ஞாயிறு, 16 ஜூன், 2013

கூட்டல் கழித்தல் கணக்கு போடும் பிழைப்புவாதி விஜயகாந்த்

அடுத்த சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே, தி.மு.க., வுடன் நெருங்குவதை, விஜயகாந்த் தவிர்த்து வருவதாக, பின்னணி தகவல்கள் அம்பலமாகியுள்ளன.லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமையும் என்ற தகவல், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே வலம் வருகிறது. ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் கணக்கு, வேறு மாதிரியாக இருக்கிறது. வரும், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கியே, விஜயகாந்தின் முழு சிந்தனையும் இருக்கிறது. சறுக்கல்கள்: கட்சி ஆரம்பித்து, பல தேர்தலில், தனித்துபோட்டியிட்டு பெரும் எழுச்சியை, பெற்ற நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததன் பலனாக, பல்வேறு சறுக்கல்களை தே.மு.தி.க., சந்திக்கிறது என, விஜயகாந்த் கருதுகிறார்.உள்ளாட்சி தேர்தல் கூட்டணி முறிவுக்கு பின், அக்கட்சி எம்.எல். ஏ.,க்கள், நிர்வாகிகள் மீது நிலஅபகரிப்பு புகார்கள் போடப்பட்டு வருவதும், பார்த்து, பார்த்து தேர்வு செய்த, எம்.எல்.ஏ.,க்கள் பலரும், ஆளும்கட்சி பக்கம் இழுக்கப்படுவதும், விஜயகாந்திற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திஉள்ளது. உள்ளுக்குள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ள அவர், இனிவரும் தேர்தல்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என, முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து, விஜயகாந்திற்கு நெருங்கிய கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அடுத்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு மாற்று சக்தியாக தே.மு.தி.க., இருக்க வேண்டும் என, விஜயகாந்த் விரும்புகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போதே, அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைக்க அவர் விரும்பவில்லை. சேலத்தில், கட்சியினரிடம் கருத்து கேட்டு தான், கூட்டணி வைத்தார். தி.மு.க., தலைமை மீது இருந்த கோபமே, அ.தி.மு.க.,விடம் கூட்டணி வைக்க காரணமாக இருந்தது.இம்முறை, தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் பலரும் விரும்புகின்றனர்.



குழப்பங்கள்:

ஆனால், தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்தால், அடுத்து என்னவாகும் என்ற கணக்குகளை, விஜயகாந்த் போடத் துவங்கியுள்ளார். தற்போது தி.மு.க., வில் குடும்ப பிரச்னை, கோஷ்டி பிரச்னை என, பல குழப்பங்கள் உள்ளன. தே.மு.தி.க., வுடன் கூட்டணி அமைத்து, தி.மு.க., வெற்றி பெற்றால், மாநிலத்தில் மீண்டும் தி.மு.க., செல்வாக்கு பெற்றுவிடும். மத்தியிலும், எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், அதனோடு போய் தி.மு.க., ஒட்டிக் கொள்ளும்.பல கோஷ்டிகளாக செயல்படும் தி.மு.க., பின்னர் கட்டுகோப்பாக மாறிவிடும். அதன் பின், கடந்த ஆட்சியில் செய்ததைப் போல, தே.மு.தி.க., தலைமைக்கும், கட்சியினருக்கும் நெருக்கடி கொடுக்கும். ஏற்கனவே, மாநில ஆளும் கட்சி நெருக்கடியில் சிக்கியுள்ள தே.மு.தி.க., அதன்பின் இரண்டு கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், அது தே.மு.தி.க.,வின் வளர்ச்சியை அதிகரிக்கும்.லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டாலும், ஓட்டு வங்கி சரியாது. தி.மு.க., பின்னடைவை சந்திக்கும் என்பதால், அடுத்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளுக்கு இடையே தான் போட்டி, என்ற நிலை ஏற்படும்.தேசிய கட்சிகளின் ஆதரவுடன், தே.மு.தி.க., தலைமையில் புதுக் கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளது. ஐந்தாண்டுக்கு பின் நடக்கும் தேர்தலின் போது, ஆளும்கட்சி மீது, மக்களின் எதிர்ப்பு அலை அதிகம் இருப்பது வழக்கம். அதை பயன்படுத்தி, தன் இலக்கை பூர்த்தி செய்ய விஜயகாந்த் தீவிரமாக முயற்சிப்பார்.தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., விலகி, அ.தி.மு.க.வை ஆரம்பித்த பின்னர், கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க., பலவீனமடைந்த போது தான் ஆட்சியைப் பிடித்தார்.
தவிர்ப்பு:

ஜெயலலிதா முதல்வராக காரணமாக இருந்தது போல், அடுத்து கருணாநிதி முதல்வராக ஏன், தே.மு.தி.க., காரணமாக இருக்க வேண்டும் என, விஜயகாந்த் சிந்திக்க துவங்கியுள்ளார்.கடந்த இரண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,வில் இருந்து விலகி, கட்சி துவங்கிய ஒருவர், அடுத்த முதல்வராக வருவார் என, பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், மாறி, மாறி கூட்டணி வைத்ததால், அந்த கட்சி, இன்றைக்கு பரிதாப நிலையில் இருக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும், அந்த கட்சிக்கு, ஒரு மக்கள் பிரதிநிதி கூட இல்லை. அதேபாணியை பின்பற்றினால், தே.மு.தி.க.,விற்கும், இதேநிலை தான் ஏற்படும் என்பதில், விஜயகாந்த் உறுதியாகவுள்ளார். இதுபோன்ற பல்வேறு காரணங்களை மனதில் வைத்தே, தி.மு.க.,வுடன் நெருங்குவதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக