வியாழன், 20 ஜூன், 2013

ஆந்திர அரசு அதிரடி திருப்பதி தேவஸ்தானம் மத்திய தணிக்கை துறை கட்டுப்பாட்டின் கீழ்?

திருப்பதி:திருமலை - திருப்பதி தேவஸ்தானம், மத்திய தணிக்கை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.தேவஸ்தானத்தின், "ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல்' எனப்படும் எஸ்.வி.பி.சி., "டிவி' சேனலின் நிதி மற்றும் அரிசி, நெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதல் நிதியில், அதிகாரிகள் முறைகேடு செய்வதாக, சர்ச்சைகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. தேவஸ்தானத்தின் வரவு, செலவுகளை சரி பார்க்க, இதுவரை, எந்த ஒரு விஜிலென்ஸ் அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை. தேவஸ்தானத்தின், வருமான ஆலோசகரும், தலைமை கணக்கு அதிகாரியும் சமர்ப்பிக்கும் அனைத்து, "பில்'களிலும், எவ்வளவு பெரிய தொகை குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்படும்.


நடப்பு, 2013-14ம் ஆண்டில், தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட், 2,248 கோடி ரூபாய். இதில், குறிப்பிடப்பட்டுள்ள செலவுகளுக்கும், வரவுகளுக்கும், தேவஸ்தான அதிகாரிகள், சரியான பதில் கொடுக்கவில்லை.எனவே, திருப்பதி தேவஸ்தானத்தை, மத்திய தணிக்கை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என, ஆந்திர மாநில அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆந்திர அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேவஸ்தானம், அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், ஒரு சில விஷயங்களில், அரசின் ஒப்புதலின்படியே செயல்பட வேண்டும். அதனால், அதை தணிக்கை துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என, ஆந்திர மாநில நிதித் துறையும், அட்வகேட் ஜெனரலும் ஒப்புதல் அளித்துள்ளனர்.முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இதற்கான பைலில் கையெழுத்திட்ட பின், கவர்னர் நரசிம்மனின் ஆய்வுக்கு கொண்டு செல்லப்படும். அவர் அனுமதி கிடைத்த உடன் அமலுக்கு வந்து விடும் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக