ஞாயிறு, 12 மே, 2013

லஞ்சம், மோசடி: மத்திய அமைச்சர்கள் அஸ்வனி குமார், பவன்குமார் பன்சால் நீககம்!

டெல்லி: மத்திய அமைச்சர்கள் பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் ஆகியோர் நேற்று இரவு நீக்கப்பட்டனர். ஊழல் முறைகேடு புகாரில் சிக்கியதால் ரயில்வே அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சாலும், சிபிஐக்கு நெருக்குதல் கொடுத்த சர்ச்சையில் சிக்கியதால் மத்திய சட்ட அமைச்சர் பதவியை அஸ்வனி குமாரும் ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இருவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வழங்கினர். பிரதமரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்த சில மணி நேரங்களுக்குள் இந்த விலகல் அறிவிப்பு வெளியானது. முன்னதாக, அஸ்வனி குமாரும், பவன் குமார் பன்சாலும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த மூன்று வாரங்களாகக் குரல் கொடுத்து வந்தன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் "பன்சால், அஸ்வனி ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாஜக, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், எந்த முக்கிய அலுவல்களும் நடைபெறாத நிலையில் மக்களவை, மாநிலங்களவை கூட்டத் தொடர் திட்டமிடப்பட்ட மே 10-ஆம் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே (மே 8) மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், ரயில்வே பணி நியமன முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, பன்சாலின் உறவினர் சிங்லாவை கடந்த வாரம் கைது செய்தது. அதைத் தொடர்ந்து, லஞ்சம் கொடுத்ததாக ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமாரும் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றும் பவன் குமார் பன்சாலின் தனிச் செயலரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ராகுல் பண்டாரி, அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது அமைச்சக விவகாரங்களில் சிங்லாவின் தலையீடு, அமைச்சர் அலுவலகத்தில் இருந்தபடி அவர் முக்கியப் பிரமுகர்களையும், பல்வேறு தொழிலதிபர்களையும் சந்தித்து தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக பவன் குமார் பன்சாலிடம் நேரில் விசாரிக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இது குறித்து பிரதமரின் கவனத்துக்கும் சிபிஐ அதிகாரிகள் கொண்டு சென்றனர். நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சோனியா காந்தி தலையிட்டதால், பவன் குமார் பன்சாலையும், அஸ்வனி குமாரையும் பிரதமர் மன்மோகன் சிங் செல்போனில் நேரடியாகத் தொடர்பு கொண்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் முன்பு தங்கள் அமைச்சகங்களுக்குச் சென்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் என்ற முறையில் நிலுவையில் இருந்த கோப்புகளில் அவர்கள் கையெழுத்திட்டனர். பின்னர் முதலாவதாக, பவன் குமார் பன்சால் இரவு 7.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். சுமார் 10 நிமிடங்கள் அங்கு இருந்த பன்சால் பின்னர் பிரதமர் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அஸ்வனி குமார் இரவு 9 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பிரதமருடனும், சோனியாவுடனும் அவர் சுமார் 45 நிமிடங்கள் பேசினார். பின்னர் வெளியே சென்ற அவர் நிருபர்களிடம் 'எனது பதவியை ராஜினாமா செய்து விட்டேன்' என்று உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, இருவரது ராஜினாமா கடிதங்களையும் பெற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து, புதிய ரயில்வே அமைச்சர், மத்திய சட்ட அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படுவோரின் விவரம் சனிக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக