செவ்வாய், 4 ஜூன், 2013

கிரிக்கெட் போட்டி முடிவை மாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்த்த புரோக்கர்கள்


டில்லி தரகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கிரிக்கெட் போட்டிகளின்
முடிவை மாற்றிச் சொல்லி, சென்னையில் உள்ள பலரிடம், கோடிக்கணக்கில் சென்னை சூதாட்ட புரோக்கர்கள் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில், ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக, பிரசாந்த், கிட்டி, சஞ்சய் பாவ்னா, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட, பத்துபேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆறு பேர் இந்தவழக்கில் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், பிரசாந்த் உள்ளிட்ட, ஆறு பேரிடம் போலீசார், விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.மேலும், விசாரணை முடிந்த நிலையில், கிட்டி, சஞ்சய் பாவ்னா தவிர மற்றவர்கள் அனைவரும், ஜாமினில் வெளியில் வந்து, தினசரி, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, பிரசாந்த் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட, தலைமறைவாக உள்ள புரோக்கர்கள் அனைவரும், "சிண்டிகேட்' அமைத்து செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், டில்லியைச் சேர்ந்த, சஞ்சய் ஓஜா, கரண்குமார் என்ற இரு புரோக்கர்களும், தற்போது தலைமறைவாக உள்ளனர். இவர்களது பெயரும், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள், டில்லியில் உள்ள புரோக்கர்களுடன் இணைந்து, போட்டியின் முடிவை முன்கூட்டியே நிர்ணயித்து, சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். அதன் பின் தான், சென்னை புரோக்கர்களின் விளையாட்டு ஆரம்பிக்கிறது.இவர்கள், போட்டியில் ஜெயிக்கும் அணியின் பெயரை மாற்றி, இங்கு சூதாட்டத்தில் பங்கேற்பவர்களிடம் கூறிவிடுவர். இதனால், அவர்கள் ஜெயிக்கும் அணியின் மீது, பணம் கட்டுவர். ஆனால், எதிர் அணி ஜெயித்து விடும். இதில், கட்டப்பட்ட பணம் முழுவதும், சூதாட்ட புரோக்கர்களுக்கு சென்றுவிடும்.இந்த வகையில், கடந்த மாதம், 28 மற்றும், 29ம் தேதிகளில் நடந்த போட்டிகளில், கோடிக்கணக்கில், சூதாட்ட புரோக்கர்கள் பணம் பார்த்துள்ளதாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ளவர்களை, விரைவில் பிடிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவெடுத்துள்ளனர். விக்ரம் ஆஜர்: சென்னை, சி.பி.சி.ஐ.டி., தேடிவந்த நிலையில், கடந்த, 31ம் தேதி, மும்பை போலீசில் ஆஜரான, சென்னை ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை, சென்னைக்கு கொண்டு வந்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., முடிவெடுத்தது. மேலும், சென்னையில் இருந்து, தனிப்படை போலீசாரை அனுப்பவும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை, விக்ரம் அகர்வாலின் மனைவி, வந்தனா அகர்வால், ஒரு கடிதத்தை, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அதில், இம்மாதம் ஐந்தாம் தேதி, விசாரணைக்கு ஆஜராகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, விக்ரமை தேடி, தனிப்படையனர் மும்பை செல்வதை நிறுத்திவிட்டு, விக்ரம் அகர்வாலிடம் விசாரிக்க வேண்டிய தகவல்கள் குறித்து, ஆலோசித்து வருகின்றனர். - நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக