வெள்ளி, 31 மே, 2013

பத்தாம் வகுப்பு தேர்வில் வரலாறு காணாத தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பத்தாம்
வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடத்தில் 9 பேரும், இரண்டாம் இடத்தை 52 பேரும், 3ம் இடத்தை 137 பேரும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1978-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி என்ற முறை மாற்றப்பட்டு பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. பத்தாம் வகுப்புதான் பள்ளி இறுதித் தேர்வாக உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை பொருத்தவரை மாநில பாட திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி என்று 4 கல்வி வாரியங்கள் செயல்பட்டு வந்தன. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தமிழை முதன்மை பாடமாக கொண்டு படித்தனர். அவர்கள் எல்லாருமே அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்துவந்தனர்.


மேற்கண்ட கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் இடையே வேறுபாடு ஏற்படுகிறது என்று பெற்றோர் கருதினர். அதனால் சமச்சீர் கல்வி முறை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தமிழகத்தில் 4 கல்வி வாரியங்களும் கலைக்கப்பட்டு பொதுக்கல்வி வாரியம் கொண்டு வரப்பட்டது. மேலும், சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையே தொடர்கிறது.

கடந்த 1978 முதல் கடந்த ஆண்டு வரையும், அதற்கு முன்பும் எஸ்எஸ்எல்சி அல்லது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை அதிக மாணவர்கள் பிடித்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு முதல் 3 இடங்களை 198 பேர் பிடித்துள்ளனர். அவர்களில் 9 பேர் 500க்கு 498 மதிப்பெண்களும், 52 பேர் 497 மதிப்பெண்களும், 137 பேர் 496 மதிப்பெண்களும் பெற்று சாதித்துள்ளனர்.
இது தவிர மற்ற பாடவாரியாக பார்க்கும்போது 50 பேர் தமிழ் பாடத்தில் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 13 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

கணக்கு பாடத்தில் 29,905 பேரும், அறிவியல் பாடத்தில் 38,154 பேரும் சமூக அறிவியல் 19,680 பேரும் 100க்கு 100 பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு முதல் 3 இடங்களையோ, பாட வாரியாக சென்டம் எடுத்ததோ இல்லை. தேர்ச்சி சதவீதமும் கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகளின் இந்த சாதனை கல்வியாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக