திங்கள், 17 ஜூன், 2013

BJP: தன்தலையில் தானே வாரிபோட்டுகொள்ளும் கோஸ் இங்கு கற்பிக்கப்படும் ! கற்பிப்பவர் மோடி

தொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா

யுபிஏ அரசின் பல சறுக்கல்களை முன்னிறுத்தி, பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் செய்ததைத் தவிர்த்து, 2014 தேர்தலுக்கு முன்பாக, அரசியல் சூழலை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள பிஜேபி எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தோன்றவில்லை. ”பளபளக்கும் இந்தியா” என்ற முழக்கத்துடன், வாஜ்பாயி தலைமையில் 2004 தேர்தலிலும், பின்னர் 2009-ல் அத்வானி தலைமையில் (யுபிஏ அரசின் பிரும்மாண்ட ஊழல்களினால் இருந்த சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்த இயலாமல்!) பிஜேபி மண்ணைக் கவ்வியது. தற்போது மீண்டும், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசின் ஊழல்கள் மற்றும் திடமற்ற பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றினால் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் மேல் ஏற்பட்டிருக்கும் பெரிய அதிருப்தி நிலவும் நிலைமையிலும், நரேந்திர மோதியை தேர்தல் பிரச்சாரத் தலைவராக (அதாவது, 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரியாக மோதியை அறிவிப்பதற்கு அச்சாரமாக) பிஜேபி (RSS அதன் கையை முறுக்கியதன் விளைவாக்) அறிவித்துள்ளதை சொதப்பலின் உச்சம் என்று தான் கூற வேண்டும். பிஜேபியை பின்னாலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசியல் யதார்த்தம் குறித்த அறிவு குறைவு என்பது தெரிந்தது தான்.

 அகண்ட பாரதம், ஹிந்துத்வா போன்றவைகளை வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ்/பிஜேபி இன்னும் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது. குஜராத்தில் மோதி சிறந்த நிர்வாகத்தை அளித்து வருவது உண்மை தான் என்றாலும், மோதியை பெரும்பான்மையான இந்திய மக்களால் மதிக்கப்படும் “தேசிய”த்தலைவராக எண்ணுவதில் பெரிய அர்த்தமில்லை. யுபிஏ அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதை மட்டுமே முக்கியக் குறிக்கோளாக பிஜேபி கொண்டிருந்தால், இன்று ஐக்கிய ஜனநாயக முன்னணியிலிருந்து அதன் முக்கியக் கூட்டாளி JD(U) விலகும் நிலை ஏற்பட்டிருக்காது. 2014-ல் ஆட்சியைப் பிடிக்க பிஜேபி அதன் கூட்டணியில் இன்னும் சில பிராந்தியக் கட்சிகளைச் சேர்க்க முனைய வேண்டுமே அன்றி, கூட்டணியில் இருக்கும் கட்சிகளை துரத்தி விடக் கூடாது!

பிஜேபியின் இந்த நிலைமைக்கு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே காரணமில்லை, பிரதமர் பதவி ஆசை கொண்ட அதன் சில மூத்த தலைவர்களும் தான். 2014-ல் கூட்டணி துணை கொண்டு மட்டுமே ஆட்சிக்கு யாருமே வர இயலும் என்ற சூழலில், பொதுவாக அனைவருக்கும் ஏற்புடைய அத்வானியை பிஜேபி முன்னிறுத்தி இருப்பதே, சமயோஜிதமான முடிவாக இருந்திருக்கும். அத்வானிக்கு வயதாகி விட்டதாலேயே அவர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்ற வாதத்தில் அர்த்தமில்லை! அவர் ஒருவர் தான் இந்தியாவில் கிழ அரசியல்வாதியா என்ன? மேலும் அவரை விட வயதில் குறைந்தவர்களைக் காட்டிலும் அவர் மன அளவில், உடலளவில் திடமாகவே இருக்கிறார். நாடு முழுதும் நன்கு அறியப்பட்ட, பல கட்சிகளின் தலைமையுடன் நல்லுறவு வைத்துள்ள ஒரு தேசியத் தலைவர் அவர் என்பது தான் யதார்த்தம்.

பிராந்தியக் கட்சிகள் பல மாநிலங்களில் வலிமையுடன் இருக்கும் சூழ்நிலையில், நல்லதொரு கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்காமல், 2014 தேர்தலுக்குப் பின் பேரம் பேசி மோதி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்று பிஜேபி நினைப்பது, பகல் கனவாகி விடும் அபாயம் இருக்கிறது. மேலும், 2014 தேர்தலுக்குப் பின், தனிப்பெருங்கட்சியாக காங்கிரஸ் அமைவதிலும் / பிஜேபி அமைவதிலும் வித்தியாசம் இருக்கத் தானே செய்கிறது! இப்போது, மூன்றாவது அணி (இது நடைமுறை சாத்தியம் என்று நான் கருதவில்லை) குறித்த பேச்சு அடிபடுவதற்கும், பிஜேபியின் “மோதி முடிவே” காரணம்.

காங்கிரஸ் கட்சி இந்த குழப்பத்தில், மகிழ்ச்சியாக குளிர் காய்வது, தொலைக்காட்சியில் அதன் தலைவர்களின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. ராகுலை 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரி வேட்பாளாராக அறிவிப்பதை காங்கிரஸ் தள்ளிப் போடுவதை நல்லதொரு அரசியல் யுக்தியாகத் தான் நோக்க வேண்டும்! சரியான தருணத்தில் காங்கிரசின் பலம் கூடி விட்டது மக்களின் துர்பாக்கியம் தான். எதிர்காலத்தில் மோதி இந்தியப் பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மோதி தற்சமயம் சற்றே பொறுமை காத்திருக்கலாம்!

மதச்சார்பின்மையில் பிஜேபியை விட காங்கிரஸ் எந்த விதத்திலும் மேல் இல்லை (எ,கா: 1984 சீக்கியப் படுகொலை) என்றாலும், TMC, JD(U), SP, BSP, BJD, RJD, DMK, NC ... என்று பல பிராந்தியக் கட்சிகள் (இன்றைய லோக்சபாவில் இவைகளின் மொத்த பலம் 163 சீட்டுகள்) மோதியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிஜேபி சற்றாவது யோசிக்க வேண்டாமா! தனது பிரதம மந்திரி வேட்பாளர் யாரென்று தீர்மானிக்க பிஜேபிக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதல்ல பிரச்சினை. ”கூட்டணி அரசு” காலகட்டத்தில், தக்க ஆலோசனை செய்து, சரியான முடிவெடுப்பது தான் சமயோஜிதமாகும்.

மக்கள் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கையே, பல குழப்பங்களுக்கு நடுவில், 9 ஆண்டுகள் காங்கிரஸ், பிரதமராக வைத்திருக்கும்போது, அத்வானி போன்ற ஒரு Tall Leader-ஐ ஓரங்கட்டி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கோண்டிருக்கும் பிஜேபியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதை எழுதும்போது ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக, JD(U)வை குற்றம் சாட்டி, தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :) “இன்று பீகாருக்கு கறுப்பு தினம்” என்றும் முழங்கினார்! பாவம் பிஜேபிக்கு 2014 தேர்தலே கறுப்பாகி விடும் போலிருக்கிறதே!

- எ.அ.பாலா  idlyvadai.blogspot.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக