வியாழன், 9 மே, 2013

காங்கிரசுக்கு பூஸ்ட் கொடுத்த கர்நாடகம்.. பொதுதேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிறது?

கர்நாடக மக்கள், ஒரு நல்ல மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்பை இழந்து விட்டனர் என்றே, நேற்று வந்த தேர்தல் முடிவு தெரிவிக்கிறது. இது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி என்று, கூற முடியாது. மாறாக, பா.ஜ.,விற்கு எதிரான ஓட்டு என்று தான் கூற முடியும். இதன் ஒரு விளைவாக, அழிவை நோக்கி பயணித்து கொண்டு இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், மீண்டும் உயிர் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது. எடியூரப்பாவை நீக்காமல் இருந்திருந்தால், பா.ஜ.,வுக்கு இந்த நிலை வந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இது தவறு; எடியூரப்பா இருந்திருந்தால், பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக வாய்ப்பு இருந்திருக்குமே ஒழிய, மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்க முடியாது.


இரும்பு தாது சுரங்க ஊழல் விவகாரம் பூதாகாரம் ஆகாவிட்டால், கர்நாடகாவின் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, அந்த விவகாரத்தில் தகுந்த ஆதாரங்களை திரட்டாமல் இருந்திருந்தால், எடியூரப்பா முதல்வராக நீடித்திருப்பார். அவர் சிறை சென்ற பிறகு, அவருடைய கைப்பாவைகளே அரசில் நீடித்தனர். இந்த ஊழல் பேர்வழிகள் தான், பா.ஜ.,விற்கு பெரிய பலவீனமாக அமைந்து விட்டனர். நீதிபதி சந்தோஷ் ஹெக்டே நேர்மையானவர். அவருக்கு கர்நாடகா மக்களிடையே நல்ல பெயரும், செல்வாக்கும் இருந்தது. அவரை, "ஆம் ஆத்மி' கட்சி வரவேற்றும், அவர் அரசியலில் ஈடுபட மறுத்து விட்டார். இது, அவர் கர்நாடக மக்களுக்கு செய்த துரோகம் என்றே கூற வேண்டும். இதனால் தான் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறலாம்.

இந்த சூழலில், காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இருப்பினும், இந்த வெற்றியின் தோற்றத்தையும், வேகத்தையும் தேசிய அளவில் பயன்படுத்த, காங்கிரஸ் தயாராகி வருகிறது என்ற பேச்சு உள்ளது. வரும் நவம்பர் மாதம், பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும், காங்கிரஸ் ஆளும், ராஜஸ்தான் மற்றும் டில்லியிலும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இவற்றில், மூன்று மாநிலங்களிலாவது, பா.ஜ., வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் மட்டும், "ஆம் ஆத்மி' கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவு வந்த பிறகு, பொதுத் தேர்தல் வந்தால் மிகப்பெரிய அடி விழும் என்பதால், மாநில தேர்தல்களோடு பொதுத் தேர்தலையும், நவம்பர் மாதமே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் இருப்பதாக பேசப்படுகிறது. பொதுத் தேர்தல், முறையாக நடப்பதாக இருந்தால், அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்க வேண்டும். இந்த ஆண்டு நவம்பர் மாதமே அதை அறிவித்தால், அதற்கும், மே மாத தேர்தலுக்கும், ஆறு மாதங்களுக்கும் குறைவான கால இடைவெளியே இருக்கும் என்பதால், தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொள்ளலாம்.

காங்கிரஸ் இப்படி முடிவெடுக்க வேண்டும் என்றால், ஒரு சில விஷயங்கள் நடக்க வேண்டும். அவை என்ன? நிலக்கரி விவகாரத்தில் சி.பி.ஐ., அறிக்கையை முன்கூட்டியே படித்து, திருத்தம் செய்ததற்காக, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அஸ்வனி குமார், ஜெய்ஸ்வாலை, சுப்ரீம் கோர்ட், "துவைத்தபடி' உள்ளது. இது குறித்து, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, சோனியா காந்தி அளித்த பேட்டியில், அந்த அமைச்சர்களை விலக்க வேண்டும் என்றே குறிப்பிட்டு உள்ளார்.

அதை பயன்படுத்தி, இந்த கேவலமான சூழல், ராகுலின் லாபத்திற்காக திருப்பப்பட வேண்டும். அவர்களை அனுப்பிய சூட்டோடு, எந்நேரமும் பொறுப்பேற்க தயங்கும் ராகுலை, அடுத்த தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்குமாறு அறிவிக்க வைத்து, அவரை, தேசத்தை பாதுகாக்க வந்தவர் போல சித்தரிக்க வேண்டும். பிறகு, அவர் தேசத்திற்காக பற்பல தியாகங்களை செய்ய தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும். இந்த நாடகத்திற்கான கதையும் வசனமும் ஏற்கனவே எழுதப்பட்டு இருக்கலாம்;

வரும் வாரங்களில் அது அரங்கேறினால் பார்த்து ரசிப்போம். அல்லது, அடுத்த முறை எதிர்க்கட்சியாக வருவதற்கு கூட வாய்ப்பு இல்லை என்று தெரிந்து விட்டால், ஆட்சியில் முடிந்த வரை நீடித்து, முடிந்த வரை வருமானம் ஈட்டலாம் என்ற, எண்ணமும் காங்கிரசுக்கு உருவாகலாம்.

- கிருஷ்ணா அனந்த், காங்டாக்கில் உள்ள, மத்திய பல்கலை கழகத்தின், ஊடகவியல் துறை தலைவர்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக