திங்கள், 20 மே, 2013

தமிழக சுற்றுலா வருமானத்திற்கு குழிபறித்த riots! திருச்சி மாவட்டம் கடும்பாதிப்பு

"அச்சுறுத்தும்' அரசியல் பிரச்னைகளால், தமிழகத்துக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், இலங்கை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்து விட்டது. இதை ஈடு செய்ய வேண்டிய, "பொறுப்பு'உடைய மத்திய, மாநில அரசுகள் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை நீடிக்கிறது.இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், தஞ்சை பெரிய கோவில், யூனியன் பிரதேசமான காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உள்ளிட்ட நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம், மதுரை கோவில்களில் தரிசனம் செய்வது இலங்கை தமிழர்களின் வழக்கம்.இலங்கையை சேர்ந்த சிங்களர்கள், தஞ்சை பூண்டி மாதா கோவில், நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களுக்கு செல்வதுடன், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஒன்பது நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாவாக வருகின்றனர்.இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் தமிழக சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம்.


வருவதில்லை:கடந்தாண்டு வரை, ஒரு நாளைக்கு, 50 பேர் என்ற எண்ணிக்கையில் திருச்சி விமான நிலையத்துக்கு சிங்களர் வருவது உண்டு. இன்று, ஒருவர் கூட வருவதில்லை. "தமிழகத்தில் தாங்கள் தாக்கப்படலாம்' என்ற அச்சத்தில், இலங்கை தமிழர்களை தவிர, மற்றவர்கள் அச்சப்படுவதே, எண்ணிக்கை அறவே குறைவதற்கு காரணம். இலங்கை தமிழர்கள் கூட, தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டே, தமிழகத்துக்கு வரவேண்டிய அவல நிலை நீடிக்கிறது.

வழக்கமாக இலங்கையைச் சேர்ந்தவர்கள், திருச்சி மண்டலத்தில், சுற்றுலா செல்லும் பாதையில் பயணித்து, விசாரித்த போது, இதைக் கண்டறிய முடிந்தது.திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம் கோவில்களில், உள்ளூர், வெளி மாவட்ட பயணிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

ஆயிரமாம் ஆண்டு விழாவுக்கு பிறகு, தஞ்சை பெரிய கோவிலில் வெளி மாவட்ட, மாநில மற்றும் ஐரோப்பியர்களின் வருகை எண்ணிக்கை, இருமடங்காக உயர்ந்திருக்கிறது. இங்கெல்லாம் இலங்கைவாசிகளை காணமுடியவில்லை.கும்பகோணம் அய்யாவாடி பிரத்யங்கரா கோவிலில், அமாவாசைதோறும் இரவு நடக்கும் மிளகாய் வற்றல் ஹோமத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும்போது, கணிசமான அளவு, இலங்கை நாட்டினரும் இருப்பர்.

தற்போது அங்கு ஒருவர் கூட செல்வதில்லை. நவக்கிரக ஸ்தலங்களில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஸ்தலம் முதன்மையானது. இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி, ஏராளமான சிங்களர்களும் இங்கு வந்து பரிகாரம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவர். தற்போது அவர்கள் தலை காட்டுவது இல்லை.

திருக்கடையூர்:திருக்கடையூர் அபிராமியம்மன் கோவிலில், 60 மற்றும் 80வது வயதில், முறையே, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், செய்து கொள்வது, ஆயுளை அதிகரிக்கும் என்பதால், தினந்தோறும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. தமிழகம், குறிப்பாக சிங்களர்களுக்கும், இந்த நம்பிக்கை உள்ள நிலையில், இங்கு வந்தால், "தர்ம அடி' நிச்சயம் என்பதால், அவர்கள் யாரும் இந்த பக்கம் எட்டி பார்ப்பதே இல்லை.

நாகூர் தர்கா:முஸ்லிம்களின் தர்கா என்றாலும், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்ற மத மாச்சரியங்களை தாண்டி, அனைத்துத் தரப்பினரும் நாகூர் தர்காவுக்கு விரும்பிச் செல்வர். அங்கு, கோடை விடுமுறையில் கணிசமான அளவு கூட்டம் இருந்தாலும், இலங்கைவாசிகள் யாரும் கண்ணில் தென்படவில்லை. அங்குள்ள ஓட்டல் உரிமையாளர்களும் இதை உறுதிபடுத்தினர்.

வேளாங்கண்ணி:பல லட்சம் பக்தர்கள் திரள்வது வேளாங்கண்ணி மாதா கோவில். குறிப்பாக, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, புனித வெள்ளி போன்ற கிறிஸ்தவ விழாக்களில் கூட்டம் அலைமோதும். ஆண்டுக்கு ஆண்டு, இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.இலங்கையை சேர்ந்த சிங்களர்கள், கிறிஸ்தவ மதத்தை சார்ந்து, அதிலும் மாதா வழிபாட்டில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களது ஆன்மிக பயணத் திட்டத்தில், முதலிடத்தில் வேளாங்கண்ணி இருக்கும். கடந்தாண்டு நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, சிங்களர்கள் மட்டுமின்றி, இலங்கை தமிழர்களும், இங்கு வரவே அச்சப்படுகின்றனர்.

பூண்டி மாதா கோவில்:
தமிழகத்தில் சிங்களர்களின் மீதான தாக்குதலுக்கு ஆரம்பப்புள்ளி, தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பூண்டி மாதா கோவிலில் தான். அதன் பிறகே, ஆங்காங்கே இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர்.திருநள்ளாறு கோவில் அர்ச்சகர் சுரேஷ் குருக்கள் கூறிய போது, ""இங்கு வந்து தங்கள் முன்னோருக்கு, தர்ப்பணம் செய்ய விரும்பும் இலங்கை தமிழர்களையோ, சிங்களர்களையோ தடுத்து, தாக்குவது பாவம். எல்லா நாட்டிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கின்றனர். பரிகார ஸ்தலத்துக்கு வருபவர்களுக்கு, உரிய பாதுகாப்பு அளிப்பது, அரசின் கடமை,'' என்றார்.

வர்த்தகத்திலும் பாதிப்பு:இலங்கை பயணிகள் எண்ணிக்கை குறித்து, விமான சேவைகள் குறித்த ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும், திருச்சியை சேர்ந்த உபயதுல்லா கூறியதாவது:கடந்த, 2010, 2011, 2012ம் ஆண்டுகளில், "ஏர்-லங்கா' விமானம் மூலம், கொழும்பில்இருந்து, திருச்சிக்கு, சராசரியாக, 1 லட்சத்து, 82 ஆயிரத்து, 500 பயணிகள் வந்துள்ளனர். இதே ஆண்டுகளில், "மிகின் லங்கா' விமானம் மூலம், 82 ஆயிரத்து, 500 பயணிகள் வந்துள்ளனர்.

மொத்த பயணிகள் எண்ணிக்கை, 2 லட்சத்து, 65 ஆயிரம். நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரை, "ஏர்-லங்கா' விமானத்தில், 60 ஆயிரம் பேரும், "மிகின்லங்கா' விமானத்தில், 20 ஆயிரம் பேரும் பயணித்துள்ளனர்.மாதத்துக்கு சராசரியாக, 20 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, தமிழகத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களால், நடப்பாண்டு, பயணிகள் எண்ணிக்கை, 2 லட்சத்தை தொடுவதே சிரமம்."ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், சரக்குகளை கையாளுவதில்லை என்பதை, தன் கொள்கை முடிவாக வைத்து உள்ளது.

"ஏர்-லங்கா' விமானம் மட்டுமே சரக்கு சேவையிலும் கவனம் செலுத்துகிறது. இதனால், திருச்சி மட்டுமல்லாது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பெரிதும் பலனடைந்து வந்தனர்.பயணிகள் மட்டும், "மிகின் லங்கா'விலும், பயணிகள் மற்றும் சரக்குகள் "ஏர்-லங்கா' விமானத்திலும் சென்று கொண்டிருந்தன. தற்போது, "மிகின் லங்கா' சேவை நிறுத்தப்பட்டிருப்பதால், பயணிகள், பயணிகளின் உடமைகள் எடையை பொறுத்தே, "ஏர்-லங்கா' சரக்குகளை ஏற்றும்.
சரக்குகளை ஏற்ற தாமதமாகும் பட்சத்தில், திருச்சி விமான நிலையத்தில், எளிதில் அழுகக் கூடிய உணவுப் பொருட்களை பதப்படுத்தும், குளிர்சாதன வசதி இல்லாததால், பொருட்கள் வீணாகி, வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.இதுவும், வர்த்தக ரீதியாக நமக்கு பாதிப்பு தான்.இவ்வாறு, அவர் கூறினார்.

வருகை குறைவு!:தஞ்சை பெரிய கோவிலில், 36 ஆண்டாக சுற்றுலா பயணிகளின் வழிகாட்டியாக (கைடு) இருக்கும் ராஜா கூறியதாவது:பெரிய கோவிலுக்கு, அவ்வப்போது ஒன்றிரண்டு இலங்கை தமிழர்கள் மட்டுமே வருகின்றனர். அவர்களும் தங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டே வருகின்றனர். சிங்களர்களும் மனிதர்கள் தான். மனிதன், சக மனிதனை தாக்குவது முட்டாள்தனமானது. இதற்கு, அரசியல் ரீதியாக தீர்வு காண்பது மட்டுமே சரியானது. இலங்கையிலிருந்து வரும் ஒவ்வொருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பதால், இங்கே வந்து பிரச்னையில் சிக்காமல் இருக்க, யாரும் வராமல் இருப்பதே நல்லது.இவ்வாறு, அவர் கூறினார்.

புது பிரச்னை!:
இலங்கையிலிருந்து வரும் பயணிகளை, தமிழ் அமைப்புகள் தாக்குவதால், இலங்கை பயணிகள் எண்ணிக்கை, முற்றிலுமாக குறைந்துள்ளது ஒருபுறம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாகவே அனைத்து சுற்றுலா, ஆன்மிக ஸ்தலங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கிறது.

வறண்ட காவிரி, பருவ மழை பொய்த்ததன் காரணமாக, விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. கையில் தம்படி காசு இல்லாத நிலையில், அவர்கள் கூட்டாஞ்சோறு கட்டிக்கொண்டு எந்த ஊருக்கும் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.இதைத் தவிர, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைதை தொடர்ந்து, பஸ் மீது தாக்குதல், பஸ் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்களாலும், சுற்றுலா மற்றும் ஆன்மிக ஸ்தலங்களில் கூட்டம் பெருமளவு குறைந்துள்ளது. வியாபாரிகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் குழு - dinamalar ,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக