திங்கள், 13 மே, 2013

நிலக்கரி சுரங்கத்திற்கான விதிகளை தளர்த்த நெருக்கடி கொடுத்த பிரதமர் அலுவலகம்

நிலக்கரி ஊழல் தொடர்பான அறிக்கையை திருத்தியது தொடர்பான
விவகாரத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் பதவியிழந்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலக வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நிலக்கரி சுரங்க திட்டங்களை விரிவுபடுத்த அனுமதிப்பதற்காக, நிலக்கரி சுரங்கம் தொடர்பான சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்துமாறு சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வனப்பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை பழங்குடியின மக்கள் முடிவு செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் , கோர்ட் உத்தரவுக்கு எதிராக, சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த பிரதமர் அலுவலகம் முயற்சி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

நிலக்கரி சுரங்கம் தொடர்பான திட்டங்களுக்காக விதிமுறைகளை தளர்த்த, பிரதமர் அலுவலகம். சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்து பல கடிதங்களை எழுதியுள்ளது தகவல் அறியும் சட்டத்தில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மக்கள் கருத்து கேட்பது தொடர்பான விதிமுறைகளை தளர்த்த பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த புலக் சாட்டர்ஜி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்கு 25 சதவீதத்துக்கு மேல் விரிவுபடுத்தினால் மட்டுமே பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என திருத்துமாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்தின் உத்தரவையடுத்து, டிசம்பர் 2012ம் ஆண்டு, விதிமுறைகளில் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகம் நெருக்கடி கொடுத்ததாக அமைச்சகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகள் கூறியுள்ளனர். தொழில்துறையினர், சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகள் அதிகமாக உள்ளதாக, என்ற ஒரு புகார் மட்டுமே கூறப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், 2,10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் கொடுத்துள்ளது. இது 2017ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்படுவதற்கான திட்டமிடப்பட்ட மின்சார அளவில், 60 ஆயிரம் மெகாவாட் அதிகம்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு என்பது, தொழில்துறையினருக்கு சாதகமான பதிலை மட்டும் அனுப்பவில்லை. மாறாக விதிகளை திருத்தியதன் மூலம், சுற்றுச்சூழல் தொடர்பாக ஜனநாயகப்படி முடிவெடுக்கும் மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக