சனி, 8 ஜூன், 2013

அழகிரியின் கல்லூரிக்கு அனுமதி வழங்காததால் அண்ணா பல்கலை கழகத்திற்கு ரூ.25000 அபராதம்

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்காததால், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இதற்கு, தேசிய தொழில்நுட்ப கல்வி கழகம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் கல்லூரி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, அனுமதி வழங்கி உத்தரவிட்டார். டிவிஷன் பெஞ்சும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கவும், பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்கவும் அனுமதி வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளையை சேர்ந்த ஜெயகரன் குரூப், ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிறப்பித்த உத்தரவு வருமாறு: கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க ஏற்கனவே உயர் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை மதித்து கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதிலிருந்தே பல்கலைக்கழகத்தின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. இதற்காக அண்ணா பல்கலை. பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை கல்லூரிக்கு பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்து பல்கலைக்கழகம் மே 20ம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும், பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்கவும் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக