வியாழன், 16 மே, 2013

ராஜ் டிவி சகோதரர்கள் சகோதரி ராகினியின் சொத்துக்களை அபேஸ் செய்ததாக புகார்

ராஜ் டிவி சகோதரர்கள் மீது அவர்களின் சகோதரியே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தி.நகர் டாக்டர் நாயர் சாலை பகுதியில் ராஜ் டிவி நிர்வாகிகளின் சகோதரி ராகினி வசித்து வருகின்றார். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் தந்தை கே.என்.மணிசாமி பிள்ளை - தாயார் விசாலாட்சி ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். ஆனால் அவர்கள் உயிருடன் இருந்தபோது எங்கள் குடும்பத்துக்கு இலங்கையில் சொத்துகள் இருந்தது. அந்த சொத்துகளை விற்று என் தந்தையும், தாயும் சென்னையில் சொத்துகள் வாங்கினர். என்னுடன் உடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என் தந்தையின் பணத்தை கொண்டு ராஜ் வீடியோ விஷன் மற்றும் ராஜ் டிவி என்ற நிறுவனங்கள் துவங்கப்பட்டது. மேலும், எனது தாயார் பெயரில் சென்னை அண்ணா சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சிவகங்கை மாவட்டம் சிங்கமனேரி உள்ளிட்ட இடங்களிலும், தந்தை பெயரில் கருங்குளத்திலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. ராஜ் வீடியோ விஷன் மற்றும் ராஜ் டிவியின் வருமானங்களை கொண்டு சகோதரர்கள் அவர்கள் பெயரில் நிறைய சொத்துகளை வாங்கி உள்ளனர். நான் குடியிருக்கும் இடத்திற்கான வாடகை ராஜ் டிவியில் இருந்துதான் தரப்பட்டு வருகிறது. தற்போது சகோதரர்கள் ராஜேந்திரன், ராஜரத்தினம், ரவிச்சந்திரன், ரகுநாதன் ஆகியோர் வாடகை தராமல் நிறுத்தி வைத்துள்ளனர். சென்னையில், போயஸ் ரோடு 3வது தெருவில் உள்ள என் தாயார் பெயரில் இருக்கும் வீட்டிற்குள் நுழைய விடாமல் தகராறு செய்து வருகின்றனர். வீட்டிற்குள் வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். மேலும், போலி ஆவணங்களை தயார் செய்து என் பாக சொத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். எனது சகோதரர்கள் சமுகத்தில் உயர்ந்த செல்வாக்கும், பண பலமும் உள்ளவர்கள். எனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம். எனவே, எனது உயிருக்கும், உடைமைக்கும், எனது தந்தை- தாயார் சொத்தில் இருந்து என்னை ஏமாற்றி, என்னை மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த எனது சகோதரர்கள் 4 பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து காப்பாற்ற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு குறித்து உரிய விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக