புதன், 8 மே, 2013

தமிழக அரசு அதிரடி! குட்கா பான்பராகிற்கு தடை ! Well Done

சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110;ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:
டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற பல நோய்களை கண்டறியும் பரிசோதனை வசதிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் அரசு ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பல்வேறு வகையான வைரஸ் நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை வசதி,  சென்னையில் உள்ள அரசு கிங் இன்ஸ்டிடியூட்டில் மட்டுமே உள்ளது. இதனால், அசாதாரண வைரஸ்களால் ஏற்படும் நோயை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நுண்ணணு தொற்று நோய் ஆய்வகம் துவக்கப்படும். இத்திட்டம், படிப்படியாக அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.


இந்திய மருத்துவ துறையில் போலி பதிவுச் சான்றிதழ் நிலவுவதை களையும் வகையில், ரூ.15 லட்சம் செலவில், தமிழக அரசின் சித்த மருத்துவ கவுன்சில், ஓமியோபதி கவுன்சில், இந்திய மருத்துவ பதிவு கவுன்சில்களில் தகவல் தொழில்நுட்பங்களை கொண்டு பதிவு சான்றிதழ்கள் வழங்கும் வசதி அமைக்கப்படும். சுகாதாரத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்காக சுகாதார பயிற்சி மற்றும் மருத்துவமனை நிர்வாக பயிற்சி நிலையம் ஒன்று ரூ.10 கோடி செலவில் சென்னையில் அமைக்கப்படும். கடலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக ரூ.18 கோடியே 51 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.


தொற்றா வகை நோய்த் தடுப்பு பணிகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2013&14ம் ஆண்டு, தொற்றா வகை நோய்த் தடுப்பு சிறப்பு ஆண்டாக அனுசரிக்கப்படும். அடையாறு புற்று நோய் மையத்துக்கு வழங்கப்படும் மானியம் இந்த ஆண்டு 2.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்றுநோய்களை தடுக்கும் வகையில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக