திங்கள், 24 ஜூன், 2013

எட்வார்ட் ஹாங்காங்கில் இருந்து பயணம்! விக்கிலீக்ஸ் ஆலோசகர்களும் விமானத்தில்!!

அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன், ஹாங்காங்கில் இருந்து சாகசமாக வெளியேறியுள்ளார். அவரை ஏற்றிச் சென்ற விமானம் தற்போது ரஷ்ய வான் பகுதியில் பறந்து கொண்டிருக்கிறது.
அவரை கைது செய்து நாடுகடத்துமாறு அமெரிக்கா ஹாங்காங் அரசை கேட்டுக் கொண்டுள்ள நிலையிலும் ஹாங்காங்கின் செப் லப் கொக் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை புறப்பட்ட விமானத்தில் ஏறிவிட்டார். இவர் வெளியேறுவதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தது தாம் என்று அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.
“எட்வார்ட் ஹாங்காங்கில் இருந்து வெளியேறுவதற்கு தேவையான ஒழுங்குகளை செய்ததுடன், அவரை பத்திரமாக அழைத்துச் செல்ல, விக்கிலீக்ஸின் சட்ட ஆலோசகர்கள் குழு ஒன்றும் அதே விமானத்தில் பறக்கிறார்கள்” என்று சற்றுமுன் விக்கிலீக்ஸ் ட்விட் பண்ணியுள்ளது.

ஹாங்காங்கில் எட்வார்ட் ஸ்னோடன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டால், அமெரிக்க உளவுத்துறை அவரை ‘எப்படியாவது’ தூக்கி விடும் என்று அமெரிக்க மீடியாக்கள் கூறிவந்த நிலையில், ஹாங்காங் விமான நிலையத்துக்கு வந்து, மற்றைய பயணிகள் போல, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோபுளோட் பயணிகள் விமானத்தில் ஏறினார்.
ஹாங்காங்கில் இருந்து ரேரடியாக மாஸ்கோ செல்லும் விமான சேவை அது. வழமையாக 11 மணிக்கு ஹாங்காங்கில் இருந்து புறப்படும் அந்த விமானம், இன்று 4 நிமிட தாமதத்துடன் 11.04க்கு ஹாங்காங்கை விட்டு புறப்பட்டது என ஏரோபுளோட் இணையத்தளத்தில் இருந்து தெரிகிறது.
எட்வார்ட் ஏறிய விமானம் ஹாங்காங்கை விட்டு கிளம்பிய உடனே அவர் ஏரோபுளோட் விமானத்தில் உள்ளார் என்ற தகவலை விக்கிலீக்ஸோ அல்லது ஹாங்காங் அரசோ வெளியிடவில்லை. அந்த விமானம் ஹாங்காங்கில் இருந்து பறந்து, ரஷ்ய வான் பகுதிக்குள் பிரவேசித்த பின்னரே, அந்த விமானத்தில் எட்வார்ட் பயணம் செய்யும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள், இந்த விமானத்தை வேறு எங்காவது பலாத்காரமாக தரையிறக்கி, எட்வார்ட்டை கைது செய்யலாம் என்ற காரணத்தாலேயே, அந்த விமானம் ரஷ்ய வான் பகுதிக்குள் பிரவேசித்த பின்னர் தகவல் வெளியிடப்பட்டது.
எட்வார்ட் பயணிக்கும் விமானம் இன்னமும் சிறிது நேரத்தில், மாஸ்கோ நேரம் மாலை 5.15-க்கு மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கப் போகின்றது.
“எட்வார்ட் மாஸ்கோ செல்லும் விமானத்தில் பறந்தாலும், அவர் போய்ச் சேரவேண்டிய இறுதி நாடு ரஷ்யா அல்ல. அவர் மாஸ்கோவில் இருந்து புறப்படும் மற்றொரு விமானத்தில் 3-வது நாடு ஒன்றுக்கே செல்கிறார்” என்றும் தெரிவித்துள்ளது விக்கிலீக்ஸ். அந்த நாடு எது என்று தெரிவிக்கவில்லை.
அந்த நாடு ஐஸ்லாந்து, அல்லது எக்கடோர் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த இரு நாடுகளிலும் அவருக்கு அரசியல் அடைக்கலம் கிடைக்கும்.
ஹாங்காங் அரசு, “எட்வார்ட் ஸ்னோடன் ஹாங்காங்கை விட்டு அவரது சொந்த விருப்பத்தில் வெளியேறியுள்ளார். அவரை கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. எட்வார்ட் ஒர சாதாரண பயணிபோல விமானத்தில் ஏறி பயணம் செய்தார்” என்று தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் உள்ள ஏரோபுளோட் அலுவலகத்தை சேர்ந்த ஒருவர், குறிப்பிட்ட விமானத்தில் எட்வார்ட் ஸ்னோடன் என்ற பெயரில் பயணி ஒருவர் பயணிக்கிறார் என்ற தகவலை உறுதி செய்தார். ஒன்-வே டிக்கெட்டில் பயணம் செய்யும் அவருடன், ஹரிசன் என்ற பெயரில் மற்றொரு பயணியும் பயணம் செய்கிறார் என்றும் தெரிவித்தார்.
இந்த ஹரிசன், அநேகமாக விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் சாரா ஹரிசன் என்பவராக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. அதே விமானத்தில் உள்ள சட்ட ஆலோசகர்கள் யார் என்பது தெரியவில்லை.
மாஸ்கோ ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கியபின் என்ன நடந்தது என்பது சுவாரசியமாகவே இருக்கப் போகிறது. தகவல் கிடைத்ததும் விரிவாக வெளியிடலாம்.
படித்தது பிடித்திருந்ததா? இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கு உங்கள் ஆதரவு தேவை. வாசகர்கள் அதிகளவில் ஆதரவு கொடுக்கும் ரகத்திலான கட்டுரைகள் மற்றும் செய்திகளையே அதிகம் வெளியிடுகிறோம். இதே கட்டுரையை ஆங்கிலத்திலும் வெளியிடவில்லை. ஆனால், மற்றொரு கட்டுரையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக