புதன், 1 மே, 2013

Chemmeen செம்மீன் காதல் கதையாக அறியப்பட்டாலும் அது மீனவர் வாழ்க்கை






கடல் படம் மீனவர் வாழ்க்கையை பதிவு செய்யவில்லை என்கிற உங்கள் பதிலில் எனக்கு திருப்தியில்லை.
 -நரசிம்மன், சென்னை.
கடல் படத்தில் மீனவர் வாழ்க்கை பதிவு செய்யப்படவில்லை என்பது பிரச்சினையல்ல, மீனவர்களை இழிவாக சித்தரித்திருப்பதுதான் கண்டனத்திற்குரியது.
கத்தோலிக்க மீனவர்கள் நிலையிருந்து கதையை சொல்லாமல், கத்தோலிக்க பாதிரியார் வழியாக கதை சொல்லப்பட்டிருகிறது. அதனால்தான் பாதிரியார்களை உயர்வாகவும் மீனவர்களை இழிவாகவும் சித்தரித்துள்ளனர்.
உழைக்கும் மக்களைப் பற்றி படம் எடுப்பவர்கள், ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையை, வாழ்க்கை முறையை இரண்டு கதாபாத்திரங்களுக்குள் சுருக்கி, அதற்குள் தங்களின் விருப்பு, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் கதை சொல்லி முடித்துவிடுகிறார்கள்.
அதனால்தான் மக்களின் விரிந்த வாழ்க்கையை குறைந்த பட்ச அளவில்கூட அவர்களால் பதிவு செய்ய முடியவில்லை.
உழைக்கும் மக்கள் என்றால் குறைபாடுகளே அற்றவர்கள் என்பதல்ல, அவர்களின் குறை நிறைகளோடு பதிவு செய்யவேண்டும். அதற்கு அந்த மக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல, ஆனால் அந்த மக்களின் வாழ்க்கையை. தெளிவான அரசியல் கண்ணோட்டத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.
தொழில் சிரமம், வறுமை, காதல், பொறாமை, பாசம், நம்பிக்கைத் துரோகம், வெறுப்பு, அன்பு, குடும்பம், அக்கம் பக்கம், பேராசை, அழகியல், அப்பாவித்தனம், பிற சமூகத்தோடு மீனவர்களுக்குள்ள உறவு – இப்படி பலவகைகளில் மீனவர் வாழ்க்கையை தகழி சிவசங்கரன் பிள்ளை தனது ‘செம்மீன்’ நாவலில் வாழ்ந்திருப்பார்.
கடற்கரையில் காய வைக்கப்பட்டிருக்கிற கருவாட்டின் ‘நாற்றத்தை’ உணர்ந்து முகம் சுழிப்பதும், இழிவாக பேசுவதும் சைவ உணவு பழக்கமுள்ளவர்கள் மட்டுமல்ல; மீனை விரும்பி சாப்பிடுகிற மீனவர் அல்லாதவர்களும்தான்.
ஆனால், தகழி சிவசங்கரன் பிள்ளை கடற்கரையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கிற அந்த மீன்களை, ‘சூரிய ஒளியில், வெள்ளிக் காசுகளைப்போல் தகதகத்தன’ என்று வருணித்திருப்பார். இதுதான் மீனவனின் பார்வை.
மீன், சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு ஓர் உயிர். அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு உணவு. ஆனால், மீனவர்களுக்கோ பொருளாதாரம்.
தகழியின் ‘செம்மீன்’ நாவல் படமானபோது, நாவலில் இருந்த நேர்த்தியை, அழகியலை படத்தில் அப்படியே கொண்டுவர முடியவில்லை. கொண்டுவரவும் முடியாது. ஆனால், வந்தவரை மிக சிறப்பாகதான் இருந்தது.
படத்தின் வண்ணம், அதுவே ஒரு உன்னதம். மார்க்ஸ் பாட்லேவின் ஒளிப்பதிவு அதுவும் அத்தகையதே. கடற்கரையின் காற்றோடு கலந்திருக்கிற சலில் சவுத்ரியின் இசை,
அடிமைத்தனம், நம்பிக்கை துரோகம், பேராசை, ஆதிக்க கணவன், மனநிலை பாதிக்கப்பட்டவன்; செம்பண்குஞ்சுவாக வரும் கொட்டாரகரா ஸ்ரீதரன் நடிப்பில்தான் எத்தனை உணர்வுகள்.
‘செம்மீன்’ காதல் கதையாக அறியப்பட்டாலும் அது மீனவர் வாழ்க்கையாகத்தான் புரிந்துகொள்ளப்பட்டது.
கேரளத்தில் அந்தப் படம் மீனவர் அல்லாத மக்களிடம் மீனவர் பற்றிய ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.
சிறந்த படங்களை, மொழிகளைத் தாண்டியும் தமிழர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு, ‘செம்மீன்’ தமிழகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பதே சாட்சி.
உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உன்னதமாக சொன்ன, ‘செம்மீன்’ போல் ஒரே ஒரு படம் தமிழில் உண்டா?
  mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக