வியாழன், 27 ஜூன், 2013

பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் கொடூரம் தொடர்கிறது


பென்னாகரம் : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 4வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் தாயுக்கு தெரியாமல் தந்தையே குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொன்ற கொடூரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எர்ரங்காடு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (30). பெங்களூரில் கூலி வேலை செய்கிறார். இவருடைய மனைவி மாலா. இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளானது. இத்தம்பதியினருக்கு ஏற்கனவே சந்தியா (8), சாதனா (7), காவியா (2) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கர்ப்பமுற்ற மாலா கடந்த 3ம் தேதி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் 4வதாக அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆண் வாரிசை எதிர்பார்த்த மாதேஸ் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை பிறந்து 22 நாள் கடந்த நிலையில், சிசு இறந்து விட்டதாக ஊர் மக்களிடம் மாதேஸ் கவலையுடன் கூறியுள்ளார். ஆனால், குழந்தை இயற்கையாக இறக்கவில்லை என்ற சந்தேகப்பட்ட ஊர்மக்கள் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பென்னாகரம் போலீசார் மாதேஸ், மாலா, மாலாவின் தாய் சின்னதாய் ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பெண் சிசுவை தந்தையே கொன்றது தெரியவந்தது.  பெண் குழந்தை பிறந்தது பற்றி மனைவியிடமும் அதிப்தியை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் குழந்தையின் தாய் மாலாவுக்கும் தெரியாமல் குழந்தைக்கு ஈவு இரக்கமின்றி கள்ளிப்பால் ஊற்றியுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை இறந்துள்ளது. இதன் பின்னர் குழந்தை இயற்கையாக இறந்து விட்டதாக அனைவரிடமும் கூறியுள்ளார். இதை அனைவரும் நம்பிவிட்டனர். குழந்தையின் சடலத்தையும் அடக்கம் செய்து விட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்த மாதேசின் மேல் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரித்ததில் குழந்தையை தாய்க்கு தெரியாமல் கொன்றதை மாதேஸ் ஒப்புகொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். குழந்தையின் உடலை பென்னாகரம் தாசில்தார் தேவிகா, டிஎஸ்பி நடராஜன், விஏஓ அமுதா, பர்வதனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில், தோண்டி எடுக்கப்பட்டது. பென்னாகரம் அரசு மருத்துவர் அருண்பிரசாத் பெண் சிசுவை அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக்கள் கொலை நடந்தது. தமிழகத்தில் பிறப்பு விகிதத்தை ஒப்பிடுகையில் ஆண்களை காட்டிலும் பெண் குழந்தை எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பெண் சிசுக்கொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக