ஞாயிறு, 5 மே, 2013

பொது சொத்துகளை சேதப்படுத்தும் பா மா காவிடம் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்

தர்மபுரி மோதலின் வடு மறையும் முன், மரக்காணத்தில் கலவரம்

இச்சம்பவங்கள் ஜனநாயக முறைகளுக்கு எதிரானது. ஒரு சமூகத்தை, பிற சமூகங்களுக்கு எதிராக திருப்பும் செயல். சேதம் ஏற்படுத்தியவர்களிடம், இழப்பீட்டை வசூலிக்க வேண்டும், என, கோரிக்கைகள் எழுந்தபடி உள்ளன. இதுகுறித்து, அரசியல் கட்சிகளின் கருத்துகள் இதோ:
நாட்டில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, பல ஆண்டுகள் சிறை சென்ற, அரசியல் தலைவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்காக, எந்த வன்முறையும் நிகழ்ந்ததில்லை. அரசு தொடர்ந்த வழக்கை நடத்தி, நிரபராதி என,விடுதலையாகி வெளியில் வருவது தான் ஜனநாயகம்.ஆனால், மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடத்த விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, கூட்டம் நடத்துவதாக பா.ம.க., ஒப்புக் கொண்டது. ஆனால், எந்த நிபந்தனையையும் அவர்கள் பின்பற்றவில்லை.
மாற்றுக் கட்சித் தலைவர்களை தாறுமாறாக திட்டியுள்ளனர். குடித்து விட்டு, பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்சித் தலைவரே, "நிபந்தனையை மீறுகிறேன்; கைது செய்து பார்' என, சவால் விடுகிறார். இது, பொறுப்புள்ள கட்சித் தலைவருக்கு அழகல்ல.வழக்கு போட்டுப் பார் என, ராமதாஸ் சவால் விட்டார். அரசு, அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், வழக்கை சந்திக்காமல், பஸ்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என, மிரட்டல் அரசியலை நடத்துகின்றனர். எந்த அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என, பா.ம.க.,வினர் நடந்து கொள்வது நியாயமற்றது.ஜாதி அடிப்படையில் கட்சியைத் துவங்கி, அந்த ஜாதி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி, அரசியலை நடத்துகின்றனர். இதனால், அந்த ஜாதியில் உள்ள பெருவாரியான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கலவரங்கள் நடக்கும் என்று கருதப்படும் இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும். குறிவைத்து தாக்கப்படும், ஆதிதிராவிடர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது முக்கியமான ஒன்று.
ஆறுமுகம்,எம்.எல்.ஏ., இந்திய கம்யூ.,
பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள், தனி நபராகவோ, அமைப்பாகவோ, அரசியல் கட்சியாகவோ இருந்தால், அவர்களிடமிருந்து, சேத மதிப்பீட்டை வசூல் செய்ய வேண்டும். இதை பின்பற்றினால், பொது சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த எதிர்காலத்தில் தயங்குவர்.பா.ம.க., தலைவர்கள் கைது தொடர்பாக, வட மாவட்டங்களில் நடக்கும் கலவரங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அக்கட்சியிடம் இழப்பீட்டுத் தொகையை, தமிழக அரசு வசூலிக்க வேண்டும். இந்நடவடிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் உள்ளது.
கேரள மாநிலத்தில், வேலை நிறுத்தம் செய்ய அறிவிப்பு வெளியிடும் அமைப்புகள் தான், வேலை நிறுத்தத்தின் போது, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் பொறுப்பு என, நிர்பந்திக்கப்படுகின்றனர்.பா.ம.க., ஆட்களை சேர்த்துக் கொண்டு, பிற இன மக்களை மிரட்டுகிறது. இதற்கு, மாமல்லபுரத்தில், அக்கட்சி நடத்தியசித்திரைத் திருவிழாவுக்கு திரண்ட கூட்டத்தை கையில் எடுக்கிறது. இனம், ஜாதி போன்றவை வைத்துக் கொண்டு, பிறரை எச்சரிக்கவோ, பயமுறுத்தவோ நினைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல.
பா.ம.க.,வினர் சட்டத்தை மீறி நடந்து கொண்டனர். அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டத்துக்கு முன், அனைவரும் சமம் என்பது, அக்கட்சித் தலைவர்களுக்குத் தெரியும். ஆனால், சுய லாபங்களுக்காக, இனத்தையும், நம்பி வருபவர்களையும் பயன்படுத்துவது, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை ஏமாற்றுவதாகும்.அவர்களுக்கு நல்லது செய்கிறேன் என, பிற இனத்தவரை அவர்களுக்கு எதிரியாக்குவது, காலத்துக்கும் செய்யும் துரோகமாகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை, மேம்படுத்த அவர்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும். மாறாக, வன்முறைக்கு பலியாக்கக் கூடாது.
ஜான் ஜேக்கப்,எம்.எல்.ஏ., காங்கிரஸ்
கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் சாவு என்பர். அதுபோல, வன்முறையை நடத்துபவர்கள், வன்முறையின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.மாமல்லபுரத்தில், சித்திரைத் திருவிழா நடத்த பா.ம.க., அனுமதி கேட்டது. இதற்கு, முந்தைய ஆண்டுகளில், சித்திரைத் திருவிழாவின் போது நடந்த வன்முறைகள், கலவரங்களை சுட்டிக்காட்டி, விழா நடத்த, போலீசார் அனுமதி மறுத்தனர். பா.ம.க.,வினர், ஐகோர்ட்டுக்கு சென்றனர்.
ஐகோர்ட் உத்தரவுப்படி, பல்வேறு நிபந்தனைகளை விதித்து, போலீசார் அனுமதி அளித்தனர். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக, எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டு, விழாவை பா.ம.க.,வினர் நடத்தினர்.ஆனால், ஏற்றுக்கொண்ட நிபந்தனைகள் எதையும் மதிக்காமல், வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசி, கலவரத்தை நடத்தினர். இதற்கு காரணமானவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், கட்சித் தலைவர்கள் கைதுக்காக, பஸ்களை எரிப்பது, கடைகள் மீது தாக்குதல் நடத்துவது என, பா.ம.க.,வினர் ஈடுபடுவது நியாயமற்றது.
வன்முறை எதற்காகவும், எந்த வடிவத்திலும் நடப்பதை ஏற்க முடியாது. வழக்குகள் பதிவு செய்யப்பட்டது நிரபராதிகள் மீது அல்ல; அதுபோல, கைது செய்யப்பட்டவர்களும் அப்பாவிகள் அல்ல. வழக்கை நடத்தி, நிரபராதி என விடுதலையாவது, பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் செய்ய வேண்டியது. அதை விடுத்து, பாதிப்பை மேலும் ஏற்படுத்துவது போல் நடப்பது முறையற்றது.இதற்காக, பொதுமக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். திசை திருப்பவோ, மிரட்டவோ வன்முறையில் ஈடுபடுவது, எந்த நேரத்திலும் பலனைத் தராது. அதன் எதிர் விளைவுகளை, வன்முறையில் ஈடுபடுபவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
சந்திரகுமார்,எம்.எல்.ஏ., தே.மு.தி.க.,
மிரட்டல் அரசியலின் ஒரு பகுதியாக, கட்சித் தலைவர் கைதானதும், வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதனால், பொதுமக்கள் சொல்லொணா துயருக்கு உள்ளாக்கி வருகின்றனர்.தர்மபுரியில், ஏற்பட்ட ஜாதி கலவரத்தின் போதே, கடும் நடவடிக்கையை அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், போலீசாரின் தவறான அறிக்கைகளால், அரசு நடவடிக்கை முடங்கிவிட்டது. இதில், ஆதாயம் பெற்றவர்கள், அடுத்த கட்டமாக மரக்காணத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜாதி அரசியல் என்பது, மிரட்டல் அரசியல் தான். இதன், அடுத்த கட்டமாக வன்முறை அரசியலில் ஈடுபட்டு, தொடர் மிரட்டலை செய்ய முயற்சிக்கின்றனர். மரக்காணம் கலவரம் தொடர்பாக, அரசு எடுத்த கைது நடவடிக்கைகளுக்கு, அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு நிலவுகிறது. இதனால், ஆத்திரமடைந்து, பஸ்கள் மீது கல் வீசுவது, பஸ்களை கொளுத்துவது, பொது அமைதியை சீர்குலைப்பது போன்ற வன்முறைகளை செய்து வருகின்றனர்.இதற்கு, பணிந்து விடாமல், போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து, பொது அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்தை சீராக்குதல், கடைகளை வழக்கம் போல் இயங்கச் செய்தல் ஆகியவற்றை மேற்கொண்டு, இயல்பு வாழ்க்கையை சீர் செய்ய, அரசு தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதே நேரத்தில், வட மாவட்டங்களில் பல இடங்களில், வன்முறையை ஏற்படுத்த, வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதன் மூலம், மக்களிடையே பீதியை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையைப் போல, பீதியை ஏற்படுத்த, வதந்தியை பரப்புபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலபாரதி,எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூ.,

நடந்துள்ளது. கொலை, கொள்ளை, தீ வைப்பு சம்பவங்கள் இதிலும் அரங்கேறியுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக, பா.ம.க., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், வட மாவட்டங்களில் கலவரத்தை பரப்பி வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில், 350 பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 10 பஸ்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட இடங்களில், மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். பலநூறு கடைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், பொது அமைதி கடுமையாக பாதித்துள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக