செவ்வாய், 11 ஜூன், 2013

மோடிக்கு கட்சிகளுக்குள் கடும் எதிர்ப்பு ? பாஜகவை இனி யார் காப்பாற்றுவார் ?

மும்பை :அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு
தலைவராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதை, காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், கடுமையாக விமர்சித்துள்ளன.தேர்வு:பா.ஜ.,வின், தேசிய செயற்குழு கூட்டம், கோவா மாநிலம் பனாஜியில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.இதை, பா.ஜ.,வில், அத்வானி உள்ளிட்ட, ஒரு சில தலைவர்களை தவிர, பெரும்பாலான தலைவர்கள், ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகளிடையே, இதற்கு, கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தேசியவாத காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர், மகேஷ் டாப்சி கூறியதாவது:நரேந்திர மோடி, பா.ஜ., பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, அந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, அத்வானி ராஜினாமா மூலம், வெளிப்படையாக தெரிகிறது. உட்கட்சி பூசலில் சிக்கியுள்ள பா.ஜ.,வால், அடுத்த லோக்சபா தேர்தலில், கண்டிப்பாக வெற்றி பெற முடியாது.இவ்வாறு, மகேஷ் டாப்சி கூறினார்.


கேரள மாநில காங்., தலைவர், ரமேஷ் சென்னிதலா கூறியதவது:நரேந்திர மோடியை, பா.ஜ., பிரசார குழு தலைவராக நியமித்தது, நாட்டின், மதச் சார்பின்மைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல். நரேந்திர மோடியின் செயல்பாடுகள், ஜனநாயகத்துக்கு, மதச் சார்பின்மைக்கும், எதிரானவையாகவே இருக்கும்.
கருத்து வேறுபாடு:

அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும், கருத்து வேறுபாடு இருப்பது போல் தோற்றமளித்தாலும், இரண்டு பேருமே, ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவர்கள் தான். நரேந்திர மோடியால், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சமாளிக்க, மதச் சார்பற்ற சக்திகள், ஓரணியில் திரள வேண்டும்.இவ்வாறு, ரமேஷ் சென்னிதலா கூறினார்.


துரதிருஷ்டம்:

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உ.பி., மாநில சட்டசபை விவகாரத் துறை அமைச்சருமான, ஆசம் கான் கூறுகையில், ""குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு காரணமானவர், நரேந்திர மோடி. இப்படிப்பட்ட அவரை, பா.ஜ.,வின், பிரசார குழு தலைவராக நியமித்தது, துரதிருஷ்டவசமானது,'' என்றார்.

காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் கூறியதாவது:நரேந்திர மோடி விவகாரதத்தில், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் ஏமாந்து விட்டார். நரேந்திர மோடி, எப்போதுமே, தனக்கு உதவி செய்பவர்களுக்கு துரோகம் செய்யும் வழக்கம் உள்ளவர். இவர் விஷயத்தில், ராஜ்நாத் சிங் கவனமாக இருக்க வேண்டும்.அத்வானி, இந்த நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். 1984ல், பா.ஜ.,வுக்கு இரண்டு எம்.பி.,க்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கையை, 182 ஆக உயர்த்தியவர், அத்வானி. அவரை புறக்கணிப்பது, பா.ஜ.,வுக்கு, நல்லதல்ல.இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.

நரேந்திர மோடியை, நாட்டின் அடுத்த பிரதமராக்க வேண்டும் என்பதே, மக்களின் விருப்பமாக உள்ளது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தான், அவர், பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக