திங்கள், 27 மே, 2013

சாரு நிவேதா : இந்த Blue வைப் பார்த்தவர்கள் எனக்கு எழுதுங்கள்

Blue is the warmest colour என்ற ஃப்ரெஞ்ச் லெஸ்பியன் படம் இந்த ஆண்டு Cannes
திரைப்பட விழாவில் Palme d’Or விருதைப் பெற்றிருக்கிறது.  கிட்டத்தட்ட இலக்கியத்தில் நோபல் பரிசுக்குச் சமம் இந்த விருது.  மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் விசேஷம் என்னவென்றால், சமீபத்திய திரை வரலாற்றில் இவ்வளவு அப்பட்டமான உடலுறவுக் காட்சிகள் காண்பிக்கப்பட்டதில்லை என்கிறார்கள் விமர்சகர்கள்.  இப்படி ஒரு படத்தை நான் இயக்கியிருந்தால் தமிழ்நாட்டில் என் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.  ஃப்ரெஞ்ச் இயக்குனர் Catherine Breillat பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  படித்துப் பாருங்கள்.  அவருடைய ரொமான்ஸ் என்ற ஒரு படம்.  அதில் வரும் பள்ளி ஆசிரியை.  அவள் கணவன் ஒரு வேஸ்ட்.  அவனோடு அவளுக்குத் திருப்தி இல்லை.  (எக்ஸைல் ஞாபகம் வருகிறதா?) தேக வேட்கையைத் தீர்த்துக் கொள்ள என்னென்னவோ செய்கிறாள்.  கடைசியில் அவளுடைய பள்ளியின் பிரின்ஸிபால் அவளைத் திருப்திப் படுத்துகிறார்.  அவளை கை கால்களைக் கட்டிப் போட்டு (நிர்வாணமாக) அவளது நிதம்பத்தில் மயிலிறகு போன்ற ஒரு வஸ்துவால் வருடிக் கொண்டே இருப்பார்.  அவள் உச்சம் அடைவாள்.  இது அவளுடைய விருப்பத்தின் பேரில் நடக்கிறது.  (இந்தியாவின் கற்பழிப்பு சம்பவங்களோடு இதையெல்லாம் இணைத்துப் படித்து விடாதீர்கள்!)
இப்போது கான் திரைப்பட விழாவில் விருது வாங்கி இருக்கும் “Blue” film-ஐ இயக்கியிருப்பவர் Abdellatif Kechiche துனீஷியாவைச் சேர்ந்தவர்.  பாரிஸில் வசிக்கும் meghrib கலைஞர்களைப் பற்றி விரிவாக தப்புத் தாளங்கள் நூலில் எழுதியிருக்கிறேன்.  மொராக்கோ, அல்ஜீரியா, துனீஷியா போன்ற அரபு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து ஃப்ரான்ஸில் வாழும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஃப்ரெஞ்ச் கலாச்சாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.  Abdellatif என்ற பெயரைப் பார்த்ததுமே அவரைப் பற்றிய விபரத்தை ஆர்வத்துடன் தேடினேன்.  துனீஷியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர் என்று தெரிந்தது.
இந்தப் படமும் ஒரு நாவலைத் தழுவியே எடுக்கப்பட்டிருக்கிறது. Julie Maroh எழுதிய Blue is a warm colour என்ற graphic நாவல்.  நம் ஊரில் நாவலைத் தழுவி எப்படிப் படம் எடுக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும்.  காரணம், தமிழ்ச் சமூகம் படிப்பறிவில்லாத ஒரு சமூகம்.  Julie Maroh ஒரு வயதான பெண்ணாக இருக்கும் என்று எண்ணி அவரைப் பற்றித் தேடினால் அவர் ஒரு இளம் பெண் என்று தெரிந்தது.  அவருடைய பேட்டியை இந்த இணைப்பில் நீங்கள் கேட்கலாம்.
youtube.com/watch?v=ghxAjKs6KlU
ஃப்ரான்ஸ் இன்று இந்த நிலைமையில் இருக்கிறது.  கிட்டத்தட்ட நீலப்படங்களில் காணக்கூடிய அளவுக்கு அப்பட்டமாக பாலுறவுக் காட்சிகள் நிரம்பிய படங்களுக்கு அங்கே விருது கொடுக்கிறார்கள். 
எது போர்னோ எது கலை என்ற வித்தியாசம் அங்கே தெரிந்திருக்கிறது.  ஆனால் இங்கே சென்னையில் ஃப்ரெஞ்ச் கற்பிக்கும் மாமிகள் என் நாவலை ஆபாசம் என்கிறார்கள்.
அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் வேலை பார்க்கும் அய்யர் அய்யங்கார் மாமிகள் ஸ்ரீராமானுஜரை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களிடம் கொண்டு போய் ஸீரோ டிகிரியைக் காண்பித்தால் மிரண்டு ஓடுகிறார்கள். இவர்களுக்குத் தெரிந்த தமிழ் புத்திஜீவிகள் அப்துல் கலாம், கமல்ஹாஸன், சுஜாதா ஆகியோர் மட்டுமே.  வைரமுத்து பெயரே தெரியவில்லை.  60 வயது அலியான்ஸ் மாமியும் இப்படித்தான் இருக்கிறார்.  20 வயது அய்யங்கார் பாப்பாவும் இப்படித்தான் இருக்கிறார்.  இதுதான் தமிழ்நாட்டு அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ்களின் நிலைமை.
ஒரு ஓரத்தில் சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவலின் ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பு கரை படியாமல் கிடக்கிறது.  ம்… ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூலா அது?  யார் கண்டது, அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகளையும் ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கலாம்…
ஸீரோ டிகிரியும், ராஸ லீலாவும் ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டால் எனக்கு ஃப்ரெஞ்ச் குடியுரிமை கிடைக்கும்.  40 ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் ஆசிரியர்களை இங்கே தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்கள்.  அத்தனை பணியையும் என்னுடைய இரண்டு நாவல்களையும் ஒன்றாக ஒப்பிட்டால் என் தராசுத் தட்டு கீழே இருக்கும்.  ”ஓரமாகப் போ, ரொலான் பார்த், குப்பை பொறுக்கும் அந்தச் சிறுமியின் பக்கம் போகாதே” என்ற ஒரு வாக்கியம் ஸீரோ டிகிரியில் வரும்.  அதன் அர்த்தம் என்ன என்று ஸோர்போன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குத்தான் புரியும்; இங்கே உள்ள அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் மாமிகளுக்குப் புரியாது.  ஃப்ரெஞ்ச் கலாச்சாரத்தை என்னுடைய நாற்பது ஆண்டுக் கால எழுத்தில் இறக்கி இருக்கிறேன்.  அப்துல் லத்தீஃப் கெச்சிசே படமாக எடுத்து விட்டார்; நான் எழுத்தில் வைத்திருக்கிறேன்.  அதுதான் வித்தியாசம்.
இந்த Blue வைப் பார்த்தவர்கள் எனக்கு எழுதுங்கள்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக