திங்கள், 17 ஜூன், 2013

6வது எம்.பி. இடம் ஜெயிக்கப் போவது நிச்சயமாக ......தான்

சென்னை: லோக்சபா தேர்தலில் கூட இத்தனை பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் பெரும் பரபரப்பான திருப்பங்களை எதிர்கொண்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 151 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுக 5 வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தது. முன்னதாக 4 அதிமுக வேட்பாளர்களையும் எஞ்சிய எம்.எல்.ஏக்களின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதிமுக அளிக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்கு மாறாக 5 வேட்பாளர்களை அதிமுக அறிவிக்க தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் வேட்பாளராக கனிமொழி மனுத்தாக்கல் செய்தார்.
அதே நாளில் தேமுதிகவின் சார்பிலும் வேட்புமனு வாங்கிச் செல்ல கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக டி.ராஜா அறிவிக்கப்பட்டார். இதனால் 6வது எம்.பி. இடத்துக்கு நிச்சயம் தேர்தல் என்ற நிலை உருவானது. இந்த தேர்தல் பரப்பில் அதிமுகவோ திடீரென தமது 5வது வேட்பாளரை வாபஸ் பெற்று டி. ராஜாவை ஆதரிப்பதாக அறிவித்துது திருப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் 6வது எம்.பி. இடத்தில் கனிமொழியே வேட்பாளராக இருந்தார். ஆனால் மற்றொரு திருப்பமாக தேமுதிக சார்பில் இளங்கோவன்தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கனிமொழியின் வெற்றி நிச்சயம் என்றே கூறப்படுகிறது. தேமுதிக வேட்பாளரை களம் இறக்கியிருப்பதால் வாக்குப் பதிவு நடைபெறும். அந்த வாக்குப் பதிவில் குறைவான வாக்குகளைப் பெற்றவர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். அப்படி வாக்குப் பதிவு நடைபெறும் போது திமுகவுக்கு அக்கட்சியின் 23 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் கிடைக்கும். குறைந்தபட்சம் 28 எம்.எல்.ஏக்களாவது கனிமொழிக்கு ஆதரவாக இருப்பர். இதில் பாமகவின் 3 எம்.எல்.ஏக்களை நாம் சேர்க்கவில்லை. அப்படியான ஒரு நிலையில் தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் கிடைக்கும். கூடுதலாக எந்த ஒரு கட்சியும் வாக்களிக்கப் போவதும் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும் நிலையில் இடதுசாரிகளின் வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைக்க வாய்ப்பும் இல்லை. இதனால் கனிமொழி எம்.பி.யாக வெற்றி பெறுவது எளிதான ஒன்றாக இருக்கிறது என்றே கூறப்படுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக