்கார இந்துக்கள் அவர்களைப் பார்த்துக் கண்கலங்கி அழுதார்களாம். “எதற்காக அழுதீர்கள்? எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எண்ணி அழுதீர்களா, அதனைத் தடுக்க முடியாத கோழைகளாக நீங்கள் ஒளிந்து கொண்டதை எண்ணி அழுதீர்களா?” என்று முசுலீம்கள் அவர்களைக் கேட்க முடியுமா என்ன?
கண்ணீரையும், கலையையும் தர்க்க ரீதியான கேள்விகளால் அறுப்பதை அழகியல் ஆராதனைக்காரர்கள் அனுமதிப்பதில்லையே! “அழகியது – நல்லது – ஒழுக்க ரீதியில் சரியானது” ஆகிய இவற்றுக்கிடையில் பிரிக்க முடியாததொரு இயங்கியல் உறவு உள்ளது என்பதை அவர்கள் ஏற்பதில்லை.
கோழைத்தனத்திலும் சுயநலத்திலும் கலையழகைக் காண முடியுமென்றால், ஒரு அற்பவாதி துன்பியல் நாயகனாக முடியுமென்றால், அவனுடைய கண்ணீரும் நம் கண்களைக் குளமாக்குமென்றால், குஜராத் படுகொலை பற்றித் தீட்டப்படும் சித்திரத்தின் துன்பியல் நாயகர்கள் – வேறு யார்…..? கண் கலங்கி நின்ற அந்த அண்டை வீட்டுக்கார இந்துக்கள் தான்! vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக