வியாழன், 30 மே, 2013

டப்பிங் சீரியல்களால் தமிழ் கலாசாரம் பாதிக்க படுகிறதாம் ! ராதிகா சித்தி ரொம்பவும் கவலை படுகிறார்

;ராதிகாவின் தொழிலாளி மற்றும் தமிழ் கலாச்சாரக் கவலை எனக்கு எங்காசு முக்கியம் என்பது உண்மையாக இருக்கும் போது சன் டிவிக்கு டேப் கொடுக்க முடியவில்லை என்பது தவிப்பாக இருக்கும் போது 10,000 தொழிலாளிகள் பரிதவிக்கிறார்கள் என்று ஏன் நடிக்க வேண்டும்? "
ராதிகாவின் தொழிலாளி மற்றும் தமிழ் கலாச்சாரக் கவலை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் என்று அழைக்கப்படும் பெப்சியில் அங்கம் வகிக்கும் ஓட்டுநர்கள் சங்கம் இரு பிரிவாக செயல்பட்டு வந்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் போட்டி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பெப்சி நிர்வாகிகள் சிலரைத் தாக்கியதைக் கண்டித்து பெப்சியின் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் சினிமா மற்றும் டிவி தொடர்களின் படப்படிப்பு நின்று போனது. தற்போது வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. வேலை நிறுத்தத்தின் போது 40-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் மற்றும் 35-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாம். ஒரு தொழிற்சங்கம் தனது பாதுகாப்பு கருதி செய்யும் வேலை நிறுத்தம் மற்ற துறைகளில் நடந்தால் அது முதலாளிகளுக்கு பாதிப்பு என்று கருதப்படுவது போலவே இங்கும் கருதுகிறார்கள்.

அதன்படி தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அல்லது முதலாளிகள், நடிகர்கள், இயக்குநர்கள் கூடி சில பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர். அவற்றை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வேலை நிறுத்தம் செய்ததால் 38 தொடர்களின் படப்படிப்பு நின்று போய் 10,000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாம். சில பல சீரியல்களை எடுத்து பில்லியனரான அக்கா தொழிலாளிகளின் நலன் குறித்து பேசுகிறாரே என்று பார்த்தால் பின்னாடியே உண்மை முந்திக் கொண்டு வெளியே வருகிறது.
திடீரென்று படப்பிடிப்பு நின்று போனதால் தொலைக்காட்சிகளுக்கு உரிய நேரத்தில் ஒளிபரப்ப வேண்டிய தொடர்களுக்கான டேப்புக்களை கொடுக்க முடியவில்லையாம். ஏற்கனவே எந்தப் பிரச்சினையையும் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்த்துக் கொள்ளவேண்டும், வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்று சின்னத்திரை முதலாளிகள் பெப்சியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம். அதை எப்படி மீறலாம் என்று ஆவேசமாக கேட்கிறார் ராதிகா.
ஆக தொழிற்சங்கம் என்பது முதலாளிகளின் பாதுகாப்புக்காத்தானே ஒழிய தொழிலாளிகளின் பாதுகாப்புக்கு இல்லை என்று பச்சையாக பேசுகிறார் சித்தி. எனக்கு எங்காசு முக்கியம் என்பது உண்மையாக இருக்கும் போது சன் டிவிக்கு டேப் கொடுக்க முடியவில்லை என்பது தவிப்பாக இருக்கும் போது 10,000 தொழிலாளிகள் பரிதவிக்கிறார்கள் என்று ஏன் நடிக்க வேண்டும்? இவர்களது சீரியல்களை சில நாட்கள் தமிழ் மக்கள் பார்க்கவில்லை என்றால் யாருக்கும் நட்டமில்லை. தொடர்ந்து பார்த்தால்தான் பிரச்சினை.
அடுத்ததாக அக்கா சொல்வதுதான் உச்சகட்ட கொடுமை. பெப்சியில் இருக்கும் வரைதானே இந்தப் பிரச்சினை என்று அதிலிருந்து விலகி விட்டு தொழிலாளிகளின் ‘பாதுகாப்பிற்காக’ “தமிழ் டெலிவிஷன் பெடரேஷன்” என்று ஒரு புதுச் சங்கம் ஆரம்பத்திருக்கிறார்களாம். மற்ற தென்னிந்திய மாநிலங்களில் தொலைக்காட்சி தொழிலாளருக்கு தனி அமைப்பு இருப்பது போல இங்கும் தொடங்கியுள்ளார்களாம். இந்த புதிய அமைப்பின் பெயரிலேயே தொழிலாளி இல்லை என்பதால் இது என்ன இலட்சணத்தில் செயல்படும் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.
பெப்சியில் இருக்கும் பட்சத்தில் ஒரு தொழிலாளி சினிமா, டிவி இரண்டிலும் செயல்படலாம். பிரச்சினை வந்தாலும் ஒரு பெரிய சங்கம் என்றளவிலாவது ஒரு பாதுகாப்பு உள்ளது. தற்போது அதை உடைத்து தொழிலாளிகளை பிரிக்கும் வேலையை ராதிகா தலைமையிலான முதலாளிகள் செய்கிறார்கள். பிறகு இந்த புதுச் சங்கத்தில் வேலை நிறுத்தம் என்பதை கனவிலும் நினைக்க முடியாது. தொழிலாளிகள் இந்த சதியை புரிந்து கொண்டு முறியடிக்க வேண்டும்.
அடுத்ததாக ராதிகா ஒரு முக்கிய மேட்டருக்கு வருகிறார்.
” இந்தி உட்பட பல மொழிகளில் இருந்து உரிமை வாங்கி டப்பிங் செய்து தமிழில் ஒளிபரப்புவதால், தமிழ் கலைஞர்களுக்கும் மற்றும் நேரடி டி.வி தொடர் தயாரிப்பாளர்களுக்கும் தொழில் முடக்கம் ஏற்படுகிறது. தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் இடம் பெறுவதால், கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. இதை மனதில் கொண்டு, டப்பிங் தொடர்கள் ஒளிபரப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என்று, சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று கோரிக்கை வைக்கிறார்.
இங்கேயும் கிளிசரினை வைத்து ஏமாற்றும் ராதிகாவின் போலிக் கவலையை புரிந்து கொள்ளலாம். டப்பிங் சீரியல்கள் வருகையினால் இவரைப் போன்ற முதலாளிகளின் கல்லா குறைகிறது. இவர்களது வருமானம் குறைவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் இந்தி சீரியல்கள் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானவை என்று கொள்கை பேசுவது… இதெல்லாம் செய்து ஏமாற்றிய திமுகவே இப்போது இப்படி பேசுவதில்லை. பேசினாலும் மக்கள் ஏமாறுவதில்லை.
சரி ராடன் உள்ளிட்ட தமிழ் முதலாளிகள் தயாரிக்கும் சீரியல்கள் என்ன தமிழ்க் கலாச்சாரத்தை போற்றுகின்றனவா? ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், முதலாளிகளுக்கு அடிமைத்தனம், கள்ள உறவு, சதி, இரண்டு மூன்று மனைவி கதைகள், மாமியார் மருமகள் சண்டை என்று பெண்களை இழிவுபடுத்துவது, குற்றச் செயல்கள் செய்து குடும்பத்தை ஒழிப்பது அல்லது சம்பாதிப்பது, பேய் பில்லி சூன்யம் என்று ஏமாற்றுவது …. இவைதானே தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் காட்டும் கலாச்சாரம். இதுதான் தமிழ்க் கலாச்சாரமென்றால் அதை ஒழிப்பதுதான் நமது வேலை.
ராதிகா போன்றவர்களின் சீரியல்கள் என்ன இலட்சணத்தில் வருகின்றனவோ அவைதான் இந்தி மொழி மாற்ற சீரியல்களிலும் வருகின்றன. ராதிகா தொடர்களுக்கும் சிந்து பைரவி, மண்வாசனை போன்ற தொடர்களுக்கும் என்ன வேறுபாடு? மேலும் ராதிகாவின் சீரியல்களே மொழிமாற்றம் செய்யப்பட்டு ஏனைய தென்னிந்திய மொழி சானல்களில் சன் டிவி காட்டுகிறதே அது மட்டும் யோக்கியமா? இதனால் அந்தந்த மொழி கலைஞர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? தனக்கென்றால் ரத்தம் மற்றவனுக்கென்றால் தக்காளி சட்னியா? vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக