வியாழன், 27 ஜூன், 2013

சவுதி அரேபியா பெண்களுக்கு sports சுதந்திரம் கிடைக்காது ! ஒருகையால் கொடுத்து மறுகையால் பறிக்கப்படும்

saudi-women-saidaonline பெண்கள் விளையாட்டுக்கு பிகு பண்ணும் சவுதி அரேபியா ! பிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.;இனிமேல் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது” இது ஏதோ 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அரசின் அறிவிப்பு என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் இது சவுதி அரேபியாவின் தனியார் பள்ளிகளில் படிக்கும் பெண்களுக்கு விளையாடும் உரிமையை வழங்கிய சவுதி மன்னரின் அறிவிப்புதான் அது.
சவுதி அரேபியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ. இந்த புதிய சட்டம் ஷரியத் விதிகளின்படியும், இஸ்லாமிய சட்டங்களுக்கு ஏற்பவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதி முஹம்மத் அல் தக்கினி, “எங்கள் மத போதனைகளின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் பிறந்துள்ளது என்றும், ஷரியத்திற்கு ஏற்ப பெண்களை பள்ளிகளில் விளையாட அது அனுமதிக்கிறது” என்றும் அறிவித்துள்ளார்.
இத்தனை நாட்கள் பெண்கள் விளையாடுவதை அனுமதிக்காத ஷரியத் விதிகளும், இஸ்லாமிய போதனைகளும் திடீரென மாற்றத்தை அனுமதிப்பதும், அது தனியார் பள்ளிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

arabes2சென்ற ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது வெறும் ஆண் வீரர்களை மட்டும் அனுப்பும் பழக்கத்தை கைவிட்டு பெண் வீரர்களையும் அனுப்ப வேண்டும் என்று சர்வதேசிய ஒலிம்பிக் கமிட்டி சவுதி அரேபியாவுக்கு செல்லமாக அழுத்தம் கொடுத்தது. சவுதி முதலான வளைகுடா நாடுகள் அமெரிக்க பொருளாதாரத்தோடு கூட்டணியில் இருந்தாலும் மேற்கத்திய நாடுகளின் ‘ஜனநாயகம்’ மட்டும் அங்கில்லை. இதில் அரபுலக மக்கள் எழுச்சி லேசாவாவது சவுதியையும் தொட்டு விட்டால் என்ன செய்வது என்ற கவலை சவுதிக்கும் உள்ளது; அமெரிக்காவிற்கும் உள்ளது. அதற்கு மாற்றாகத்தான் இத்தகைய மேலோட்டமான உரிமைகளை வழங்கலாமா என்று சவுதி மன்னர் குடும்பம் அமெரிக்க வழிகாட்டுதலில் யோசிக்கிறது.
இப்படித்தான் முன்பு எப்போதும் இல்லாமல் அபூர்வமாக சவுதி அரபியாவை சேர்ந்த இரண்டு பெண் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெண்களை அனுப்பியதையடுத்து எழுந்த விவாதங்களை சமாளிக்கும் நோக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ளதுதான் தனியார் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உரிமை என்பது.
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் ஆளப்படும் சவுதி அரேபியா பெண்களின் வாழ்க்கையை பொறுத்த வரை இன்னமும் 8-ம் நூற்றாண்டிலேயே இருந்து வருகிறது. சவுதி அரேபியாவில் மேட்டுக்குடிச் சீமாட்டிகளின் பொழுது போக்காக மட்டுமே விளையாட்டுகள் நடைபெற்று வந்தன. பெரும் பணம் செலவழித்து அவர்கள் உறுப்பினராக உள்ள ஆடம்பர உடல் நல கிளப்களில் நடைபெறும் விளையாட்டுகளில் அவர்கள் பங்கேற்க முடியும். 2010-க்கு பிறகு இந்நிலையங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதால் தற்போது அவை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல பணக்கார தனியார் பள்ளிகளில் பெண்களுக்கு விளையாட்டு, உடற்கல்வி முதலியன அரசாங்க ஒப்புதல் இல்லாமலே நடந்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றை எல்லாம் அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்தது என்பதுதான் நிஜம்.
இப்போது அதை கண்டுகொள்வது போல நடிக்கிறது சவுதி அரசாங்கம். பெரும்பான்மை பெண்கள் செல்லும் அரசு பள்ளிகளுக்கு இந்த உரிமை வழங்கப்படாமல், தனியார் பள்ளிகளிடம் மட்டும் மதத்தின் புனிதம் சரணடைந்துள்ளது. அரசுத் துறையான உடல்நல அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கப்படும் அரசு பள்ளி மாணவிகளுக்கு விளையாடும் உரிமை கிடைப்பதை இன்னமும் ஷரியத் விதிகள் அனுமதிக்கவில்லையாம்
பணக்கார ஷேக்குகள் வீட்டின் பெண்களுக்கும், மன்னர்களின் வீட்டு இளவரசிகளுக்கும் பிறப்புரிமைகளாக இருப்பவை நடுத்தர – ஏழை இஸ்லாமியர்களுக்கு எளிதாக கிடைத்துவிடுமா?
சவுதி அரேபியாவின் மூத்த மத குருக்களோ இதைக்கூட ஏற்கத் தயாராக இல்லை, இப்போது வழங்கவிருக்கும் விளையாட்டு உரிமை தவறு என்று பிரகடனம் செய்திருக்கிறார்கள். பெண் என்பவள் வெளிப்படையாக பொது பாத்திரம் ஏற்கக் கூடாது, அவ்வாறு செய்வது அவர்களின் பாதுகாப்பிற்கு பங்கமாக அமையும் என்று தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஷேக் அப்துல்லா – அல் மனீயா என்ற மத அறிஞர்களின் சுப்ரீம் கவுன்சில் தலைவர், 2009-ல்  “பெண்கள் அதிகப்படியான உடல் அசைவு, குதித்தல் போன்றவைகள் தேவைப்படும் கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டுகளில் ஈடுபட்டால் கன்னித்திரை கிழிந்து அவர்கள் கன்னித்தன்மையும் புனிதத்தையும் இழந்து விடுவர்” என்று புலம்பியுள்ளார்.
இவ்வாறான பிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.
தனியார் பள்ளிகளில் விளையாட்டுகளை அனுமதிக்கும் அதே வேளையில் பெண் குழந்தைகள் கண்ணியமான ஆடைகள் அணிந்துக்கொள்வதையும், விளையாட்டு பயிற்சிகள் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடத்துவதையும் உறுதி செய்யுமாறு சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பெண்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து அடக்கி வைக்கும் சவுதி அரேபிய அரசு வளர்ந்து வரும் அந்நாட்டு பெண்களின் கோரிக்கைகளால் சில சீர்திருத்தங்களை அமல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் நாட்டில் நடைமுறையில் அவை பலனற்று போகின்றன.

கண்ணியமான உடை என்ற பெயரில் பெண்கள் உடுத்தும் உடைக்கு கடுமையான கட்டுப்பாடு சவுதியில் உள்ளது. முகத்தை நிகாப் என்ற துணியால் மறைத்துக்கொண்டு தான் அவர்கள் வெளியே செல்ல வேண்டும், சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களும் கூட கறுப்பான, இறுக்கமற்ற அபாயா என்ற மேல் அங்கியை அணிந்தே தீரவேண்டிய சட்டதிட்டங்கள் அங்கு உள்ளன.
சவுதி அரேபியாவின் வஹாபிய சட்டங்கள் பெண்கள் நாட்டை விட்டு வெளிநாடுகள் போவதற்குக்குக் கூட அனுமதிப்பதில்லை. குடும்பத்தில் உள்ள ஆண் காவலர்களான – கணவன், தந்தை, சகோதரன், இவர்களில் ஒருவரின் அனுமதியை விமான நிலையத்தில் அல்லது எல்லையில் பெற்றுதான் பெண்கள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதிலும் தவறுகளை தடுக்க, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் நடவடிக்கைகளை வேவுபார்த்து வருகின்றது அரசு. பெண்கள் எங்கு வெளியூர் சென்றாலும் அதைப்பற்றிய குறுஞ்செய்தி உடனே பெண்ணின் ஆண் காவலர்களுக்கு செல்பேசியில் அனுப்பப்படுகிறது
உலக அளவில் பாலின பாகுபாடுகள் உள்ள 135 நாடுகளில் சௌதி அரேபிய 131-வது இடத்தை பிடித்துள்ளது. பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை மறுத்திருக்கும் ஒரே நாடு சவுதி அரேபியாதான். பெண்கள் வாகனம் ஓட்ட நேரிட்டால் மக்ஹரம் அல்லாத பிற ஆண்களுடன் பேச நேரிடலாம் என்றும், அதிகமான வண்டிகள் தெருக்களில் ஓடும் சூழல் இதனால் உண்டாகி பிற இளம் ஆண்களை வாகனம் ஓட்டும் வாய்ப்பினை குறைக்கும் என்று இதற்கு காரணங்களை கூறுகின்றனர்.
ரியாத் மற்றும் ஜெட்டா போன்ற நகரங்களில், ஆடவர்களுடன் ஏற்படும் சந்திப்புகளை தடுக்கவே பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுமையாக இருப்பினும், டாக்ஸி அல்லது தனியார் வாகனங்களில் தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
சென்ற ஜனவரியில் சவுதி அரேபியாவின் சூரா கவுன்சிலில் மன்னர் அப்துல்லா பின் அப்துல்அஜீசின் அறிவுரையாளர்களாக பணிபுரிய 30 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஆண்கள் இருக்கும் அவையில் சேர்த்து அமர்த்தப்படாமல், பிரித்து வைக்கப்பட்டனர். தடுப்பு அரண் ஒன்றை கட்டும் திட்டமும் விவாதத்தில் உள்ளது.
மன்னர் அப்துல்லா, இளவரசர் அஜீஸ்
சவுதி மன்னர் அப்துல்லாவும், இளவரசர் சுல்தான் அப்துல் அஜீஸூம் நஜ்ரன் நகரில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்களுடன்.
வரலாறு காணாத அதிசயமாக முதன் முறையாக ஒரு பெண் சட்ட பயிற்சி பெற சென்ற ஏப்ரலில் அனுமதி வழங்கியுள்ளது சவுதி அரசாங்கம். ஆனால் நீதிமன்றத்தில் ஆண்கள் வழக்கறிஞர்கள், நீதிபதி என்று இருக்கும் பட்சத்தில் பாலின பாகுபாடு அங்கு எவ்வாறு நுழைக்கப்படும், நீதிமன்றத்தில் தடுப்பு அரண் கட்ட முடியுமா என்ற பிரச்சனையெல்லாம் இனிமேல்தான் வரும்
விற்பனை வேலையில் பங்கு பெற அண்மையில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் பெண்கள் ஆடை, உள்ளாடை விற்கும் கடைகளில் மட்டும் தான் வேலை செய்யமுடியும் என்ற துணைவிதியும் கூடவே உள்ளது. இத்தனை நாள் ஆண்களை பயன்படுத்தி செய்து வந்த இவ்வேலையில், அவர்கள் வாடிக்கையாளர்களான பெண்களிடம் பழகுவதற்கிருந்த வாய்ப்பு ஷரியத்படி அமைந்ததுதானா என்று ஆலோசிக்க கமிட்டி எதாவது அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை
இந்த அழகில் 2015 முதல் நகராட்சி தேர்தலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கவிருக்கிறாராம் ‘மன்னர்’ அப்துல்லா. பெண்கள் முகம் முழுவதும் தெரிவதனால் அவர்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்குவதைக்கூட இஸ்லாம் போதிக்கும் பர்தா முறையை மீறி புனிதம் கெடுகின்றது என்று உறுமும் மதகுருமார்கள் இதையெல்லாம் அனுமதித்து விடுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இவ்வாறு பெயரளவிலான பெண் உரிமைகள் கூட மதத்தின் புனிதத்தை கெடுகிறது என்றால் அமெரிக்காவின் ஏகாதிபத்திய போருக்கு அடியாட்களும், கூலிப்படையும் தந்து உதவி ஈராக், சிரியா, லெபனான் நாடுகளில் அப்பாவி குழந்தைகளையும் மக்களையும் கொல்வதற்கு துணை நின்றது மதத்தின் புனிதத்தை காக்கும் நற்செயலா என்ன?
ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வலிந்து ஜனநாயகத்தையும், மனித உரிமையும் ‘ஏற்றுமதி’ செய்யும் அமெரிக்கா, தனது வளர்ப்பு பிராணியான சவுதி அரேபிய அரசின் பிற்போக்கு பெண் அடிமைத்தனத்தையும், மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து ஒரு அறிக்கைகூட விடுவதில்லை. மாறாக, சர்வாதிகார சவுதி மன்னர்களுக்கும், ஷேக்குகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதின் மூலம் ஜனநாயகம் மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட எந்த உரிமையும் சவுதி மக்களுக்கு கிடைக்காமல் இருக்கவே வழிசெய்கிறது.
15 வயது பெண்ணை விளையாட அனுமதிக்காத சவுதி அவர்களை 90 வயது கிழட்டு ஷேக்குகளுக்கு மணம் முடிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்குகிறது. மனிதாபிமானமற்ற இச்செயல்கள் மதத்தின் புனித்த்தை காப்பது என்ற பெயரில் பெண்கள் மீது அரங்கேற்கப்படும் வன்முறைகள்.
ஒடுக்கப்படும் மக்களோடு பெண்களும் இணைந்து வீதியில் இறங்கி போராடி இந்த மன்னர்களின் சர்வாதிகாரத்தை ஒழிக்கும் போது மட்டுமே உண்மையான ஜனநாயகமும், பெண் உரிமையும் அங்கு மலரும்.
- ஜென்னி vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக